சனி, 19 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!



சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை. அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத் தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை. கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின் திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார். இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா, இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள் ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று வாதிட்டார். அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி, அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர். இது குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்: ""நானும் நடேசனும் ராணுவ முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். புலேந்திரன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன். இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று எழுதியிருந்தார். குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர் எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி' எழுதியிருந்தார். கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக' ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை எழுதிக் கொடுத்தனர். இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன். பின்னர் மேஜர் ஹர்கிரத் சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத் தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார். எங்களை நிர்ப்பந்தப்படுத்தி இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால் அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8 பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை செய்யுங்கள்' என்று கேட்டோம். இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என் மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். "எமது பிராந்தியத் தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மீறுவதாக அமைகிறது. உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத் தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப் பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது. இப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச் சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத் தீர்மானித்தோம். எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும் வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால், அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும். எமது தளபதிகளும், முக்கிய உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர். நிலைமை அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச் செல்லவே வருவேன்' என்று கூறினேன். தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது. மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள் தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார். அதற்குமேல் ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை. மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்.நாளை: எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!

கருத்துக்கள்

உணர்வற்ற பிண்டங்களே! இது போன்ற செய்திகளைப் படித்த பின்பும் சிங்களத்திற்கும் இந்தியத்திற்கும் கொடி பிடிக்கின்றீர்களே! மனித நேயமே இல்லையா? இராசீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடுஞ் செயல்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வஞ்சகப்போருக்கும் தொடர்பு இல்லை என்பது பு்ரியவில்லையா? எப்பொழுது உணர்வு பெறுவீர்கள்? (இனி ஈழத் தமிழர்களுக்கு எதிராக இதில் கருத்து பதிவோருக்காக முன் கூட்டியே என் பதிவு)

அறம் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:25:00 AM
இதனைத் தற்கொலை என்று சொல்லக் கூடாது ''இந்தியத் துரோகத்தால் தமிழ்க்காவலர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டன'' என்று உண்மையை உரைக்க வேண்டும். தொடர்ச்சியான இந்திய இரண்டகத்தால்தான் ஈழத்தமிழினம் அழிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதை இன்றைய தலைமுறையினரும் உணர வேண்டும். வருங்காலத் தலைமுறையினரும் அறிய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2009 2:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக