சென்னை, ஜன.1: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு மாறாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் வகையில் ஓர் அரசாணையை வெளியிடச் செய்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இது "ஒப்பந்த முறை அறவே நீக்கப்படும்' என்ற தி.மு.க.வின் வாக்குறுதிக்கு மாறாக உள்ளது.மொத்தத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையே ஒழித்துக் கட்டும் பணியில் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார்.இந்த அரசாணையின்படி, இப்போது அரசுத் துறைகளில் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு துறைத் தலைவர்களே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். தி.மு.க. அரசின் இந்த செயல் இளைய சமுதாயத்தினரின் உரிமையைப் பறிப்பதாகும்.பொது நலன் கருதி, அரசு விரும்பினால், எந்த அரசு ஊழியரின் பணிக் காலத்தையும் நீட்டித்துக் கொள்ளலாம். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்தமாக ஓர் அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல்.இது லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல். பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் செயல். ஏழைகளை தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வைக்கும் செயல். தி.மு.க. விசுவாசிகளை பணியமர்த்துவதற்கான சதித் திட்டம்.பொதுவாக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பகங்கள் மூலம் இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆனால் இதுவரை நடைபெறாத வகையில், அனைத்து மட்டங்களிலும் உள்ள காலியாக உள்ள இடங்களை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.இதனால் தி.மு.க.வுக்கு வேண்டியவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படும் நிலை ஏற்படும். இது போன்ற நியமனங்கள் மக்கள் விரோதச் செயலுக்கு வழிவகுக்கும். இதனால் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடும். தி.மு.க. அரசின் இந்த அரசாணை மொத்தத்தில் ஊழலுக்கு வித்திடும் செயல் ஆகும்.மேலும், தி.மு.க.வினர் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை நியமித்து, வரும் 2011 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் முறைகேடுகளை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இளைய சமுதாயத்தினருக்கு எதிரான, ஊழலுக்கு துணைபோகின்ற, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற இந்த அரசாணையை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள், வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில், இளைஞர்களைக் கொண்டு முறைப்படி நிரப்பப்பட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்
சாத்தான் வேதம் ஓதுதல்
என்பதற்கு எடுத்துக் காட்டாக
இந்த அறிக்கையை எடுத்துக் கொள்ளலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *1/2/2010 5:07:00 AM