செவ்வாய், 15 செப்டம்பர், 2009




இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மறைமுகமாக ஆயுதங்கள் வழங்குவது அவர்களை அடக்கியொடுக்கத்தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பிற இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் குறித்தும் அமைதிப்படை குறித்தும் ஐயப்பாடுகள் இருந்தன என்பது பல்வேறு செய்திகளில் இருந்து தெரிய வருகிறது. "முறிந்த பனை' நூலில் இந்த சந்தேகங்களும், அதன் செயல்பாடுகளுமான பதிவில் கூறப்பட்டிருக்கிறது. "விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பிரத்தியேகமாக இந்தியர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தமையானது, விடுதலைப் புலிகளைக் கணக்கில் எடுத்தாக வேண்டிய வலிமை வாய்ந்த சக்தியாகத் தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும், அவர்களைத் தவிர்ப்பது என்பது வீண்வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியே என்றும் இந்தியர்கள் கருதிக்கொண்டதற்கான அறிகுறியாகும். பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன' என்று கூறப்பட்டிருப்பதில் இருந்து விடுதலைப் புலிகளின் வலிமை வெளிப்படுகிறது. மேலும் அதே "முறிந்த பனை' நூலில், பிற போராளி இயக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "தாங்களின் விரக்தியில் அவர்கள் தமிழ்ப்பொதுமக்கள் மீது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள்மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற நினைப்பில் பெருங்கசப்பு கொண்டிருந்தனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கசப்பு நிலையே பல்வேறு மோதல்களுக்குக் காரணமாக இருந்தது. பயணிகளுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாயிற்று. திடீர்க் கொலைகளும் ஆங்காங்கே நடந்தன. "இந்தியர்களின் அக்கறையில் பொதுமக்கள் உண்மையாகவே மிகக் கீழான இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர்' என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் கொல்லப்பட்டதும் அதன் எதிரொலியாக நடைபெற்ற மோதல்கள் குறித்தும் அமைதிப் படைக்குப் புகார் வந்தபோது, சட்டம் ஒழுங்குப் பிரச்னை மன்னாரைப் பொறுத்து அமைதிப் படையைச் சார்ந்ததல்ல-அங்கு இலங்கை அரசின் காவல் நிலையங்கள் இயங்குகின்றன. அந்த நிலையங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும் என்று காரணம் கூறிவிட்டது. ஆனால், அடுத்த நாளே அமைதிப்படை தலைமையிடமிருந்து மன்னாரிலும் சட்டம்-ஒழுங்கை அமைதிப்படை பராமரிக்கவேண்டும் என்று உத்தரவு வந்தது. அப்படியென்றால், சி.ஆர்.பி.எஃப். படைப்பிரிவினரையும், கலவரம் நேர்ந்தால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட சாதனங்களையும் அனுப்பவேண்டும் என்று அமைதிப்படை கூறியதும், அக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. மதச் சிறுபான்மையினர் கடத்தல் மற்றும் கொலைகள் நடத்தப்படுவதாகப் புகார்கள் வந்தன. போராளி இயக்கங்களுக்கிடையே இது குறித்துப் புகாரும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்ப் பகுதிகளில் மரபு ரீதியான வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தங்கள் அடுத்தடுத்த நாளில்கூட நடைபெற்றன. அமைதிப்படை வருகையையொட்டி எல்லாமும் நல்லதாக நடக்கும் என்பதை மெய்ப்பிக்க, சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள இனவாத அரசுகளால் செயலிழந்தவற்றை, செயல்படவைக்க, பெரியதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வங்கிகள் இயங்கின. இதற்கென ராணுவ வாகனங்களில் கொழும்பிலிருந்து ரூபாய் நோட்டுகள் வரவழைக்கப்பட்டன. வங்கி ஊழியர்களை அவர்களது இல்லத்திலிருந்தே அழைத்து வந்து வங்கிகளில் அமர வைத்தனர். வங்கிகள் திறக்கப்பட்டன. பணம் இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வருகை என்பதுதான் இல்லாதிருந்தது. அதேபோன்று நீதிமன்றம் செயல்படவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிங்கள அரசு நிர்வாக அமைப்பில் உள்ள நீதிமன்றத்தை மக்கள் புறக்கணித்தார்கள். காரணம், விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில்தான் புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட சூழ்நிலை அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவி வந்தது. அதுமட்டுமல்ல, நிலவரி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்ததாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.சி.சந்தோஷ் பாண்டே தனது நூலில் குறிப்பிடுகிறார். இடைக்கால நிர்வாக சபை அமைப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஓர் அம்சம். எட்டு பேரைக்கொண்ட நிர்வாக சபையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 3 இடங்கள், தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணிக்கு 2 இடங்கள், இன்னொரு ஆயுதப் போராட்டக்குழுவுக்கு ஓர் இடம், மீதமுள்ள 2 இடங்களுக்கு அரசுப் பிரதிநிதிகளுக்கென ஒரு திட்டம் முன்வைத்துப் பேசப்பட்டது. இந்த இடைக்கால சபையின் பணி, இலங்கை அரசினதும் அமைதிப்படையினதுமான உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு, வடக்கு-கிழக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வரை செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது உறுதியான தகவல் இல்லை. ஆறு மாதத்திலும் நடக்கலாம்; அல்லது ஓராண்டு இடைவெளியிலும்கூட நடக்கலாம் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இடம்பெற விடுதலைப் புலிகள் அமைப்பு விருப்பம் காட்டவில்லை. இடைக்கால நிர்வாக சபையில் 3 இடங்களைப் பெற்று, சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இலங்கை அரசின் வழிகாட்டுதலில், அமைதிப்படையின் உத்தரவின் கீழ், நிர்வாகத்தில் எந்த முடிவினையும்கூட எட்ட முடியாத சூழ்நிலையே உருவாகும் என்பது அவர்களது வாதமாக இருந்தது. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே இருக்க, இந்திய அமைதிப்படையின் முகாம்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டன. பாதுகாப்புக் கோரிய போராளிக்குழுக்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவும் போராளிக்குழுக்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்கவும் புதிய முகாம்கள் அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான சுமுக நிலையை அமைதிப்படை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டது. பிற போராளி இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது குறித்து விடுதலைப் புலிகள் எழுப்பிய புகாருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பில், அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங் உள்ளிட்டோருடன் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்சித் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஈ.என்.டி.எல்.எஃப்., பிளாட், டெலோ அமைப்புகளை அமைதிப்படை ஆதரிக்கிறது என்ற செய்தியைப் பரப்பவேண்டும் என்று தூதுவர் கூறவும், அது தேவையில்லை... யாழ் மக்கள் இதை எப்போதோ பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்று தளபதி தெரிவித்தார். பிற இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது பற்றி விவாதம் வந்தபோது, ஆயுதம் அளிப்பது மட்டுமல்ல, ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த 150 பேருக்கு, கிளிநொச்சியில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறித்தும் பிரபாகரன் புகார் தெரிவித்திருக்கிறார் என்று தளபதி குறிப்பிட்டார். யாழ் மக்கள் ஆதரவைப் பெறாத அமைப்புகளுக்கு ஆயுதம் அளித்தும், பயிற்சி கொடுத்தும் வருவதால் அமைதிப்படையின் பணி சிக்கலைச் சந்திக்கும். விடுதலைப் புலிகள் மீது விமர்சனம் இருந்தபோதிலும், அம்மக்கள் தங்களின் "பாதுகாவலன்' என்ற நிலையில் புலிகளையே நம்புகிறார்கள் என்றும் தளபதி கருத்துத் தெரிவித்தார். இக்கருத்தை மாற்றும் பணியை அமைதிப்படை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதற்கான பிரசாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்றும் இந்தியத் தூதவர் அறிவுரை வழங்கினார். அமைதிப்படைத் தளபதியோ, இந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், அவர்கள் விடுதலைப் புலிகளோடு இருக்கிறார்கள் என்றும், அமைதிப்படை தங்கியிருக்கும் காலம் குறித்தும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில் இப் பிரசாரம் சாத்தியமில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார். ஆனால் அவரின் கருத்து ஏற்கப்படவில்லை. மாறாக, இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து, இந்தியக் கடற்படையினரும் இரவில் ரோந்துக்குப் போக இருக்கிறார்கள் என்றும், சமீப காலத்தில் இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்கள் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்களாக இருக்க முடியாது என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் சொல்லப்பட்டது. போராளி இயக்கங்களிடையே மோதல் ஏற்பட இந்திய அரசுதான் காரணம் என்கிற சந்தேகம் பரவலாக எழுந்தவண்ணம் இருந்தது.நாளை: பிரபாகரனை கைது செய்யுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக