Last Updated :
சென்னை, டிச. 30: "எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.33-வது சென்னை புத்தகக் காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்தும், "கலைஞர் மு.கருணாநிதி' பொற்கிழி விருதுகளையும் வழங்கி அவர் பேசியதாவது:நான் ஒரு எழுத்தாளன். கடந்த 60 அல்லது 70 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.எழுத்தாளன் என்பதை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெருமையாகக் கருதுபவன். எனக்கு அலுத்துப் போய் விட்டது. செம்மொழி மாநாடு முடிந்த பிறகு வேறொரு திக்கில் மக்களோடு நின்று எனது பயணத்தைத் தொடர்வேன். அரசில் அல்ல; அரசாங்கத்தில் அல்ல.இங்கே என் முன் அமர்ந்திருக்கக் கூடிய கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் அருகில் சென்று உட்காரவே எனக்கு ஆசை. அரசுக் கட்டிலில் வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல.நான் (கருணாநிதி) அளித்த ரூ.1 கோடியில் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' என்ற பெயரில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவது, வழங்கியது தவறல்ல. ஆனால், விருதினைப் பெற்றவர்கள் எப்படி தவறு இழைக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு நூலைத் தருவது வழக்கம். அதன்படி, ஒரு சந்திப்பின் போது "சென்னை வரலாறு' என்ற நூலைத் தந்தார்.அதில், 1969-ல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எனது பெயரையும், அதற்கு முன் முதல்வர் பொறுப்பு வகித்த அண்ணாவின் பெயரையும் குறிப்பிடவில்லை.ஆனால், 1977-ல் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பதற்கான குறிப்பு உள்ளது."மதராஸ்' என்பதை "சென்னை' என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தேன். அந்தச் செய்தியும் அந்தப் புத்தகத்தில் இல்லை. சட்டப் படிப்புக்கென தனியாக பல்கலைக்கழகம் 1997-ல் தொடங்கப்பட்டது. இது, யாரால் தொடங்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. 1997-ல் திமுக ஆட்சியில் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. சென்னை வரலாறு புத்தகத்தில் முக்கியமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதைத் திறந்து வைத்தது யார் என குறிப்பிடவில்லை. அப்படி என்ன நான் தவறு இழைத்து விட்டேன்? தமிழனாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் என்பதை விட வேறு என்ன தாழ்வு எனக்கு?அந்த நூலுக்கு கடந்த ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ புத்தகக் காட்சியில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.விருது வழங்கும் போது: கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழியை 3 அல்லது 4 பேர் குழுவாக வழங்குகின்றனர். அப்படி வழங்கும் போது, புத்தகம் விருதுக்கு உரியதுதானா என்பதையும், அதை எழுதிய ஆசிரியரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரை மிரள வைக்கவோ, சோகத்தில் ஆழ்த்தவோ இதைச் சொல்லவில்லை. புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கும்போது உன்னிப்பாக, கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.
By Ilakkuvanar Thiruvalluvan
12/31/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*