புதன், 16 செப்டம்பர், 2009

சிதம்பரம் நடராசர் ஆலய வழக்கு:
தீட்சிதர்கள் மேல்முறையீடு மனு தள்ளுபடி



சென்னை, செப். 15: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் செயல் அதிகாரி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது தீட்சிதர்கள் முறைகேடுகள் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்து இந்து அறநிலையத்துறை 05.08.1987-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டார். நீதிபதி கே. ரவிராஜபாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொது தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது.யார் கட்டியது? சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசர்களால் 10 முதல் 13-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டுள்ளது. சைவர்கள் மற்றும் வைணவர்கள் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளனர். எனவே, இந்த கோயில் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நியமன உத்தரவு சரியானதே: நடராஜர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்துக்கு பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறையான கணக்கு எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆலயத்தை நிர்வகிக்கும் கடமையிலிருந்து பொது தீட்சிதர்கள் தவறிவிட்டனர் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயிலுக்கு வழங்கப்பட்ட "கட்டளைகள்' மற்றும் நிலங்களை அடையாளம் காணவும், வருவாயைப் பெருக்கவும் செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே. சிதம்பரம் நடராஜர் ஆலயச் சொத்துகளை முறையாக நிர்வகித்திருந்தால், திருப்பதி மற்றும் பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறியிருக்கும். வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நடராஜர் ஆலயத்தைப் புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் ரூ. 50 கோடியிலான திட்டத்தை 13-வது நிதி கமிஷனிடம் செயல் அதிகாரி அளித்துள்ளார். நடராஜர் ஆலயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் ஆர்வத்தை இது காட்டுகிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: செயல் அதிகாரிக்கான பணிகளும், அதிகாரங்களும் அரசாணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல் அதிகாரி நியமனத்தால் பொது தீட்சிதர்கள் யாரும் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களும், செயல் அதிகாரியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் அதிகாரியும் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியமிக்க கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியதுபோல் ஆகும். அவ்வாறு செய்தால் பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

கருத்துக்கள்

அறம் வென்றது! இறைநெறி தழைத்தோங்கத்தமிழ் வழிபாடே வழிவகுக்கும் என்பதை உணர்ந்து அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே இருக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக