புதன், 1 டிசம்பர், 2010

ஆடையில் ஆயிரம் பொருள்கள்!

வெறும் செய்தியாக இல்லாமல், வரலாறு, கலை, பண்பாட்டு  நோக்கத்துடன் விளக்கமாக ஏ.பேட்ரிக் எழுதியுள்ளார். பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆடையில் ஆயிரம் அர்த்தங்கள்!

ஊசியைப் பயன்படுத்தி எம்பிராய்டரி முறையில் தங்களது உடைகளை அழகிய கலைநயத்துடன் உருவாக்கிக்கொள்ளும் அற்புதக் கலையை கற்று வைத்திருப்பவர்கள் நீலகிரி மாவட்ட தோடரின மக்கள். அவர்களைப் பற்றி நினைவுக்கு வரும் இன்னொரு விஷயம், சடைப்பின்னல்களுடன் அவர்கள் அணிந்திருக்கும் உடை. அந்த அளவுக்குத் தோடரின மக்களின் உடை பிரசித்தி பெற்றது. இதற்கு காரணம் அவர்கள் அணிந்திருக்கும் அந்தப் பழுப்பு நிற உடையில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும் அழகே தனியானது.இந்தப் பாரம்பரிய உடை குறித்து தோடரின மக்களின் பிரதிநிதியான வாசமல்லியிடம் அவர்களின் கைவண்ண கலை குறித்து நாம் கேட்டபோது ருசிகரமான பல தகவல்களை அவர் தெரிவித்தார்.""தோடரின மக்கள் பயன்படுத்தும் இந்த பாரம்பரிய உடைக்கு பெயர் பூத்துகுழி. ஒரே ஒரு ஊசியைக் கொண்டு ஒவ்வொரு தையலாக பிணைத்து உருவாக்கும் நீண்ட பாரம்பரிய உடையாகும். இது போர்வையல்ல. ஐந்தரை மீட்டர் நீளமும் ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட இரு துணிகளை இணைத்து நீண்ட துணியாக மாற்றப்படுகிறது. இதன் இரு புறங்களிலும் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் பார்டர் அமைக்கப்பட்டிருக்கும்.பழுப்பு நிறத்தினாலான துணி குழந்தைப் பருவத்தையும் சிவப்பு நிறம் இளமைப் பருவத்தையும் கருப்பு நிறம் முதுமையையும் குறிக்கும் வண்ணங்களாகும். உடையின் இரு முனைகளிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும் 2 சிவப்பு நிற பார்டர்கள் மலையையும் ஆற்றையும் குறிக்கும். இவற்றைத் தோடரினத்தாரின் பாரம்பரியத்தோடு இணைத்து பல்வேறு இயற்கை டிசைன்களோடு இந்த உடை உருவாக்கப்படுகிறது. இதை உடலில் போர்த்திக் கொண்டால் குளிருக்கும் இதமானதாக இருக்கும் என்பதற்காகவே அதற்கேற்ற நூலில் நெய்யப்படுகிறது.எந்தெந்த இடத்தில் பூ வேலைப்பாடுகள், எந்தெந்த இடத்தில் கோடுகள் அமைய வேண்டுமென்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விடுவதால் அதற்கேற்ப இந்த உடையை உருவாக்க முடியும். ஓர் உடையை உருவாக்க குறைந்தது 2 மாதங்களாவது ஆகிவிடும். தோடரின மக்களில் பெண்கள் கட்டாயம் இந்தக் கலையைக் கற்றிருக்க வேண்டும். ஆண்களிலும் சிலர் இதை அறிந்து வைத்துள்ளனர்'' என்கிறார் வாசமல்லி.பூத்துகுழியைக் குறித்து நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க செயலர் ஆல்வாஸ் நம்மிடம் கூறுகையில், ""பூத்துகுழி என்பது தோடர்களின் கலாசார உடையாகும். இதை உலகில் வேறு எந்த பழங்குடியினராவது கடைப்பிடிக்கின்றனரா என்பது சந்தேகமே'' என்றார். மேலும், பூத்துகுழியில் திருமண நிகழ்ச்சிகளுக்கும் இறந்தவர்களை புதைக்கும் போதும் புதிய பூத்துகுழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் அதற்காகவே ஒவ்வொரு வீட்டிலும் இரு வகையான பூத்துகுழிகளை தயாராகவே வைத்திருப்பர் என்றார். போர்வை போன்ற இந்த பாரம்பரிய உடையை தோடரின மக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால் இதை வெளி உலகுக்கும் பிரபலப்படுத்துவதற்காக சால்வைகள், மப்ளர், கோட்டுகள், பர்ஸ் போன்றவற்றைக் கூட எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் தயாரித்து வருவதாகவும் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பழங்குடியினரும் இத்தகைய பாரம்பரிய உடைகளை அணிந்தாலும், உடைகளில் காணப்படும் எம்பிராய்டரி டிசைன்கள் தோடர்களால் மட்டுமே உருவாக்கப்படுபவை என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.பல்வேறு சித்திரங்களால் உருவாக்கப்படும் இந்த பூத்துகுழிகளில் ஒவ்வொரு டிசைனுக்கும் ஓர் அர்த்தம் உள்ளதாம். எருமைக்கொம்பு போல வடிவமைக்கப்படும் டிசைனுக்கு எர் புகூர் எனவும் அணில் உருவத்தில் வடிவமைக்கப்படும் டிசைனுக்கு அணில் புகூர் எனவும் கூறுகின்றனர். இதைத்தவிர இயற்கையை மட்டுமே வழிபடும் தோடர்கள் அதற்கேற்ற வகையில் சூரியன், மரம், சோலை, ஆறு என தங்களது வாழ்க்கையோடு ஒன்றியிருக்கும் அனைத்தையும் இந்த எம்பிராய்டரிகளில் வெளிப்படுத்தி விடுகின்றனர்.இதற்கான வரவேற்பு தென்னிந்தியாவில் இருக்கிறதோ, இல்லையோ வட இந்தியாவிலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடத்திலும் தோடர் மக்களின் பூத்துகுழி பிரபலம். இன்றைக்கும் நீலகிரிக்கு வரும் மிக முக்கிய விருந்தினர்களுக்கு பூத்துகுழியை பரிசளிப்பதே மிக கெüரவமான அம்சமாக உள்ளது. இதன் விலை அதிகமில்லை, ரூ.5,000லிருந்து ரூ.10,000 வரைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக