ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இசையால் வழி நடத்தும் பார்வையற்ற சின்னபாபு

இசையால் வழி நடத்தும் பார்வையற்ற சின்னபாபு
 
ஒவ்வொரு நாளும் வித, விதமாய் நடனங்கள்

ஒவ்வொரு நடனத்திற்கும் வித, விதமாய் உடைகள்

ஒவ்வொரு உடையிலும் வித, விதமான அலங்காரங்கள்
இந்த அலங்காரங்களுடன் நேர்த்தியாய் பக்தர்கள் நடனமாடி வரும் அழகே தனி

இந்த அழகிய நடனத்தை அற்புதமான தனது மேளத்தால் இசைத்தபடி வழிநடத்திச் செல்பவர் பார்வையற்ற ஒருவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா
இந்த ஆச்சரியத்தை திருமலை திருப்பதியில் பார்த்து அசந்துவிட்டேன்.

பிரம்மோற்சவ விழாவின் போது நாள் தோறும்வீதி உலாவரும் பெருமாளைக் காண நான்கு மாடவீதிகளிலும் காத்திருக்கும் பக்தர்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்தில் பல்வேறு மாநில நடன கலைஞர்கள் நடனமாடியபடி வருவார்கள்
பக்தி சேவையாக செய்தாலும் இந்த நடனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் விதத்தில் அழகாக, அற்புதமாக அமைந்திருக்கும்.

இவர்களை நடனமாட வைப்பதற்கு ஒவ்வொரு குழுவிலும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் ஒருவர் இடம் பெறுவார்
அப்படி வந்த ஒரு குழுவிற்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது. அந்த குழு நடனத்தை சிறப்பாக இசைத்தபடி வழி நடத்திச் சென்றவர் ஒரு பார்வையற்றவர் என்பதுதான் ஆச்சர்யம்.

ஆந்திராவின் ஒரு மூலையில் உள்ள நாகரா என்ற கிராமத்தில் பிறந்த சின்னபாபுவிற்கு பிறவியிலே பார்வை கிடையாது. ஆனால் தேர்ந்த இசை ஞானம் உண்டு. படிப்பதற்கு பதிலாக கிராமங்களில் பாடிக்கொண்டு இருந்தார், அதிலும் சோதனையாக இவரது குரல் பாதிக்கப்பட்டது.
சின்ன பாபு சோர்ந்து போய்விடவில்லை, இசை வடிவத்தை குரலால்தான் தரவேண்டுமா ?என்ன என்று முடிவு எடுத்து மேளத்தில் தனது திறமையைக் காட்டினார்

அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த கீதா சங்கீதா பிரசார் மண்டலி அமைப்பின் செயலாளர் ராஜேஸ்வரிக்கு இவரது திறமை தெரியவர உடனே இவரைப்பார்த்து இசையைக் கேட்டு, தனது குழுவிற்காக இசைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் இவர் தன் திறமையை சீராக்கிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் உதவி செய்தார்.
ஆயிற்று இப்போது ஐம்பது வயதைத் தொட்டுவிட்ட சின்னபாபுவின் இசைப் பயணத்திற்கு மட்டுமே நாற்பது வயதாகிறது.ஆந்திராவின் மூலை முடுக்கில் உள்ள கோயில்களின் அனைத்து விழாக்களிலும் கலந்துகொண்டு அற்புதமான இசையை வழங்கிவருகிறார்.

திருப்பதி திருமலை சீனிவாசப் பெருமாள் என்றால் இன்னும் கொஞ்சம் இஷ்டம். ஒவ்வொரு பிரம்மோற்சவ விழாவினையும் தவறவிடாமல் ஒரு பெரிய குழுவினருடன் வந்துவிடுவார். சின்ன பாபு வந்தாச்சா... என்று கேட்டு அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி கொடுப்பதும் நடைபெறும்.
இவரது தோள்கள்தான் இவரது உணர்வுகள். கூடவே இருக்கும் நண்பர் தோளில் தட்டும் ஒவ்வொரு தட்டின் அர்த்த்தையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவரது வாத்தியத்தில் இசை நடனமாடும். மொத்தத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.தனது இசைக்கு கிடைக்கும் வரவேற்பை, பாராட்டை, கைதட்டலை எல்லாம் தலைவணங்கி ஏற்கும் சின்னபாபு நிகழ்ச்சியின் நிறைவாக பெருமாள் இருக்கும் திசை நோக்கி பெரிதாக கும்பிடு போடுகிறார்.

பல பேருக்கு தெரியாது இவர் ஒரு பார்வையற்றவர் என்று, தெரிந்த பிறகு," நெருங்கிவந்து, பிரமாதம் சின்னபாபு ரொம்ப நல்லாயிருக்கு உங்க இசை,'' என்றதும், நன்றி தெரிவித்து காற்றில் கையை நீட்டுகிறார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக