புதன், 16 மே, 2012

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்



தினமலர் :

இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. அது எப்படி சாத்தியம்?

மண்ணுக்குள் உயிர்த்துளி: வறட்சியும், உப்பு நிறைந்த நிலத்தடி நீரும், ராமநாதபுரத்தில் உள்ள மக்களை, வேறு பகுதிகளுக்கு குடியேற வைத்தன. ஆனால், இதே மாவட்டத்தில் உள்ள மிக்கேல் பட்டணத்தில், நிலைமையே தலைகீழாக உள்ளது. அந்த ஊரின் தலைவிதியை மாற்றி அமைத்தது, அங்கு நடைமுறைப் படுத்தப்படும், மழைநீர் சேகரிப்புத் திட்டம். இந்த கிராமத்தில், ஒவ்வொரு வீட்டின் தாழ்வாரத்திலும், அரை வட்ட வடிவில் தகரம் பொருத்தப்பட்டு, அதில் வழியும் மழை நீரைச் சேகரித்து, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக, ஊருணிக்கு கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும், இந்த அமைப்பு முறைப்படுத்தப் பட்டு, ஊருணிக்குச் செல்லும் பொதுக் குழாயில் இணைக்கப்பட்டு உள்ளது.

800 வீடுகளில்...: இவ்வாறு, 800 வீடுகளில், மழைக்காலத்தில் சேகரிக்கப்படும் நீர், ஊருணிக்கு அருகே உள்ள தொட்டியில் விடப்படுகிறது. அந்த தொட்டியில் பாயும் போது, தண்ணீரில் கலந்திருக்கும் மாசு, தொட்டியில் படிகிறது. அடுத்து, சல்லடையால் மூடப்பட்ட மற்றொரு தொட்டியில் தண்ணீர் விழும்படி, அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த தொட்டிக்குள், கூழாங்கல், பெருமணல் நிரப்பப் பட்டிருக்கும். அதை கடந்து தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இங்கு, மழை நீர் மேலும் சுத்திகரிக்கப்பட்டு, ஊரின் அருகே உள்ள இரண்டு ஊருணிகளில் சேகரிக்கப்படுகிறது.

விவசாயம் செழிப்பு: வழக்கமாக இப்பகுதியில், பிப்ரவரி இறுதியில், நிலத்தடி நீர் வறண்டு விடும். அதன்பிறகு, பல கி.மீ., அலைந்து, தண்ணீர் எடுத்து வர வேண்டும். மழைநீர் சேகரிப்பு உத்தியை பயன்படுத்தியபின், இரண்டு ஊருணிகளிலும், மே மாதம் இறுதி வரை தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், சுற்றுப் பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது; கிணறுகளில் தண்ணீர் குறைவதில்லை; இது, விவசாயத்திற்கு கை கொடுக்கிறது. வறண்ட பூமியில், இது மிகப்பெரும் சாதனை என்கின்றனர், கிராம மக்கள்.

குடி மையங்களுக்குத் தடை: இந்த கிராமம், மற்ற கட்டமைப்புகளிலும், பிரமாண்டத்தை தொட்டுள்ளது.
* தெருக்கள், சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன.
* பிரதான வீதிகள், தார்ச் சாலைகளாக உள்ளன; சாலைகள், தூய்மையாக பராமரிக்கப் படுகின்றன.
* பெண்கள், சிறுசேமிப்புத் திட்டத்தை, குடும்ப வழக்கமாக மாற்றி உள்ளனர்.
* குப்பை மேலாண்மையில், மக்கும் குப்பையில், மண்புழு உரம் தயாரித்து, விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்றனர்; மக்காத குப்பையை, மறு சுழற்சிக்கு அனுப்புகின்றனர்.
* குடியிருப்புகள், ஓட்டு வீடுகளாகவும், மாடி வீடுகளாகவும் மாறி வருகின்றன.
* விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், ஊராட்சி அலுவலகம், தொடக்கப் பள்ளி, சமுதாய கூடம் என, வளர்ச்சி பெற்ற கிராமமாக மாறி இருக்கிறது.
* இங்கு, ஒரு குடிமையத்தைக் கூட காண முடியவில்லை. பெட்டிக் கடைகளில், வயதானவர்களைத் தவிர, யாரும் புகையிலைப் பொருட்களை வாங்குவதில்லை.

கல்வியே காரணம் : ""கல்வியால் மட்டுமே சமூகம், தன்னிறைவு அடையும். 40 ஆண்டுகளுக்கு முன்பு, என்னை பி.யூ.சி., வரை என் தந்தை படிக்க வைத்தார். அதுவே, என் வாழ்விற்கு வெளிச்சத்தைத் தந்தது. அதனால்தான், பல்வேறு முன்னேற்றங்கள் சாத்தியமானது,'' என்கிறார், இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமான, 54 வயது ஊராட்சித் தலைவர் ஏசுமேரி.
இவர், ஊராட்சி மன்றத் தலைவரான பிறகே, இங்குள்ள குழந்தைகள், பக்கத்து ஊர்களுக்குப் படிக்கச் செல்கின்றனர். கணிசமான அளவில், பட்டதாரிகள் உருவாகி இருக்கின்றனர். இங்குள்ள கவுன்சிலர்கள், அனைவரும் பட்டதாரிகள். கல்வி வளர்ச்சிக்கு, இங்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. மாணவர்கள், பள்ளி இடை நிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கவுரவித்த உலக வங்கி: இந்த சாதனைகள், உள்ளூர் மக்களின் முழுமையான ஈடுபாட்டில் நிறைவேறி உள்ளது. இதற்காக, மிக்கேல் பட்டணம் ஊராட்சிக்கு விருது வழங்கி, உலக வங்கி கவுரவித்து உள்ளது. கிராம சேவா விருது, மாவட்ட விருது, மழைநீர் சேகரிப்பு விருது, நிர்மல் கிராம் புரஸ்கார் விருது, தூய்மையான கிராமம் விருது, சிறுசேமிப்பு விருது, உத்தமர் காந்தி விருது என, தேசிய அளவில் அதிமுக்கிய விருதுகளும் கிடைத்துள்ளன. இங்கு ஏற்பட்டுள்ள நடைமுறை மாற்றத்தை படிப்பதற்காக, ஒவ்வொரு மாதமும், தேசிய அளவில், பல மாநிலங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், வந்து செல்கின்றனர்.

நல்லதோர் படிப்பினை: தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயத்தில், உலக நாடுகள், கையை பிசைந்து கொண்டிருக்கும் போது, மிக்கேல் பட்டணம் கிராமத்தின் செயல்பாடு, தேசிய அளவில் நல்லதொரு படிப்பினையாக உள்ளது. இந்த ஊரை பார்த்துவிட்டு வந்த போது, ""இன்னும் நீர் தான் தெய்வம்; தீ தான் வாழ்வு,'' என்ற கல்யாண்ஜியின் கவிதை, நினைவில் நிறைந்தது.

மருந்தாகும் தண்ணீர்: ஊருணியில் தேங்கிய தண்ணீரை, மண் பானையில் எடுத்து பயன்படுத்துகின்றனர். கலங்கலான நீர், "செம்புலப் பெயல் நீர்' போல் இருந்தது. தண்ணீர் நிரம்பிய பானையின் தூர் பகுதியில், தேத்தா விதையைக் கொண்டு, பத்து நிமிடம் தேய்க்கின்றனர். அரை மணி நேரத்துக்குப்பின், மண்பானையின் மேற்பரப்பில், மிகத் தெளிவான தண்ணீரும், அடிப்பரப்பில் கொத்தாக மண்டியும் தேங்கி இருந்தது. தண்ணீரில் இருந்து, மண்டியை பிரித்தது தேத்தா விதை. அடியில் தேங்கிய தேத்தா கரைசல், மண்டி களிம்பாக மாறியிருந்தது. இது மருத்துவ குணம் கொண்டது என, கிராம மக்கள் கூறுகின்றனர். வெப்பத்தால் ஏற்படும் கொப்பளத்துக்கு, இதை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். வயிற்றுக் கடுப்பு, நீர்க் கடுப்பு போன்ற பிரச்னைகள், இந்த கரைசலை குடிப்பதால் தீர்வதாக, மிக்கேல் பட்டணம் ஊராட்சித் தலைவர் ஏசுமேரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக