ஞாயிறு, 4 நவம்பர், 2012

மழை நீரை ச் சேமிப்போம்!'

சொல்கிறார்கள்


1. "இதிலும்அன்னிய முதலீடா வேண்டாமே!'

உள்நாட்டு மாடுகளிலும், 12 லிட்டர் வரை பால் கறக்கலாம் என்று கூறும், நடராஜன்: என் தாத்தா காலத்தில்இருந்தே, விவசாயம் தான் பார்க்கிறோம். சிறு வயது முதலே, மாடுகள் மேல் எனக்கு பிரியம் அதிகம். இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால் என, பல வகைகள் உள்ளன.
ஆனால், ஜெர்சி, பிரிசயன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத் தான், சமீப காலமாக, விவசாயிகள் விரும்பி வளர்க்கின்றனர். நாட்டு மாடுகள் குறைந்த அளவு பால் தருவதால், பற்றாக்குறையை தடுக்க, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட, வெளிநாட்டுப் பசுக்கள் மூலம், பால் உற்பத்தி செய்ய அரசே ஊக்குவிக்கிறது.

ஜெர்சி இன மாடுகளில், வேர்வை நாளங்களும், திமில்களும் இல்லாததால், அதன் வெப்பம், பால், சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. இதன் சாணம் மற்றும் சிறு நீரால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நம் நாட்டு மாடுகளில், வேர்வை நாளமும், திமிலும் உள்ளதுடன், சிறு நீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.தமிழகத்தில், காங்கேய மாடுகள், 80 சதவீதம் வரை அழிந்து விட்டன. இதை அழிவிலிருந்து காக்க, நாட்டு மாடுகள் மூலம், அதிக பால் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் என, தோன்றியது.அதனால், தமிழகத்தில் எங்கு மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும், தவறாமல் பங்கேற்று, நல்ல காங்கேய மாடு வாங்கி வருவேன்.

மாட்டு வர்க்கத்தில், பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவு பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன், இனப் பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம், அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்.இந்திய மாடுகளுக்கு, 20 வயது வரை ஆயுள் உண்டு. மாடுகள் வாங்கும் போது, தோல் மென்மையானதாகவும், எலும்பூட்டம் அதிகமுள்ளதாகவும், மடித்தோல் இறக்கமானதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.நான் மாடுகளுக்கு செயற்கைத் தீவனம் கொடுப்பதில்லை. மாவுச்சத்துள்ள பொருட்களை மாடுகளுக்கு உணவாக கொடுத்தால், பால் அதிகமாக சுரக்கும். நாட்டு மாடுகள் அதிக பால் கொடுக்க, தீவனமும் ஒரு காரணம்.
2. "மழை நீரை ச் சேமிப்போம்!'

மழை நீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வரதராஜன்:என் சொந்த ஊர், அரியலூர் மாவட்டம் அருகே, கீழ்ப்பழுவூர். படித்து முடித்து, பொதுப் பணித் துறையில், பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். கிராமங்களில், கிணற்றைத் தேர்வு செய்து, அதன் நீர் மட்டத்தையும், தரத்தையும் பரிசோதிப்போம்.நீர் மட்டமும், தரமும் மோசமாகிக் கொண்டு இருந்தது. அதைச் சரி செய்வதற்குப் பதில், கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவதுடன், எங்கள் வேலை முடிந்து விடும்.ஆனால், மனம் கேட்காமல், அந்தந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர்களிடம், "உங்க ஊர் தண்ணீர் சரியில்லை. அதைப் பயன்படுத்த வேண்டாம்' என்பேன். கிராமங்களில், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினேன்.
நான் இப்படி செயல்படுவது, அலுவ லக மேலதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை.இதனால், வேலையை விட்டு விட்டு, முழு நேரமாக மழை நீர் சேகரிக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இறங்கி விட்டேன்.மழை நீரில் மினரல்கள் தவிர, கூடுதலாக நிலத்தடி நீரில் இல்லாத, பி 12 வைட்டமினும், ஓசோனும் உள்ளது. மழை நீரை நம் அன்றாடப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். இதற்குப் பெரிய செலவும் இல்லை; வீட்டில் எவ்வித மாற்றத்தையும் செய்ய வேண்டாம்.மழை பெய்யும் போது, அந்த நீர், குழாய்களின் மூலம், நாம் அமைத்துள்ள தொட்டியில் சேகரிக்க வேண்டும்.

தொட்டியின் அடியில், கரி, மணல், சிறு கருங்கல், ஜல்லி ஆகியவை, வடிகட்டியாகச் செயல்படும். வடிகட்டி வரும் நீரை, வீட்டின் கீழே ஒரு டேங்கில் சேகரித்து வைத்து, பயன்படுத்தலாம்.இப்படி தொட்டியில் சேகரிக்கப்படும் நீர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. இந்த நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது இல்லை; அப்படியே பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடிகட்டியை மாற்றுவதைத் தவிர, வேறு எந்த பராமரிப்புச் செலவும் இல்லை; மின் கட்டணமும் மிச்சமாகும்.தொட்டியில் சேரும் தண்ணீரில், 10 சதவீதத்தை தான் நாம் பயன்படுத்துவோம். மீதம் பூமிக்குள் தான் போகும்.
சில ஆயிரங்கள் செலவழித்து, மழை நீரைச் சேகரித்தால், அடுத்த தலைமுறைக்கு, ஆரோக்கியமான பூமியை விட்டுச் சென்ற மனத் திருப்தி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக