அங்கே விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். இங்கே விழிப்பு வராமல் பார்த்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்கிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டுக்குக் கேரள அரசு நவம்பர் 20-ம் தேதி தடை விதித்துள்ளது. வழக்கமாக, இத்தகைய தடையை மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும். ஆனாலும், தனது மாநிலத்தில் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து கூடாது என்று தீர்மானிக்கத் தனக்கு உரிமையுள்ளது என்று கூறியதோடு, தடை அறிவிப்பையும் வெளியிட்டது கேரள அரசு. ÷என்டோசல்பானுக்கு, கேரள அரசு தடை விதிக்கவும், அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவுமான நிலைமை உருவாகியுள்ளது என்றால் அதற்கான பாராட்டுதல்களுக்கு உரியவர்கள் கேரள மாநில மக்கள்தான். அவர்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் போராட்டங்கள்தான் அரசு இத்தகைய முடிவை மேற்கொள்ளும்படி செய்துள்ளது.÷கேரள அரசு, இந்த அளவுக்குத் துணிந்து செயல்பட்டதற்குக் காரணம், அந்த மாநிலத்தில் இடுக்கி, காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் என்டோசல்பான் பயன்பாட்டின் காரணமாக, குடிநீரில் கலப்படம் ஏற்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 480 பேர் இறந்துள்ளனர். பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை வான்வழியாகத் தெளிக்கும் நடைமுறைக்குக் கேரள அரசு தடை விதித்திருந்தாலும்கூட, தேயிலைத் தோட்டத்தில் இந்த நடைமுறை கைவிடப்பட்ட அளவுக்கு, முந்திரித் தோட்டங்களிலும், ஏலக்காய்த் தோட்டங்களிலும் கைவிடப்படவில்லை. தொடர்ந்து பல வழிகளிலும் இந்த என்டோசல்பான் மருந்து தெளிக்கப்பட்டு வந்தது.÷மழைக்காலங்களில் தேயிலை, காபித் தோட்டங்களிலிருந்தும், முந்திரி, ஏலக்காய்த் தோட்டங்களிலிருந்தும் சிறுசிறு அருவிகளாகப் பெருகி வழிந்தோடி வரும் நீரைக் குடிக்கும் மக்கள், என்டோசல்பான் மருந்தின் நச்சு எச்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாவது தொடர்கதையாக ஆனபோதுதான், மாநிலம் முழுவதும் மக்கள் விழிப்புணர்வுப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். ÷என்டோசல்பானுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அந்த மாநிலத்தில் கேரள தேவாலயக் குழுமம்கூட இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்த மருந்தை நாடுமுழுவதும் தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கேரள மாநிலத்துக்கு மற்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் காலிஃப்ளவர், கோதுமை ஆகியவற்றிலும் என்டோசல்பான் நச்சின் எச்சம் இருப்பதாகக் கூறும் கேரள சுற்றுச்சூழல் அமைப்புகள், நாடுமுழுவதும் தடை செய்யப்பட்டாலொழிய நன்மை விளையாது என்றும் உறுதியாகக் கூறுகின்றன.என்டோசல்பான் விவகாரத்தில் ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்வோம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினாலும், கேரள அரசு அதற்காகக் காத்திருக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள மரணங்கள், பாதிப்புகள் அனைத்துமே தோட்டங்களில் தூவப்பட்ட என்டோசல்பானால் நேர்ந்தவை என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரம் இல்லை என்று என்டோசல்பான் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும்கூட, கேரள அரசு துணிந்து இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.÷தற்போது கேரள மாநிலத்தில் என்டோசல்பான் மருந்து விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு கொடுப்பது வரையிலான நிவாரண உதவித் திட்டங்களையும் கேரள அரசு அறிவித்துள்ளது. விரைவில் பயனாளிகளைக் கண்டறிந்து, நிவாரண உதவிகளை அளிக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குப் பொறுப்பு தரப்பட்டுள்ளது.÷இதில் கேரள மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்பதோடு, இந்தப் பாராட்டுக்கு அந்த மாநில வேளாண் துறையும் சேர்ந்துகொண்டுள்ளது. தற்போது வேளாண்துறை சார்பில் டிசம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை, பூச்சிக்கொல்லி மருந்து விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து, என்டோசல்பான் தீமைகளை விவசாயிகளிடம் சொல்லப் போகிறார்கள். அதுமட்டுமல்ல, காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயிர்களின் மீது தெளிக்கக்கூடாது என்றும், காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பறிமுதல் செய்து அழிக்கவுமான உத்தரவையும் கேரள வேளாண் துறை அறிவித்துள்ளது.கேரள மாநிலத்தில் என்டோசல்பான் தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த மருந்தை தமிழ்நாட்டிலிருந்து கடத்திக்கொண்டுவரவும், பெயரை மாற்றி எடுத்துவரவும் முயற்சி செய்வார்கள் என்பதால் அதைக் கண்காணிக்கவும் தொடங்கியுள்ளது கேரள அரசு.÷தமிழ்நாட்டிலும் தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. முந்திரி, ஏலக்காய்த் தோட்டங்கள் இருக்கின்றன. இங்கேயும் என்டோசல்பான் தெளிக்கிறார்கள். இங்கேயும் அவற்றின் நச்சு நமது நீர்நிலைகளில், ஆறுகளில் கலந்து வந்து குடிநீராக வீட்டுக்குள் நுழையும். ஆனால் இங்கே அதுபற்றிய பேச்சே இல்லை. அங்கே விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்....இங்கே....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக