ஞாயிறு, 13 மே, 2012

7000 ஏக்கர் காணியை இழக்கும் நிலையில் கொக்கிலாய் மக்கள்; உண்மை என்கிறார் அரச அதிபர்

7000 ஏக்கர் காணியை இழக்கும் நிலையில் கொக்கிலாய் மக்கள்; உண்மை என்கிறார் அரச அதிபர்

Kanee
முல்லைத்தீவு, கொக்கிலாய் பிரதேசவாசிகளுக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அம்மக்களுக்கு மீண்டும் கிடைக்காத நிலையில் அவற்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை மேற்படி பிரதேசவாசிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் குறித்த நிலப்பரப்பினை தாங்கள் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுதல், நிலச் சொத்துக்கள், புதையல் தோண்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தங்களது காணிகளில் இடம்பெறுவதாலேயே மேற்படி காணிகளை இழக்கவேண்டியுள்ளதாக கொக்கிலாய் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இதனால் மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளை தாங்கள் இழக்கவேண்டியேற்பட்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் கேட்ட போது, ‘கொக்கிலாய் பிரதேசவாசிகளின் மேற்படி காணிகள் தொடர்பான பிரச்சினை உண்மையென்ற போதிலும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தனக்கு அனுமதி இல்லை’ எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக