புதன், 3 அக்டோபர், 2012

அரசு செய்ய வேண்டியதை அறக்கட்டளை செய்கிறது: கு.சின்னப்பபாரதி

அரசு செய்ய வேண்டியதை அறக்கட்டளை செய்கிறது: கு.சின்னப்பபாரதி

தமிழ் மொழிக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் பணியாற்றும் படைப்பாளிகளை கௌரவிக்க வேண்டிய அரசின் பணியை கு.சி.பா. அறக்கட்டளை செய்து வருகிறது என்று எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி கூறினார்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கு.சி.பா. அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் கு.சின்னப்பபாரதி பேசியது:
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் எந்த விருதையும் ஏற்க மாட்டேன் என்ற கொள்கையுடையவர். இருப்பினும், 2012ஆம் ஆண்டுக்கான விருதுக்கு அவரது நூலை ஓர் எழுத்தாளர் அனுப்பியிருந்தார். தேர்வுக் குழுவினர் அந்த நூலைத் தெரிவு செய்தனர். விருது அறிவிப்புக்காக ஆசிரியரைத் தொடர்பு கொண்ட போது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ.ராசுவுக்குத்தான் அதை வழங்க வேண்டும் என்றார்.
இருப்பினும், தேர்வுக் குழுவின் முடிவை மாற்ற முடியாது என்று வற்புறுத்திக் கூறியதையடுத்தே அவர் ஒப்புக் கொண்டார். பரிசையும், விருதையும் விரும்பாதவர்கள் உலகில் இன்றும் உள்ளனர் என்பதற்கு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஓர் உதாரணம்.
இலக்கியவாதிகளுக்கு விருதுகள், பரிசுகள் அளிக்கப்படுவது அவர்கள் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களது ஆர்வத்தைத் தூண்டவும், ஊக்கப்படுத்தவும்தான்.
தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கு பரிசளிக்க இங்கு ஏராளமானவர்கள் உள்ளனர். ஆனால், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கு பரிசளிக்க யாரும் இல்லை.
அரசு நிறுவனம் செய்ய வேண்டிய இந்தக் கடமையை எளிய நிறுவனமான கு.சி.பா. அறக்கட்டளை செய்கிறது. நமது கோரிக்கைகளை மேலும் வலிமையாக எடுத்துச் செல்லவும், அவை சாத்தியப்படவும் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் தங்களால் இயன்றவரை இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். அது அறக்கட்டளையின் வைப்பு நிதியில் வைக்கப்பட்டு விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. முத்துச் செழியன்: எழுத்து என்பது பணம், புகழ் சேர்ப்பதற்காக இருக்கக் கூடாது. சமூக அவலங்களுக்கு எதிராகவும், பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். வறுமை, மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு வலு சேர்க்க வேண்டும்.
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் கலைக் களஞ்சியம் தொகுப்பை வெளியிடுவதில் தடை ஏற்பட்டது என்று உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இனி எந்த தவறும் நிகழாத வகையில் தமிழை வளர்க்கும் பணியில் பல்கலைக்கழகங்களும் முனைப்புடன் பணியாற்றும். கலைக் களஞ்சியம் தொகுப்பு தொடர்ந்து வெளியிடப்படும் என்றார் அவர்.
ஜெம் கிரானைட்ஸ் அதிபர் இரா.வீரமணி: இந்தியா வளர்ச்சி பெறாத நாடு என யாரும் கூற முடியாது. ஆங்கிலேயர் காலத்திலேயே இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாகத்தான் இருந்தது. இன்றும் வளர்ச்சி பெற்றுத்தான் உள்ளது. விஞ்ஞானம், பொருளாதாரம், சிந்தனை ஆகியவற்றில் தன்னிறைவு பெற்ற நாடே வளர்ச்சி பெற்ற நாடாகும்.
வணிக நோக்கில் கடல் கடந்து சென்று தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றியது மறுக்க முடியாது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கௌரவிக்கும் வகையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுவது பாராட்டுக் குரியது என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக