சனி, 2 ஜனவரி, 2010

நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்



சென்னை, ஜன. 1: நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை மாற வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அபூர்வ ராகம்' இசை, நாட்டிய மாத இதழின் 8}வது ஆண்டு விழாவில் 8 இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:பத்திரிகை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பது ஒரு நாளிதழின் ஆசிரியர் என்ற முறையில் நான் நன்கறிவேன். ஜனரஞ்சக பத்திரிகை நடத்துவதே கடினம் என்றால் சிறு பத்திரிகை நடத்துவது பற்றி சொல்லத் தேவையில்லை.பிறகு ஏன் சிறு பத்திரிகை நடத்த வேண்டும் என்று கேட்பீர்கள். ஒரு தாய் ஏன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதா? அதுபோலத்தான் இதுவும்.தன்னுடைய எழுத்தை தான் விரும்பியதுபோல அச்சில் பார்க்க வேண்டும் என்கிற உள் உணர்வின் வெளிப்பாடு அது. இது எல்லா கலைஞர்களுக்கும் உண்டு.இசை விமர்சனங்களுக்காக பல்வேறு சபாக்களை வலம் வந்து கொண்டிருக்கிறேன். பல சபாக்களில் கலைஞர்கள் வெறும் நாற்காலிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு பாடுகிறார்கள். அதனால் அவர்கள் மனம் சோர்வதில்லை. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நாற்காலியையும் ஒரு ஜீவனாக பார்க்கிறார்கள்.அதுபோலத்தான் எழுத்தாளனும். தன் எழுத்தை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்காக பத்திரிகை நடத்துகிறான். நல்ல தமிழிசையை தமிழகத்தில் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. பாடல்கள் புரியாததால்தான் பலர் சங்கீதம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பாடல்கள் புரிந்தால் அவர்களும் இசையால் ஈர்க்கப்படுவார்கள். அதனால் இசை காப்பாற்றப்படும். நமது கர்நாடக இசை என்பது சிலந்தி வலையைப் போன்றது. அதன் இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டால் மீண்டுவரவே முடியாது."முதலில் சாகித்யத்தை கற்றுக் கொடுங்கள். பிறகு ஸ்வரங்களை கற்றுக் கொடுங்கள். அப்போது சங்கீதத்தில் தானாக ஈர்ப்பு வந்துவிடும்' என்று 1974}ல் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் அளித்த விருதை பெற்றுக் கொண்டு செம்மங்குடி சீனிவாச அய்யர் பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இசை தெரிந்தவர்கள் அதிகமானால் நாற்காலிகளைப் பார்த்து பாடும் அவல நிலை மாறும் என்றார் வைத்தியநாதன்.
கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் அரசியல் வாதிகளின் பதவி நாற்காலி வெறியைக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். அதற்கும் தலைப்பு பொருந்துகிறது. உயர்நிலை ஒப்பிசை அரங்குகள் தவிர அனைத்து இடங்களிலும் தமிழிசையே ஆட்சி செய்தால் இந்த அவல நிலை மாறும். பிற மொழிகளில் பாடி, பிற மொழிப் பாடல்களுக்கு ஆடி , பிற மொழிகளில் பட்டங்கள் வழங்கிக் கொண்டு தமிழிசையை தமிழ்க்கலையை / தமிழினத்ததைச் சிதைக்கும் இசை அரங்குகளுக்குச் செல்லாதவர்கள் பாராட்டிற்குரியவர்களே! தமிழில் பாடி, தமிழ்ப் பாட்டிற்கு ஆடி, தமிழ் உணர்வுப் படைப்புகளை மையமாகக் கொண்டு கலைகள் வளரட்டும்! வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக