வியாழன், 17 செப்டம்பர், 2009

தூக்கு மேடை



சராசரி மனிதன் சட்டங்களை மதித்து நடப்பதற்கு முக்கியக் காரணம் சட்டத்தை மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பயம் ஒன்றுதான். ""நாம் அனைவரும் நமது மனதில் தூக்குமேடையைச் சுமந்து கொண்டிருக்கிறோம்'' என்பது உண்மையே. தூக்கிலிடும் தண்டனையை நினைத்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வருவது இயற்கை. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவைப் பிராட்டி. அத்தகைய உயர்ந்த பிறப்பினை மாய்ப்பதோ மாய்த்துக்கொள்ளத் துணிவதோ கொடுமையிலும் கொடுமை. ஆனால் சட்டப்படி நிறைவேற்றப்படும் இந்தத் தண்டனை சமுதாய நலன் கருதி வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். திருமணமான இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தி, கொலைசெய்த வழக்கில், கொலைசெய்த கொடுமைக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தது செய்தியாக வந்தது. மரண தண்டனைச் சட்ட ஏடுகளில் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல மேலைநாடுகளில் மரணதண்டனை, சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது, உடம்பை நாலுபாகமாகக் கிழிப்பது போன்ற கோரமான முறையில் குற்றம்புரிந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி சரித்திர ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தண்டனையின் அடிப்படை நோக்கம் மற்றவர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும், குற்றவாளி புரிந்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக வேதனையுற்று மடிய வேண்டும் என்பதே ஆகும். மைக்கேல் போக்கால்ட் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் "ஒழுக்கமும் தண்டனையும்' என்ற பிரசித்தி பெற்ற புத்தகத்தில், பிரான்ஸ் நாட்டில் "குவார்டரிங்' என்ற கொடூர முறையில் தண்டிக்கப்பட்டவரின் கை, கால்களை நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் அந்தக் குதிரைகள் இழுக்கத் துடிதுடித்து அங்கம் அங்கமாகச் சிதையுறுவதை வர்ணித்துள்ளார். வதையுறுபவர் அருகில் சென்று பாதிரியார், "என்ன சொல்லுகிறாய்' என்று வினவ, "கடவுளே என்னை அழைத்துக்கொள், பாவியாகிய என்னை ரட்சிப்பாய்' என்று கூக்குரலிடுவார் என்று, பொது இடத்தில், மக்கள் பார்வையில் 1757-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனை விவரிக்கப்பட்டுள்ளது. தலையை ஒரே வெட்டில் துண்டிக்கும் "கில்லட்டின்' முறையும் பிரான்ஸ் நாட்டில் மக்கள் புரட்சியின்போது கையாளப்பட்டது. மரண தண்டனை கோரத்தின் எல்லை தாண்டியதால் அம்முறை முற்போக்குச் சிந்தனையாளர்களால் வெறுக்கப்பட்டு மரண தண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இந்திய தண்டனைச் சட்டப்படி கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்க வேண்டும். மிக அரிதான வழக்குகளில் மட்டும் இந்த அதிகபட்சத் தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பதால் இது ஒரு விதியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை சுதந்திர இந்தியாவில் சுமார் 1500 கொடுங்குற்றம் புரிந்தவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய ஆதாரமான புள்ளிவிவரம் இல்லாததால், மனித உரிமை அமைப்புகள் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வேலூர் பெண்கள் சிறையில் 1947-ல் இருந்து 71 பெண் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 68 பெண்களுக்கு மேல்முறையீட்டு மனுவில் தண்டனை குறைக்கப்பட்டது. மூன்று பெண்கள் மட்டும் தூக்கிலிடப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறையில் கடைசியாக 1995-ம் ஆண்டு ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். சேலம் மத்திய சிறையில்தான் அதிகபட்சமாக 102 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சென்னை, மதுரை, கோயமுத்தூர் சிறைகளில் தலா சுமார் 60 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது 18 மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமிழகச் சிறைகளில் உள்ளனர். அவர்களது மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்தியாவில் கடைசி மரண தண்டனை 2004-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்துக்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவர் கோல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 366(1) பிரிவின்படி மரண தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யலாம் அல்லது சட்டத்தில் உள்ளபடி வேறு குறைந்த தண்டனை விதிக்கலாம் அல்லது தண்டனையை ரத்து செய்யலாம். மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மரண தண்டனையை எதிர்த்துத் தண்டிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம். அதற்கு மேல் கருணை மனு அனுப்பலாம். கருணை மனு பரிசீலிக்கப்பட்டு முடிவாக நிராகரிக்கப்பட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டிக்கப்பட்டவர் நிலை விநோதமானது. அவர் தண்டனை அனுபவிக்கும் இல்லவாசி அல்ல. அவரைப் பாதுகாப்பாக ஆரோக்கியமாக உயிரோடு சிறையில் வைக்கும் நோக்கம் அவரது தண்டனை, முடிவாக உறுதி செய்யப்பட்ட பிறகு சட்டப்படி மரண தண்டனை நிறைவேற்ற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவரை உயிரோடு பாதுகாப்பதே சட்டப்படி உயிரை மாய்ப்பதற்காக! ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனை நிறைவேற்றும் முறை மாறுபடுகிறது. அமெரிக்காவில் முதலில் மின்சார நாற்காலியில் தண்டனையுற்றவரை உட்கார வைத்து உயிர் எடுக்கப்பட்டது. இப்போது அம்முறை இல்லை. விஷஊசி மூலம் நினைவிழக்கச் செய்து வலியில்லாமல் உயிரை எடுக்கும் முறை. சில நாடுகளில் துப்பாக்கியால் சுடும் முறை. நமது நாட்டில் உயிர் போகும்வரை தூக்கிலிடும் முறை அமலில் உள்ளது. இந்த முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 1983-ம் ஆண்டு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் வழி கொடுமைப்படுத்தும் முறையல்ல என்று தீர்ப்புக் கூறியிருக்கிறது. மரண தண்டனையுற்றவர்கள் சிறைவிதிகளின்படி சிறையில் தனியாக ஓர் அறையில் வைக்கப்பட வேண்டும். முழுநேரப் பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும். அவரது உயரம், எடை எவ்வளவு என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு தூக்குமேடைக் கயிறு அளவோடு கட்டப்படும். நெம்புகோலால் நகர்த்தக்கூடிய இரும்புத் தடத்தில் தண்டனையுற்றவரை நிற்கவைத்து, கழுத்தில் கயிறு சரியான அளவில் இறுக்கப்படும். கருப்புத்துணியால் முகம் மூடப்படும். நெம்புகோலை இயக்குவதற்குப் பணிக்கப்பட்டிருக்கும் சிறை அலுவலர் மனதிடத்தோடு சட்டென்று நெம்புகோலை இழுக்க வேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத்தளம் திடீர் இயக்கத்தால் விலகி தண்டனையாளி முழுமையாக உடம்பு பளுவில் தொங்கி உயிர்விடுவார். பணியில் இருக்கும் மருத்துவர் உயிர் பிரிந்துவிட்டது என்று உறுதி செய்த பிறகு, உடல் வெளியே எடுத்துச் செல்லப்படும். உடலை வெளியே எடுத்துச் செல்வதற்குப் பிரத்யேக வழி. ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தனது தீர்மானங்கள் மூலம் மரண தண்டனை, சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பலஇதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று மரண தண்டனை மனிதகுலத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாகும். மற்றொன்று மனிதாபிமானமின்றி கொடூரமான தண்டனைக்கு எவரையும் உள்படுத்தக்கூடாது என்ற மனித உரிமை மரண தண்டனை விதிப்பதால் மீறப்படுகிறது என்ற காரணமும் உண்டு. மேலும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் பிரிவு 6-ல் மரண தண்டனை பொதுவாக விதிக்கக்கூடாது. அப்படி விதித்தாலும் உரிய நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளிக்குத் தகுந்த வாய்ப்பு அளித்த பிறகு தான் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், 18 வயதுக்கு உள்பட்டவர்க்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது; கர்ப்பமுற்ற பெண்களைத் தூக்கிலிடக் கூடாது என்று பல முக்கிய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நமது நாட்டிலும் கர்ப்பமுற்ற நிலையில் பெண்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது. 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டபோது ஏழு நாடுகள் தான் மரண தண்டனை இல்லாத நாடுகள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தத் தண்டனை நீக்கப்பட்டுவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில் 142 நாடுகளில் மரண தண்டனை நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் டோகோ என்ற நாடு மரண தண்டனை நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. "ரெஜிûஸட்' என்ற இந்த அரசுக் கொலை தொடர வேண்டுமா நீக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்குப் பல மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடூரமான அரசே செய்யும் மனித உரிமை மீறல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றன. ஆனால் கொடுங்குற்றங்கள் பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் சோப்ரா குழந்தைகளைக் கொன்ற பில்லா ரங்கா இருவரும் தூக்கிலிடப்பட்டபோது எல்லோரும் ஒருமித்து ஆமோதித்தனர். வேறுவிதமான தண்டனை திருப்தி அளித்திருக்காது. ஆனால் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் அரசே கொலையாளியாகக் கூடாது, இத்தகைய உச்சகட்ட தண்டனைகள், குற்றங்கள் குறைவதற்கு மாறாக சமுதாயத்தில் எதிர்மறை உணர்வுகள், பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பது போன்ற வன்முறையைத் தூண்டக்கூடிய மனநிலை உருவாக வழிவகுக்கின்றன என்ற வாதங்களை முன்வைக்கின்றனர். காலம்தான் இந்தச் சர்ச்சைக்கு முடிவு கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக