வியாழன், 17 செப்டம்பர், 2009

9- ஆவது உலகத் தமிழ் மாநாடு எப்போது?



நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழ் மக்களிடம் ஏற்பட்டு வரும் தாய்மொழி ஆர்வத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது உலகத் தமிழ் மாநாடு. உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று இந்த மன்றம் வரையறுத்துக் கொண்டது. 1966-ம் ஆண்டு, ஏப்.17 முதல் 23-ம் தேதி வரை கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தனது தமிழ்ப் பயணத்தைத் தொடர்ந்தது இந்த மன்றம். தொடர்ந்து 1968-ம் ஆண்டு சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாடும், 1970-ம் ஆண்டு பாரீஸில் (பிரான்ஸ்) 3-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற 3 மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. 4-வது மாநாடு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு மதுரையில் 5-வது மாநாடும், பின்னர் மலேசியாவில் 6-வது மாநாடும், மோரிஷஸில் (ஆப்பிரிக்கத் தீவு) 7-வது மாநாடும், 1995-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடும் நடைபெற்றன. 8-வது மாநாடு நிறைவடைந்து 14 ஆண்டுகளைக் கடந்த பிறகும் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை. முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது. மாநாடு நடைபெறும்பட்சத்தில் தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி, வரலாறு, அகழாய்வுகள், கலைகள், தொன்மை மொழியியல் பற்றியும் பல ஆராய்ச்சி உண்மைகள் வெளிவரும். மேலும், 14 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள் மாநாட்டில் வாசிக்கப்படும். அப்போது தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். நமது பெருமையும், சிறப்பும் பழமையோடு நின்று விடக்கூடாது. புதுமைப் பொலிவு பெருகி வரும் உலகத் தமிழர்களாகிய நாமும் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும். உலக அளவில் தமிழ் ஆய்வில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். கடல் கடந்து பல நாடுகளில் வாழும் தமிழர்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். உலகில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் தாய்நாடாக விளங்குவது தமிழகம். தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் தமிழர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள், தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரின் முயற்சியுடன் விரைவில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்பதே உலகத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கு நிதிப் பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது. ஆகவே, அரசியல் தலைவர்கள், வலுவான தமிழ் அமைப்புகள் தாராளமாக நிதியுதவி செய்து, எவ்வித பாரபட்சமுமின்றி தமிழ் உணர்வையே முன்னிறுத்தி மாநாடு நடத்த முன்வர வேண்டும். தமிழ் மொழிக்கு மேலைநாடுகளில் மாநாடு நடத்தி சிறப்புப் பெற்றதும், தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழையும், தமிழர்களையும் பெருமைப்படுத்தியதுடன், தமிழ்நாடு எனப் பெயர் கண்டவர் அண்ணா. இந்த நூற்றாண்டு மாபெரும் சிறப்பு மிக்க நூற்றாண்டு. அதுதான் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு. அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்தக் காலகட்டத்திலாவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் உலகத் தமிழ் மாநாடு நடைபெறுமேயானால், அது தமிழர்களுக்கும், தமிழுக்கும் மென்மேலும் பெருமை சேர்க்கும். மொழிக்காக தங்களை அற்பணித்துக் கொண்ட அறிஞர்கள் பலர் இருந்தாலும், செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது எப்போது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக