judgment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
judgment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

லையங்கம்: தர்மம் வென்றது!

First Published : 30 Sep 2011 04:40:29 AM IST

Last Updated : 30 Sep 2011 04:42:39 AM IST

1992-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களுக்கு 2011 செப்டம்பர் 29-ல் தண்டனை கிடைத்திருக்கிறது.  பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. காலம் கடந்து கிடைத்த தீர்ப்பு என்றாலும், இக்கிராம மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.  இதற்காக அந்தக் கிராம மக்களும், மலைவாழ் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ந்து போராடியதால்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இப்போதாகிலும் நியாயம் கிடைத்திருக்கிறது.  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இவர்களில் 17 பேருக்கு அந்தக் கிராமப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இவர்கள் எந்த அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை, இப்போதாவது உலகம் அறிந்துகொள்ள வழிகோலியிருக்கிறது.  மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினர் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலராக மட்டுமே இருப்பார்கள். வாச்சாத்தி போன்று ஒரு கிராமம் முழுவதுமே பாதிக்கப்படுவது மிக அரிது.  மணக்கும் சந்தனக் கட்டைக்காக தமிழ்நாடு வனத்துறை நாறிப்போனதைப் போன்று இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது.  கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வந்தது என்று கூறிக்கொண்டு, வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என்று 269 பேர் ஒரு மலைக் கிராமத்தில் புகுந்தனர். சந்தனக்கட்டை குறித்துத் தகவல் வந்ததைப்போல, அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அச்சத்தில் வெளியேறிவிட்டார்கள் என்ற தகவல் மட்டும் இவர்களுக்குக் கிடைக்காமலா இருந்திருக்கும்? ஆனாலும், அத்தனை பேரும் அந்தச் சிறிய கிராமத்தில் புகுந்து 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 குழந்தைகளை "சிறைப்பிடித்தனர்'. இதுவே வனத்துறைக்கு மிகப்பெரிய அவமானம்.  ""அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் முறைகேடாக சந்தனக்கட்டையை வெட்டிக் கடத்திக் கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் எல்லை கடந்துபோய் மரம் வெட்டியதில் ஏற்பட்ட மோதல்தான் இந்த ரெய்டுக்கு காரணம்'' என்று பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தின் பெருமாள் (75 வயது) இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால், சந்தனக்கடத்தல் வீரப்பனை யார் வளர்த்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தி, பெண்களைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வனத்துறை அதிகாரிகளின் "தொழில்போட்டி' இருந்திருக்கிறது.  இந்தக் கிராம மக்கள் சந்தனக்கட்டைகளை வெட்டினார்கள் என்பது வனத்துறையின் வாதமாக இருந்தாலும், அது உண்மையாகவே இருந்தாலும், இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மரங்களை வெட்டிக் கொடுத்தவர்களாக இருந்திருப்பார்களேயொழிய, சந்தன மரங்களை விற்றுக் கொழித்தவர்கள் அல்ல என்பது சர்வநிச்சயம். இந்த உண்மை தெரிந்திருந்தும், இந்த மக்கள் மீது இத்தனை வன்மத்துடன், இத்தனை பேர் கும்பலாகச் சென்று வன்கொடுமை செய்கிறார்கள் என்றால், சந்தனமரத்தில் கிடைத்த லாபத்தின் பெருந்தொகை எவ்வளவாக இருந்திருக்கும்! சந்தன எண்ணெய்க் கூடத்தில் சந்தனக்கட்டைகள் தீப்பற்றி எரிந்துபோனதாகச் சொல்லப்படும்போது, இவை கணக்குக் காட்டப்படுவதற்காக வனத்துறையால் நாடகம் ஆடப்பட்டதோ என்று சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?  இந்தியாவின் மையப் பகுதியான தண்டேவாடாவிலும், தெலங்கானாவிலும் இவ்வாறு பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையின் விளைவுதான் இன்று மாவோயிஸ்ட் பிரச்னை. இந்திய அரசும், ராணுவமும்கூட அங்கே உள்ளே நுழைய முடியாத அளவுக்குப் பெரும்பிரச்னையாக மாவோயிஸ்ட் பிரச்னை உருவெடுக்கக் காரணம், இதுபோன்ற சில சம்பவங்களும், வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சுயநலமுமேயாகும்.  ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய தீவிரவாத அமைப்புகள் தலையெடுக்கவில்லை. சில நேர்வுகளில் ஒரு சிலர் தீவிரவாதத்தில் இறங்கியிருந்தாலும்கூட அவர்கள் மிகச் சிலராகவும் அவர்களுக்கு மலைவாழ் மக்களின் ஆதரவு இல்லாமலும் போனதற்குக் காரணம், 19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.  சந்தன மரத்தின் பெயராலும், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் பெயராலும் வனத்துறையினரும் காவல்துறையினரும் பழங்குடியினர் மீது நடத்திய அத்துமீறல்கள் கொஞ்சமல்ல. வாச்சாத்தி கிராமம் வெளியில் தெரியவந்த மிகச் சில நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், வெளியில் வராத சோகங்கள் இன்னும் பல மலைக்கிராமங்களில் புதைந்து கிடக்கின்றன. அந்த அநியாயங்களுக்குத் தீர்ப்பு வழங்க, கலையாத சாட்சியாய் காத்து நிற்கிறது காடு.  தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாச்சாத்தி கிராமத்துக்கு நியாயம் வழங்கி இருக்கிறது. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் விரும்பிய வேலையை தேர்வு செய்ய உரிமை இல்லை: தில்லி உயர் நீதிமன்றம்



புது தில்லி, ஜன.17: கருணை அடிப்படையில் ஒருவரை பணியில் நியமிக்கும்போது தனக்கு விருப்பமான பணியில் நியமிக்குமாறு அரசை வலியுறுத்த அவருக்கு உரிமை இல்லை என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தில்லியில் லேடி ஸ்ரீ ராம் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ரஞ்ஜோத் சிங் என்பவரின் தந்தை மூத்த உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஏறக்குறையை 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ரஞ்ஜோத் சிங்கின் தந்தை இறந்தார்.இதைத் தொடர்ந்து ரஞ்ஜோத் சிங்குக்கு கருணை அடிப்படையில் இக்கல்லூரியில் நூலக உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிக்கு வழங்கிய ஆலோசனைப்படி தன்னை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் நியமிக்குமாறு வலியுறுத்தினார். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.எனவே இந்தப் பணி நியமனத்தை எதிர்த்து ரஞ்ஜோத் சிங் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.நூலக உதவியாளர் பதவி தனது கண்ணியத்துக்குக் குறைவானது. தனது கல்வித் தகுதிகளுக்கு இணையான பணி அல்ல. எனவே தன்னை இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியில் நியமிக்குமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என்.அகர்வால் அளித்த தீர்ப்பு வருமாறு:கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்போது, தனக்கு விருப்பமான குறிப்பிட்ட பணியில் நியமிக்குமாறு உரிமைகோர யாருக்கும் அதிகாரம் கிடையாது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.மேலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்போது, இறந்தவரின் வாரிசுதாரர் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளை வைத்துக் கொண்டு தனக்கு விருப்பமான பணியில் நியமிக்குமாறு உரிமைகோர சட்டத்தில் இடமில்லை.இதுபோன்ற நியமனங்கள் செய்யும்போது, பகிரங்கமான வேலைவாய்ப்பு மற்றும் தகுதி ஆகிய பொது விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பணியின்போது இறந்தவரின் வாரிசுதாரருக்கு வேலை வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்



புது தில்லி, ஜன. 17: தன்னுடைய உயிருக்கு எதிராளியால் ஆபத்து நேரிடலாம் என்ற சூழலில், தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியது.தற்காப்புக்காக கொலை செய்வதை சட்டம் அனுமதிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்தனர்.இந்த வழக்கு விவரம்:பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி நிலத் தகராறில் தனது மாமா குர்சரண் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக தர்ஷன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.தர்ஷன் சிங்கின் தந்தை பக்தவார் சிங்கை பயங்கர ஆயுதத்தால் தலையில் தாக்கிய பிறகு, தர்ஷன் சிங்கையும் தாக்க குர்சரண் சிங் முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் குர்சரண் சிங்கை தர்ஷன் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தற்காப்புக்காக எதிராளியைக் கொலை செய்வது குற்றமல்ல என இந்திய தண்டனைச் சட்டத்தின் 96, 106}வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உத்தரவிட்டது.எனினும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தர்ஷன் சிங்குக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் சிங் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை விசாரித்து, தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்:சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் ஒருவரின் உயிருக்கு எதிராளியால் ஆபத்து ஏற்படக் கூடிய சூழலில், அந்த நபர் கோழையாக இருக்க வேண்டியதில்லை.ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் நேரிடும் போது, அச்சத்தில் தப்பிச் செல்வதற்குப் பதிலாக தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வது குற்றமாகாது என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பல முறை தீர்ப்பளித்துள்ளது.சமூக நீதி அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, தனிநபர் ஒருவர் தன்னைக் காத்துக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது.எதிராளியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதுபவர் தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்யலாம். எதிராளி உண்மையிலேயே தாக்குதல் நடத்தாமல் அல்லது காயம் ஏற்படுத்தாமல் இருந்தாலும்கூட, அவரால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக் கருதுபவர் தனக்குள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தலாம்.எனினும், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துபவர் எந்தச் சூழலில் அதைப் பயன்படுத்தியுள்ளார், அவருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை ஆய்தறிந்தே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பானது, பிற வழக்குகளுக்கும் பொருந்தும் எனக் கருத முடியாது.சட்டம் அனுமதித்துள்ள இந்தத் தற்காப்பு உரிமையை ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தலாம். பதிலடி அல்லது பழிவாங்கும் நோக்கில், மற்றொருவரைக் கொலை செய்வதற்கு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

எனவே, சிங்கள வன்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழர்கள் மேற்கொண்ட எந்தஉயிர்ப்பறிப்பும் கொலையாகாது. ஆகவே, யாரும் குற்றவாளிகள் அல்லர் என்பதை உலகிற்கு உணர்த்திய உச்ச மன்ற நீதிபதிகளுக்கு நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 3:26:00 AM

அப்போ என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி தொல்லை பண்ணும், கொடுக்கவில்லையெனில் பொய்கேஷ் போடுவேன், இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டும் போலிஸ்காரனை நான் தற்பாதுகாப்புக்காக கொலை செய்யலாம். சரியான தீர்ப்பு

By Raja
1/18/2010 4:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 16 செப்டம்பர், 2009

சிதம்பரம் நடராசர் ஆலய வழக்கு:
தீட்சிதர்கள் மேல்முறையீடு மனு தள்ளுபடி



சென்னை, செப். 15: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் செயல் அதிகாரி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது தீட்சிதர்கள் முறைகேடுகள் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்து இந்து அறநிலையத்துறை 05.08.1987-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொண்டார். நீதிபதி கே. ரவிராஜபாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொது தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது.யார் கட்டியது? சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசர்களால் 10 முதல் 13-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டுள்ளது. சைவர்கள் மற்றும் வைணவர்கள் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளனர். எனவே, இந்த கோயில் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. நியமன உத்தரவு சரியானதே: நடராஜர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்துக்கு பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறையான கணக்கு எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆலயத்தை நிர்வகிக்கும் கடமையிலிருந்து பொது தீட்சிதர்கள் தவறிவிட்டனர் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயிலுக்கு வழங்கப்பட்ட "கட்டளைகள்' மற்றும் நிலங்களை அடையாளம் காணவும், வருவாயைப் பெருக்கவும் செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே. சிதம்பரம் நடராஜர் ஆலயச் சொத்துகளை முறையாக நிர்வகித்திருந்தால், திருப்பதி மற்றும் பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறியிருக்கும். வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நடராஜர் ஆலயத்தைப் புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் ரூ. 50 கோடியிலான திட்டத்தை 13-வது நிதி கமிஷனிடம் செயல் அதிகாரி அளித்துள்ளார். நடராஜர் ஆலயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் ஆர்வத்தை இது காட்டுகிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: செயல் அதிகாரிக்கான பணிகளும், அதிகாரங்களும் அரசாணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல் அதிகாரி நியமனத்தால் பொது தீட்சிதர்கள் யாரும் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களும், செயல் அதிகாரியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் அதிகாரியும் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியமிக்க கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியதுபோல் ஆகும். அவ்வாறு செய்தால் பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

கருத்துக்கள்

அறம் வென்றது! இறைநெறி தழைத்தோங்கத்தமிழ் வழிபாடே வழிவகுக்கும் என்பதை உணர்ந்து அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே இருக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *