செவ்வாய், 2 அக்டோபர், 2012

செஞ்சி அருகே பழங்காலக் கற்படுக்கைகள், ஓவியங்கள் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே பழங்காலக் கற்படுக்கைகள், ஓவியங்கள் கண்டுபிடிப்பு

First Published : 01 October 2012 07:04 AM IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மலைக்குன்றுகளில் சமணத் துறவிகள் பயன்படுத்திய 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் மற்றும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கருங்கற்கள் பாறை ஓவியங்கள் உள்ளதை தொல்லியல் முதுநிலை களப்பணியாளர் விழுப்புரம் சி.வீரராகவன் கண்டுபிடித்துள்ளார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் சமணம் பரவிய காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலமாகும். அப்போது சமணத் துறவிகள் வாழ்ந்து வந்த இயற்கை குகைத்தளங்களில் கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டு வந்துள்ளது. இவற்றைத் தமிழக மக்கள் பஞ்சாணம் படுக்கை, பஞ்சப்பாண்டவர் படுக்கை, மாண்டவர் படுக்கை என்றும் அழைத்து வருகின்றனர்.
 இவை தமிழகத்தில் மாங்குளம், அரிட்டாப்பட்டி, கொங்கர், புளியங்குளம், கீழ்வளவு, செட்டிபிடவு, கழுகுமலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் அமைந்துள்ளன.
 விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டம் ஊரணித்தாங்கல், தொட்டி, தொண்டூர், நெகனூர்பட்டி, திருநாதர்குன்று, பறையன்பட்டு, தளவானூர், அவலூர்பேட்டை மற்றும் திருக்கோயிலூர் அருகே ஜம்பை, சந்தப்பேட்டை மற்றும் மேல்கூடலூர், ÷திருநறுங்கொண்டை, சோழவாண்டிபுரம், ஒட்டந்தூர், வெள்ளிமலை, சிறுவாக்கூர், கஞ்சியூர், வடியங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள மலைக் குன்றுகளில் சமணத் துறவிகளின் கற்படுகைகள் அமைந்துள்ளன.
 தற்போது செஞ்சி வட்டம் கோணை ஊராட்சிக்கு உள்பட்ட வடகால் கிராமத்தில் வடதிசையில் பல சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள ஆயிரம் அடி கொண்ட மலைக்குன்றின் கீழே ஆய்வு செய்த போது, தலையணையுடன் கூடிய 2 கற்படுக்கைகளும், தலையணையற்ற 2 கற்படுக்கைகளும் வடக்கு தெற்காக அமைந்துள்ளது தெரிய வந்தது.
 தியானம் செய்வதற்காக வெட்டப்பட்டுள்ள இருக்கைகளில் 3 குகைதளப் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும், மற்றொன்று சரிவான பாறையிலும் வெட்டப்பட்டுள்ளன. நான்காவது இருக்கைக்கு மேல் முதுகுப் பகுதி, தலைப்பகுதிகள் சற்றே பாறையோடு பொருந்தும் அளவுக்கு குழைவாக வெட்டப்பட்டிருப்பது வேறு எங்கும் காண முடியாத புதியவனவாக உள்ளது.
 பழமைவாய்ந்த பாறை ஓவியங்கள்: வடகால் கிராமத்தில் உள்ள கற்படுக்கைகள் தரைத்தளத்தில் பெருங்கற்கால ஓவியங்கள் காவி நிறத்திலும், வெண்மை நிறத்திலும் வரையப்பட்டுள்ளன.
 காவி நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் மனித உருவமும், குறியீடுகளும் காணப்படுகின்றன. குகையின் விதானத்தில் மையப்பகுதியில் சுதைக்காரை(சுண்ணாம்பு) பூசப்பட்டு அதன் மீது கோட்டுருவ ஓவியங்கள் காவி நிறத்தில் வரையப்பட்டுள்ளது. ÷வடகாலில் கண்டறியப்பட்ட இத்தடயங்கள் யாவும் தமிழக வரலாற்றிற்கு புதிய வரவாகும். பஞ்சப்பாண்டவர் படுக்கைகள் இக்குகையில் இருப்பதை சேரானூரைச் சேர்ந்த விவசாய பெண் ரேவதி அளித்த தகவலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ÷இந்த ஆய்விற்கு சேரானூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மனோகரன், வடகாலில் இந்து வழிகாட்டுதலுக்கு துணையாக வந்த கன்னியப்பன் ஆகியோர் உதவி செய்தனர்.
மேலும் சேரானூரில் உள்ள மலைக்குன்றுகளில் 10 அடி உயரத்திலுள்ள பாறைகளில் வெவ்வேறு இடங்களில் இரு ஜோடி சமணத் துறவிகளின் திருப்பாதங்கள் வெட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த சமணர்கள் இப்பாதங்களை வழிபட்டு வந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது என்றார் வீரராகவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக