காங்.கின் தலைமை சரியில்லை என்பதால்தான் தமிழ்நாட்டில் செல்வாக்கற்ற கோவன் துள்ளுகிறார். இந்நிலையில் தந்தையின் செல்வாக்கால் குளிர்காயும் செகன் துள்ளுவதில் வியப்பில்லை. காங்.கிற்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லாததால் ஆரவாரத்தை நம்பும் நிலையில்தான் உள்ளது. எனவேதான் இந்த நிலை. ரோசய்யாவைப்பற்றி அனைவரும் கவலைப்படாமல் இருக்கும் பொழுது தினமணியாவது ஆசிரியவுரை எழுதியது அவரைச் சார்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பிகார் தேர்தல் முடிவும், கர்நாடகத்தில் முதல்வராக நீடிக்க எடியூரப்பா நடத்திய தகிடுதத்தங்களும், ஆந்திர மாநிலத்தில் ரோசய்யா தனது முதல்வர் பதவியிலிருந்து விலகியதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கு 78 வயதாகிவிட்டதால் முதல்வர் பதவியில் திறமையுடன் செயல்பட முடியவில்லை என்று ரோசய்யா காரணம் கூறியிருந்தாலும், அவரால் ஆந்திர மாநில முதல்வருக்கான கண்ணியத்துடன் செயல்பட முடியாத அவமானகரமான சூழ்நிலைதான் அவரை இந்த முடிவுக்குத் தள்ளியது என்பதே உண்மை.தெலங்கானா பிரிவினை தொடர்பாக மத்திய அரசு அமைத்த கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையை இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுக்கு அளித்துவிடும் என்றும், அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய பிரச்னையைச் சமாளிக்கக் கூடியவராக ரோசய்யா இல்லை என்பதால் இந்த நடவடிக்கையை மேலிடம் எடுத்ததாகவும் அரசியல்நோக்கர்களும், அரசியல் விமர்சகர்களும் கூறினாலும்கூட, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த அரை நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் தெலங்கானா பிரச்னையை ரோசய்யா மட்டுமல்ல, கிஷண் குமார் ரெட்டியாலும்கூட சமாளிப்பது கடினம் என்பதுதான் கசப்பான உண்மை.ரோசய்யா கடந்த 14 மாதங்களில் முதல்வர் பதவியின் சுகத்தை அனுபவித்ததைக் காட்டிலும் பெற்ற அவமானங்கள்தான் அதிகம். முந்தைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பின்னர், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை (கடப்பா தொகுதி மக்களவை உறுப்பினர்) முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவரது வயது, அனுபவமின்மை ஆகியவற்றைக் கருதி கட்சி மேலிடம் அதற்கு உடன்படவில்லை. அது நடக்காத பிறகு, அரசுக்கு நெருக்கடியும் தர்மசங்கடங்களும் தரும் நடவடிக்கையில் இறங்கினார் ஜெகன். ஒய்.எஸ்.ஆர் தான் முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கிய "சாட்சி" நாளிதழ், மற்றும் "சாட்சி' தனியார் தொலைக்காட்சி ஆகியன ரோசய்யாவின் அரசுக்கு எதிராகத் திரும்பின. ஆந்திர மாநில காங்கிரஸ் அரசில் ஊழல், திட்டங்கள் சரியாக இல்லை என்று தினமும் ஒரு செய்தி நாளிதழிலும் தொலைக்காட்சியிலும் விரிவாக வெளியாகின. இதையெல்லாம் ரோசய்யா மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்றாலும், எந்த நடவடிக்கையும் இல்லை.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நினைவை மக்கள் மனதிலிருந்து அழிக்கவும், ஜெகன்மோகன் ரெட்டியை ஓரங்கட்டவும் வழிதேடிக் கொண்டிருந்தபோது தனித்தெலங்கானா பிரச்னை திடீரென்று மீண்டும் எழுந்தது. அது ரோசய்யாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. கலவரங்களைக் கட்டுப்படுத்த ரோசய்யாவுக்குத் திறமையில்லை என்று முதல் பக்கச் செய்திகள் பெரிதாக்கப்பட்டன. தனிநபர் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதை மேலிடத்துக்கு ரோசய்யா எடுத்துச் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.அடுத்து, கட்சி மேலிடத்தின் தடையை மீறி ஆறுதல் யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன். அதற்கும் நடவடிக்கை இல்லை. கடைசியாக, அண்மையில் சாட்சி தொலைக்காட்சியில், சோனியா காந்தி லாயக்கற்றவர், தலைமையேற்கத் தகுதியற்றவர் என்று வெளிப்படையாக விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பானது. காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவரான மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரை தில்லியில் நவம்பர் 23-ம் தேதி நேரில் சந்தித்து முறையிட்டும்கூட, ஜெகன் மீது நடவடிக்கை இருக்காது என்று செய்தி நவம்பர் 24-ல் வெளியானால், ஒரு பெரியவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? "இப்போது ஜெகன்மோகனை கட்சியிலிருந்து நீக்கினால் அவர் தனிக்கட்சி தொடங்கிவிடுவார்' என்பதாக காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும்கூட, ஜெகன்மோகன் மிகச் சாதாரண இளைஞர், மேடைப்பேச்சாற்றல் அரசியல் அனுபவம் இல்லாதவர், அவரிடம் உள்ள ஒரே பலம் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளும், நாளிதழும், தொலைக்காட்சி சேனலும் மட்டும்தான் என்பதை ஆந்திர மாநில காங்கிரஸôர் சொல்லவே செய்கிறார்கள்.ஜெகன்மோகன் ரெட்டி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கினால், அவரால் பின்னுக்குத் தள்ளப்படுவது சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கு தேசமுமாக இருக்குமே தவிர, ஆளும் காங்கிரஸ் கட்சி அல்ல. சொல்லப்போனால், அதுவேகூட, காங்கிரஸýக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் அல்லது காங்கிரஸýக்கும் தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான போட்டியாகி, காங்கிரஸ் கட்சி லாபமடையக்கூட வாய்ப்பு உண்டு.ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு இந்த அடிப்படை உண்மைகள் தெரியாது என்பது மட்டுமல்ல, எடுத்துச் சொன்னாலும் புரியவில்லை என்பதுதான் முதல்வர் மாற்றம் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. ரெட்டி இனத்தவரின் வாக்கு வங்கி கைநழுவிவிடுமோ என்கிற பயம் காங்கிரஸ் மேலிடத்தைப் பீடித்திருப்பதால், இன்னொரு ரெட்டிக்கு - கிரண் குமார் ரெட்டி - முதல்வராகும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. இப்போதும்கூட துணிந்து ஜெகன்மோகன் ரெட்டியைக் கட்சியிலிருந்து நீக்கும் துணிவு காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.மத்தியில் ஆகட்டும், மாநிலத்தில் ஆகட்டும், ஆளும் கட்சியைத் தன் விருப்பத்துக்குப் பணிய வைக்க வேண்டும் என்றால், ஒரு நாளிதழ், ஒரு தொலைக்காட்சி சேனல், நிறைய பணம், கொஞ்சம் தைரியம் இருந்தால் போதும் என்பதுதான் இன்றைய அரசியல் போலிருக்கிறது. பாவம், ரோசய்யாவிடம் நாளிதழும் இல்லை, தொலைக்காட்சி சேனலும் இல்லை. மற்ற ஊடகங்களை எந்தவழியிலாவது தன்பக்கம் இழுத்து எதிர்யுத்தம் நடத்தவும் தெரியவில்லை. அல்லது எடியூரப்பாபோல, மத்தியத் தலைமையைப் பயமுறுத்திப் பணிய வைக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.நிராயுதபாணிகள் களத்தைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதற்கு ரோசய்யாவை உதாரணம் காட்டலாம் போலிருக்கிறது. அதேநேரத்தில், அவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மதிப்பும் மரியாதையும்கூட மக்கள் மனதிலிருந்து வெளியேறி விட்டிருப்பதைக் காங்கிரஸ் தலைமைக்கு யார் தெரிவிப்பது?
கருத்துகள்
By nallavan
11/27/2010 9:09:00 PM
11/27/2010 9:09:00 PM
By janakiraman
11/27/2010 8:56:00 PM
11/27/2010 8:56:00 PM
By rafeiq ms
11/27/2010 8:36:00 PM
11/27/2010 8:36:00 PM
By kamal
11/27/2010 8:28:00 PM
11/27/2010 8:28:00 PM
By SEMMLAI
11/27/2010 8:16:00 PM
11/27/2010 8:16:00 PM
By K.HIRUMALAIRAJAN
11/27/2010 4:32:00 PM
11/27/2010 4:32:00 PM
By சுரேஷ்
11/27/2010 3:53:00 PM
11/27/2010 3:53:00 PM
By க.சரவணன்
11/27/2010 12:57:00 PM
11/27/2010 12:57:00 PM
By vinod
11/27/2010 11:26:00 AM
11/27/2010 11:26:00 AM
By கு.ரகுநாதன்
11/27/2010 10:47:00 AM
11/27/2010 10:47:00 AM
By S Raj
11/27/2010 9:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/27/2010 9:38:00 AM