வியாழன், 31 டிசம்பர், 2009

எந்தச் செய்தியாக இருந்தாலும் படிப்பார்: கருணாநிதி குறித்து "நல்லி' குப்புசாமி



சென்னை, டிச.30: ""பத்திரிகைகளில் வரும் எந்தவொரு செய்தியாக இருந்தாலும் அதைப் படிக்க முதல்வர் தவறுவதில்லை'' என முதல்வர் கருணாநிதியை தொழிலதிபர் "நல்லி' குப்புசாமி புகழ்ந்தார்.சென்னை புத்தகக் காட்சி திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று புதன்கிழமை அவர் பேசியது:முதல்வர் கருணாநிதி குறித்து எனக்குத் தெரிந்த பல்வேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. "தினமணி'யில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணியின் "கலாரசிகன்' பகுதியில் "திசையெட்டும்' புத்தகம் குறித்து அதன் ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த முதல்வர் கருணாநிதி, குறிஞ்சிப்பாடியில் உள்ள "திசையெட்டும்' ஆசிரியரை தொடர்புகொள்ள வைத்து அதன் பழைய தொகுதிகளை கேட்டுப் பெற்றார். பத்திரிகைகளில் வரும் எந்தச் செய்தியாக இருந்தாலும் அதைப் பார்க்க முதல்வர் கருணாநிதி தவறுவதில்லை'' என்றார்.கலைமாமணி விருது...நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம், ""ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. பதிப்பாளர்கள் இரண்டு பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்க வேண்டும். திரைப்படத் தொழிலாளர்களுக்கு தனி நகரம் உருவாக்கியது போல, பதிப்பாளர்களுக்கு என தனியாக "பதிப்பு நகரம்' ஏற்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
கருத்துக்கள்

அமைச்சர்கள் எழுந்திருக்கும் முன்பே செய்திகளைப் படித்து விட்டு அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டுக் கலக்கும பண்பும் கலைஞரிடம் உண்டு. செய்திகளின் அடிப்படையிலேயே உடனடி நடவடிக்கை எடுக்கும் ஆட்சித் திறமையும் உண்டு. இத்தகைய அரும் பண்பு இருப்பினும் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகள், தமிழ் ஈழத்தில் நடைபெற்ற நடைபெறும் படுகொலைகள் குறித்த செயதிகளையும் படித்து விட்டு வாளாவிருந்து விட்டாரே! அமைதி காக்கிறாரே! காங்கிரசிற்கு அடிமையாகவே இருக்கிறாரே! அடி கொடுக்க வேண்டிய இடத்தில் அறிக்கையால் சாமரம் வீசுகிறாரே! தான் சொல்லிய இன நலக் கருத்துகளைத் தானே மீறுகிறாரே! என்னும் வருத்தம் மிகுதியாய் ஏற்படுகிறது. அரியணையில் இல்லாமல் இருந்திருந்தால் ஈழ விடுதலையை உருவாக்கியிருப்பாரே! பாழும் ஆட்சியால் ஈழத தமிழர் வாழும் நிலையைத்தொலைத்து விட்டாரே! என்னும் வேதனை உண்டாகிறது. இனியாவது கலைஞர் தமிழினத்தலைவராக மாற வேண்டும்! தமிழ் நலத் தலைவராகத் திகழ ‌வ‌ேண்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/31/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக