ஞாயிறு, 13 மே, 2012

பறந்து பறந்து சம்பாதிக்கலாம்!


சொல்கிறார்கள்
பறந்து பறந்து சம்பாதிக்கலாம்!


"பாராகிளைடிங்' எனும் வானத்தில் பறக்கும் சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனிதா: கப்பற்படை வீரரான என் அப்பா, மலை ஏறுவது, காடுகளில் பயணம் செய்வது என சிறு வயதிலேயே பயிற்சிகள் கொடுத்து, எனக்கு இயற்கை மீதான ஆர்வத்தை ஊட்டினார். முதுகலைப் பட்டம் முடித்து, கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய போது தான், பாராகிளைடிங் கற்றுக் கொண்டேன். ஆண்களே வரத் தயங்கும் இந்த விளையாட்டில், பயிற்சி ஆரம்பித்த இரண்டாவது நாளே, பயிற்சியாளர் இல்லாமல் தனியாகப் பறக்கத் துவங்கி விட்டேன். மிக எளிதாகக் கற்கக் கூடிய இதற்கு, பரந்து விரிந்த மலைப் பாங்கான வெற்றிடம் தேவைப்படும். பொழுது போக்காகத்தான் கற்றுக் கொண்டேன். ஆனால், ஒரு கட்டத்தில் என் சந்தோஷம் முழுவதும் அந்தத் திசையில் திரும்ப, வேலையை விட்டு விட்டு பாராகிளைடிங் விளையாட்டிற்காக பயிற்சிப் பள்ளியை புனேவில் துவக்கி விட்டேன். இதன் மூலம் பெண்களை வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்து, வானத்தில் பறக்க வைப்பது தான் என் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில் கணவருடன் இணைந்து, அதை சாதித்தும் காட்டியுள்ளேன். அக்டோபர் முதல் மே மாதம் வரை தான் பாராகிளைடிங் பயிற்சிக்கு ஏற்ற காலம். ஒவ்வொரு ஆண் டும், 400 பேருக்கு நாங்கள் பயிற்சியளிக்கிறோம். இதில் குறைந்தது, 100 பேர் பெண்கள் என்பது சந்தோஷச் செய்தி. பாராகிளைடிங்கை 14 வயது முதல், எந்த வயதினரும் கற்கலாம். தரம் மற்றும் வகையைப் பொறுத்து, பாராகிளைடர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதல் கிடைக்கின்றன. பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்கள், இந்த பாராகிளைடிங்கை முழுவதுமாக கற்றுக் கொண்டு, ஆர்வமிருந்தால் அதை சுயதொழிலாகவும் செய்யலாம்!

"குடிசைப் பகுதி முன்னேறணும்...'

"கதா' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு உதவும் கீதா: என் கணவர் தர்மராஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பதால், திருமணத்திற்குப் பின் ஊட்டி, சென்னை, அமெரிக்கா என்று அவரின் பணியிட மாற்றங்களால் உலகம் சுற்றி, பின் டில்லியின் செட்டிலானோம். அப்போது தான் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று தோன்றியது. தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே குடிசையில் இருந்தாலும், அவர்களிடம் கொஞ்சம் முற்போக்குத் தன்மையும், வளர்ச்சியும் உண்டு. ஆனால், வட மாநிலங்களில், குறிப்பாக டில்லியில் நிலைமை முற்றிலும் வேறு. அவர்கள் வறுமையுடன், கல்வியறிவு பெற முடியாமல் இருந்தனர். என் சொந்த முயற்சியில், "தமாஷா' என்ற சிறு பத்திரிகையை எட்டு மொழிகளில் தயாரித்து குடிசைப் பகுதிகளில் வினியோகித்தோம். இதையடுத்து, டில்லி நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தின் குடிசை மேம்பாட்டுப் பிரிவு, "யுனிசெப்' மூலம் பண உதவி செய்தது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளியான இந்த பத்திரிகையின் வெற்றியை அடுத்து, குடிசைப் பகுதிகளில் ஒரு பள்ளியைத் துவங்கலாம் எனத் தோன்றியது. இந்த கோரிக்கை டில்லி அரசிடம் வைக்கப்பட்டு, அனுமதி கிடைத்து தொடங்கியது தான், "கதா' என்கிற அமைப்பு. 1990ல் ஐந்து குழந்தைகளுடன் ஆரம்பித்த பள்ளியில் இன்று, 1,300 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியில், கதைகளின் மூலம், அவர்களுக்கு அறிவூட்டுவதே எங்களின் நோக்கம். குடும்பத்தின் வறுமையே படிக்க வேண்டிய குழந்தைகளைக் தொழிலாளியாக்குகிறது. எனவே, பெற்றோரின் பொருளாதாரத்திற்கு வழி செய்தோம். பெண்களுக்கு பல தொழில்களை கற்றுக் கொடுத்தோம். இதன் மூலம் குடும்ப வருமானம் உயர்ந்தது. குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். பெரிய பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்தவர்கள் வெளிநாட்டிற்குப் போய் கோடிக்கணக்கில் சம்பாதிப்பர். ஆனால், குடிசைப் பகுதி குழந்தைகள் முன்னேறும் போது தான், நம் நாடு பொருளாதாரத்தில் முன்னேறும்; அது நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக