ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எசு.எம்.கிருட்டிணா நம்பிக்கை

௧.) இலங்கை ஒரே நாடு என்றால் தன் நாட்டு மக்கள் மீது வேதியல் கொத்துக் குண்டுகளை வீசிப் படுகொலை செய்ததை எவ்வாறு போர் என்று சொல்லுவது? ௨) இலங்கையும் ஈழமும் தனித்தனி நாடுகள் எனில் அயல்நாட்டின் மீது போர் தொடுத்து வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்ததை எவ்வாறு போர் அறமாகக் கொள்ள முடியும்? ௩.)  இந்தியாவின் சார்பாகத்தான் போர் தொடுத்ததாகச் சிங்களம் கூறி வருவதால் கிருடடிணா கூறும் நியாயம் என்பது இந்தியக் கண்ணோட்டத்தில்தானே இருக்க முடியும்? ௪) தமிழர் சிக்கல்களைத்தமிழர் அல்லாதவர்களே முடிவெடுப்பது எந்த வகையில்  நயன்மை (நியாயம்)? ௫) பொய்யும் புரட்டும் கலந்து சிங்கள-இந்திய அரசுகள் அளிக்கும் அறிக்ககைகள் எங்ஙனம் உண்மைகளை எதிரொலிக்கும்? ௬) போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும்  தமிழ்ஈழத்தை ஏற்பதுவுமே உண்மையான தீர்வும் அறமும் ஆகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை நியாயமாக நடந்து கொள்ளும்: எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை

First Published : 28 Nov 2010 12:00:00 AM IST


கொழும்பு, நவ.27: ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இந்தியாவின் புதிய தூதரகத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு தெரிவித்தார்.நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமே நிரந்தரத் தீர்வை காண முடியும் என்பதை இலங்கை அரசிடம் உறுதியாக தெரிவித்துவிட்டோம். இதற்கான நடவடிக்கையை அதிபர் ராஜபட்ச விரைந்து மேற்கொள்வார் என்றே நினைக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: இதனிடையே, ஈழத் தமிழர் சமுதாய ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் மகிந்த ராஜபட்ச வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சில மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் ஈழத்தமிழர் ஆதரவு முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.ஆனால் இந்த கட்சித் தலைவர்களுடன் அடுத்த ஓரிரு வாரங்களில் அதிபர் ராஜபட்ச ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அதிபர் ராஜபட்சவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிகாரப் பகிர்வால் மட்டுமே நீண்டகால ஈழப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று ராஜபட்சவிடம் ஆணித்தரமாக தெரிவித்தார்.இரு தலைவர்களும் சந்தித்த அடுத்த சில மணி நேரத்தில் ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளை ராஜபட்ச சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தவர்கள். ராணுவ நடவடிக்கையின் மூலம் ஈழத்தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எட்டிவிட முடியாது என்று தங்களது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வந்தவர்கள்.இதனால் இந்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், இந்தத் தலைவர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து ராஜபட்ச பேசினாரா என்பது குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை.இலங்கையில் போரின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் பகுதியிலேயே மறுகுடியமர்த்தும் பணியை அரசு தொய்வில்லாமல் செய்யும் என்று ராஜபட்ச உறுதி அளித்ததாக தெரியவந்துள்ளது.ஈழத்தமிழ் மக்களை மறுகுடியமர்த்தும் பணியை மேற்பார்வையிட தமிழர் ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்க ராஜபட்ச ஒப்புக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போரினால் சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கு உரிய நிதி உதவி செய்து அவர்களின் துயர் துடைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தமிழர் ஆதரவு கட்சிகளின் தலைவர்களிடம் ராஜபட்ச உறுதி அளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சிறிய குற்றம் செய்ததால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும் ராஜபட்ச முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக