சனி, 19 செப்டம்பர், 2009

"முதல்வர் மீது உலகத் தமிழர்கள் அதிருப்தி': பழ.நெடுமாறன்



மதுரை, செப். 18 : ஈழத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுவாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். "இலங்கையில் தமிழின அழிப்பு' என்னும் தலைப்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் பேசியது: 6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் ஈழத் தமிழர்கள் துயருற்று வருகின்றனர். 3.50 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் உணவு, மருந்து, சுகாதார வசதியின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உதவிட முடியாத நிலையில் நாம் உள்ளோம். இது வேதனைக்குரியது. இத்தகைய கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. ஹிட்லர் ஆட்சியில்கூட முகாம்களில் யூதர்களுக்கு இதுபோன்ற கொடுமை நிகழ்த்தப்படவில்லை. ஹிட்லரைவிட மிகவும் கொடியவராக ராஜபட்ச உள்ளார். இந்திய அரசு மூலம் ரூ.500 கோடி நிதியுதவி, மாநில அரசு மூலம் ரூ.25 கோடிக்கான உதவிப் பொருள்களை இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது வழங்கப்பட்டது பற்றி அறிக்கை வேண்டும் என கருணாநிதி கேட்கிறார். ஏற்கெனவே நிவாரண உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. ஆணையம் மூலம் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறினோம். மேலும், அங்கு உரிய முறையில் பொருள்கள் வழங்கப்படுகிறா என்பதை அறிய ஆன்மிகத் தலைவர்கள் அடங்கிய குழுவை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று சொன்னோம் அதற்கெல்லாம் முதல்வர் செவிசாய்க்கவில்லையே ஏன்? இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம். ஈழத் தமிழருக்கு ஆதரவாக நாம் வீதியில் இறங்கிப் போராடவும் தயங்கக் கூடாது என்றார்.

கருத்துக்கள்

நூற்றுக்கு நூறு உண்மை. இதனைக் கலைஞரும் நன்கு அறிவார். எனினும் தேர்தலில் வெற்றி பெறும் கலையும் மத்திய அரசை ஒத்துப் போகும் அடிமைத்தனமும் நன்கு அறிந்து பயன்படுத்தி வருவதால் இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை. அவர் இதுவரை செய்து வந்த அரும்பணிகள் யாவும் பயனற்றுப் போகும் வண்ணம் வரலாற்றில் பெரும் கறை அவர் மீது படிந்த பின்னும் அவர் கவலைப்படாமல் இருப்பதால் இது குறித்துப் பேசிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக