௧.)காலக கெடு வரையறுக்க முடியாது என்று சிங்கள முதலாளி சொன்னதைச் சொல்லுகிறார். ௨.) தமிழர் நலன் குறித்த உண்மையான பேச்சை எடுக்காமல் இந்திய-சிங்கள நலன் குறித்து மட்டுமே பேசப்பட்டது வெற்றிதானே! ௩.)தமிழக மீனவர்கள்கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் இரு நாட்டுச்சிக்கல் எனத் திசை திருப்புவதும் வழக்கமான ஒன்றுதானே! ௪.) எந்த ஒரு நாடும் தன் நாட்டுக் குடிமக்கள் பிற நாட்டால் தாக்கப்பட்டால் அந்நாட்டின் மீது போர் தொடுக்கவும் தயங்குவதில்லை என்பதே நடைமுறை உண்மை. தமிழக மீனவர்களை இந்நாட்டுக் குடி மக்களாகக் கருதவில்லை என்பது இப்பொழுதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புது தில்லி, நவ. 28: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. எனினும் இது தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யமுடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையின் வடக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா சார்பில் அங்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. விவசாயம், வீட்டுவசதி, தகவல் தொடர்பு, மறுகுடியமர்வு உள்ளிட்டவற்றில் இந்தியா சார்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த விவகாரத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. இலங்கை அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறதோ, அதைப் பொறுத்தே பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது. அதிபர் ராஜபட்சவுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டில் பிரதமர் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு அவர் எப்போது செல்வார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.தமிழக மீனவர் பிரச்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்து பேசப்பட்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த எஸ்.எம். கிருஷ்ணா, இது குறித்து அதிபர் ராஜபட்ச, வெளியறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோருடன் பேசியதாகத் தெரிவித்தார். இருநாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த விவகாரத்தில் 2008 செயல்முறைத் திட்டத்தை கடைப்பிடிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வரிவிலக்கு அளிப்பது குறித்தும் அந்த நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளேன் என்று கிருஷ்ணா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக