புதன், 3 அக்டோபர், 2012

புதிய சொற்களை உருவாக்க முனைப்புடன் களம் இறங்குவோம்: தினமணி ஆசிரியர்

புதிய சொற்களை உருவாக்க முனைப்புடன் களம் இறங்குவோம்: தினமணி ஆசிரியர்

First Published : 03 October 2012 03:23 AM IST
தமிழில் புதிய, புதிய சொற்களை உருவாக்க முனைப்புடன் களம் இறங்குவோம் என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
நாமக்கல் கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில் "கு.சி.பா. அறக்கட்டளை இலக்கிய விருதுகள்-2012' வழங்கும் விழா, நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையின் முதன்மை விருது, பொற்கிழி ரூ.1.50 லட்சம் ஆகியவற்றை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
விருதை பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியது:
தமிழகத்தின் மிகவும் கௌரவமான விருது, அரசால் வழங்கப்படும் விருது, பட்டம் போன்றவைகளைப் பெறுவதில் எனக்கு எப்போதும் ஆவல் இருந்ததில்லை. இந்தக் கருத்தை முன்பே ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தேன்.
ஆனால், கு.சி.பா. அறக்கட்டளை விருதை நான் ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளருக்குத் தரும் விருது என்பதால் இதை என்னால் மறுக்க இயலவில்லை என்பது முதல் காரணம். விருது பெறுவது என்பதல்ல பெருமை. அந்த விருது யாரால் தரப்படுகிறது என்பதால்தான் விருது முக்கியத்துவம் பெறுகிறது.
நாவலாசிரியர் கு.சி.பா.வின் பெயரில் தரப்படும் இந்த விருது இலக்கியவாதியான, அப்பழுக்கற்ற நீதியரசர் ஒருவரின் திருக்கரங்களால் தரப்படுகிறது என்பது என்னை இந்த விருதை ஏற்றுக்கொள்ள வைத்தது இரண்டாவது காரணம்.
அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலத்தில் அதை எதிர்த்துக் குரல் எழுப்பியவரில் முதன்மையானவர் அப்பொழுது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த கு. சின்னப்பபாரதி அவர்கள். அந்தச் சூழலில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிக் காத்ததிலும் அடக்குமுறைக்கும், அவசரநிலை சட்டத்திற்கும் எதிராகத் துணிந்து போராடியதிலும் அவரது பங்கு மகத்தானது.
தமிழுக்கும், இலக்கியத்துக்கும் கல்வெட்டு ஆய்வுகள் மூலம் அளப்பரிய பங்காற்றிய புலவர் ராசுவுக்குத்தான் இந்த முதன்மை விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற எனது கருத்தை நான் கு.சி.பா. அறக்கட்டளையினரிடம் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள், "ஏற்கெனவே எங்கள் குழு முடிவு எடுத்துவிட்டது' என்று கூறி என்னை இந்த விருதை ஏற்றுக்கொள்ளப் பணித்தனர்.
தினமணியின் மூலம் இதழியலுக்கும் தமிழுக்கும் எனது பங்களிப்புக்காக இந்த விருது தரப்படுகிறது. இந்த நேரத்தில் நான் சில உண்மைகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
தினமணியில் பணியாற்றும் ஆசிரியர் குழுவினர் அனைவருடைய உழைப்பும் ஒத்துழைப்பும்தான் தினமணி ஆசிரியரான என்னுடைய பங்களிப்புக்குக் காரணமே தவிர, அது என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாகவோ வெற்றியாகவோ நான் கருதவில்லை.
ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியில் வெளியாகும் "மயங்கொலிச் சொற்கள்' பற்றி நீதியரசர் ராமசுப்பிரமணியன் குறிப்பிட்டுப் பாராட்டினார். தமிழ்மணியில் தரும் தகவல்களுக்கு பாராட்டப்பட வேண்டியவர் தமிழ்மணி பகுதியின் உதவி ஆசிரியர் இடைமருதூர் கி. மஞ்சுளாவே தவிர நான் அல்ல.
அதேபோல, இங்கே பலர் தினமணிகதிரைப் பற்றி பாராட்டினார்கள். ஞாயிறன்று வெளிவரும் இணைப்புகளில் மிகச் சிறப்பாக வெளிவரும் இணைப்பு தினமணிகதிர்தான் என்றும், அது ஒரு தகவல் பெட்டகமாகத் திகழ்கிறது என்றும் பலர் என்னிடம் கூறினார்கள். அதற்கான பாராட்டைப் பெற வேண்டியவர் செய்தி ஆசிரியர் பாவை சந்திரனே தவிர நான் அல்ல.
தலையங்கப் பக்கத்தில் வெளியிடப்படும் திருக்குறள் பற்றி நான் செல்லும் இடமெல்லாம் பாராட்டுகிறார்கள். அதற்கான பாராட்டு எங்கள் திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியர் இரா. சோமசுந்தரத்தைச் சேர வேண்டுமே தவிர, எனக்கு ஆனதல்ல.
எனக்கு வழங்கப்படும் இந்த விருதும் சரி, எனக்கு தரப்படும் பாராட்டும் சரி இதற்கெல்லாம் உரியவர்கள் தினமணி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அனைவருமே தவிர நான் அல்ல. அவர்கள் சார்பில் உங்கள் பாராட்டுகளை ஏற்றுக்கொள்கிறேன், அவ்வளவே.
தமிழில் புதிய சொற்களை உருவாக்க வேண்டும் என நீதிபதி ராமசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய சொற்களை ஆய்ந்து தருகின்ற பணியை பல்கலைக்கழகங்களும், அறிஞர்களும் செய்ய வேண்டும் என்று கருதி பத்திரிகைகள் அதில் முனைப்புக் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.
பத்திரிகைகள் புதிய பல சொற்களை வழங்கி தமிழை வளப்படுத்தும் பணியை இனி முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். "வாரம் ஒரு சொல்' என வாசகர்களிடமே கொடுத்து புதிய பல சொல்களை உருவாக்கும் முயற்சியில் பத்திரிகைகள் இறங்க முடியும் என்பதை நீதியரசரின் தகவல் முன்மொழிந்திருக்கிறது.
இனிமேல் தமிழில் புதிய சொற்களை உருவாக்க முனைப்புடன் களம் இறங்குவோம். ஊழல், முறைகேடு, தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் திருந்திவிடுவார்களா என்று கேட்கிறார்கள். அவ்வாறு தட்டிக்கேட்பதால் அத்தகைய நடவடிக்கைகள் மட்டுப்படுகின்றன என்பதே முக்கியம். ஊழல், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லையே எனக் கவலை கொள்ள வேண்டாம். தட்டிக் கேட்கப்படுவோம் என்ற உணர்வே முக்கியம்.
இன்றைய சூழ்நிலையில் வளரும் சமுதாயத்துக்கு ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் கற்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அவர்களை "தமிழ் கற்காதே, தமிழில் பேசாதே' என கூறக் கூடாது. குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்தாலும் வீட்டிலும் உறவினர்களிடமும் தாய் மொழியாம் தமிழில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
வீட்டிலும், ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும், குழந்தைகளிடமும் தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டால் மட்டுமே நாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று காப்பாற்ற முடியும்.
விற்பனை உத்திக்கான நாவல்களைப் படைப்பதைவிட சமூகச் சிந்தனை மேலோங்கி நிற்கும் நாவல்களே இன்றையத் தேவையாக உள்ளது. அதற்கு ஊருக்கு ஒரு கு.சி.பா, பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். அதன்மூலம்தான் தமிழ் இலக்கியம் வளரும் என்றார் வைத்தியநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக