புதன், 16 மே, 2012

இலண்டன் செல்லும் இராசபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்

இலண்டன் செல்லும் இராசபக்சேவை விரட்டியடிக்க இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்
லண்டன் செல்லும்
 ராஜபக்சேவை விரட்டியடிக்க
 இங்கிலாந்து தமிழர்கள் திட்டம்
கொழும்பு, மே. 15-

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு வைர விழா லண்டனில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்படி காமன்வெல்த் நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இதில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்கிறார்.

இதை கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து வர இருக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கு அங்கு வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை வர விடாமல் விரட்டியடிக்கும் வகையில் பல போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

முதலாவதாக ராணி எலிசபெத்துக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த எதிர்ப்பு தபால் அட்டைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர் லண்டன் வரும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டில் லண்டனில் உள்ள ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ராஜபக்சே சென்று இருந்தார். அப்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவு செய்து இருந்தனர். ஆனால் ராஜபக்சேயுடன் சென்றிருந்த அவரது பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக போர் குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உரையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக யூனியன் ரத்து செய்தது. இதற்கிடையே, இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த ஓட்டலின் முன்பும் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அச்சம் அடைந்த அவர் மாற்று வழி மூலம் இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார் அதையும் அறிந்த தமிழர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் பயந்த ராஜபக்சே இரவோடு இரவாக கொழும்பு திரும்பினார்.

அதே நிலையை தற்போதும் உருவாக்க இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக