ஞாயிறு, 16 ஜூன், 2013

உலகத் தந்தையர் நாள்

வயிறோடு விளையாடும் கருவுடன், மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை. தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான். ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது. மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும். மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்? "விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம். ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.இன்று தந்தையர் தினம். வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம். இங்கே... அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்துகின்றனர், இவர்கள்.

தந்தைக்கே முதல் "சல்யூட்'-ஆ.கணேசன், போலீஸ் உதவி கமிஷனர், மதுரை :நெல்லை மாவட்டம் களக்காடு எனது சொந்த ஊர். தந்தை ஆறுமுகம், தாயார் அன்னபூரணி தம்பதிக்கு ஆறு மகன்கள். மூத்த அண்ணன் சுப்பையா குலதெய்வ பூசாரி. அண்ணன் சுப்பிரமணியன், ஓய்வு போலீஸ் ஏ.டி.ஜி.பி., தம்பிகள் சுந்தரம் போக்குவரத்துத்துறை அதிகாரி, பொய்சொல்லாமெய்யப்பன் பஞ்சாப் நேஷனல் வங்கி முதுநிலை மேலாளர், முத்துக்கிருஷ்ணன் தூத்துக்குடி மெக்ரான் நிறுவன இன்ஜினியர்.தந்தை மில் ஊழியர், கோயில் தர்மகார்த்தா, ஐந்து பட்டணம் ஊர் அம்மன் கோயில் சாமியாடி, தேவாரம் மற்றும் திருப்புகழ் ஓதுவார், திருச்செந்தூர் சமுதாய மடத்தின் தலைவர் என பன்முகம் கொண்டவர். அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி தெரியும். களக்காட்டில் பண்ணைத் தோட்டம், வீடு, வேலையாட்கள் என சகல வசதிகளுடன் தந்தை இருந்தார். 1967ல் பஞ்சம் வந்தபோது செல்வங்களை இழந்தார்.
"
இவ்வளவு கஷ்டத்திலும் மகன்களை படிக்க வைக்க வேண்டுமா? பேசாமல்... பூ கட்டும் தொழிலை பழகிக்கொடு,' என தந்தையிடம் உறவினர்கள் கூறினர். எனினும், எங்களை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும், என்பதே அவரது தீர்மானமாக இருந்தது. இதற்காக, கந்துவட்டிக்கு கடன் வாங்கி எங்களை படிக்க வைத்தார். சொத்துக்களை விற்று வட்டி கட்டினார். நான் 1981ல் போலீஸ் எஸ்.ஐ.,யானேன்.என் தந்தை படிக்காதவர். பள்ளி, கல்லூரிகளின் தாளாளர் அல்ல. எனினும், அவருக்கு ஊர்க்காரர்கள் "கல்வித்தந்தை' என பெயர் வைத்தனர். 96 வயதில் இறந்தார். பெற்றோர் நினைவாக பூர்வீக வீட்டை கோயிலாக்கி, ஆண்டு தோறும் குருபூஜை நடத்தி வருகிறோம். தினமும் தந்தை படத்திற்கு பூஜை செய்து "சல்யூட்' அடிப்பேன். இரவு தூங்கும் முன் பெற்றோரை வணங்கி விட்டு தூங்குவேன். ஏணிப்படியாக இருந்து எங்களை உயர்த்தி விட்டு அவர் கோபுரமானார்.தொடர்புக்கு 98435 44199

குறிக்கோளுக்கு உரமிட்டவர் என் தந்தை-என்.அறிவுசெல்வம், டி.ஐ.ஜி., திண்டுக்கல் :நான் பிறந்தது விழுப்புரம் மாவட்டம் அன்னமங்கலம் கிராமம். எனது தந்தை நடேசன்,91, ஆரம்பபள்ளி ஆசிரியர். திண்டிவனத்தில் ஆங்கில பள்ளியில் 6ம் வகுப்பு சேர்த்தார்.நான் ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் போது, ஊக்கப்படுத்தும் வகையில், 25 பக்கம் வரை கடிதங்கள் எழுதுவார்.நான் ஐ.ஏ.எஸ்., எழுதி தோல்விகளை கண்டேன். அப்போது, எக்காரணத்தை கொண்டும், குறிக்கோளை விடாதே, என தையரிம் ஊட்டினார். நான் உயர் கல்வி படிக்க, நிலத்தை விற்றார். "கடந்த 1990ல் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் பணியில் சேர்ந்தேன். "இந்த வேலை சந்தர்ப்பத்திற்கு கிடைத்ததுதான். இதில் திருப்தி அடையக்கூடாது' என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, குரூப்-1 தேர்வு எழுதி வெற்றிபெற்று டி.எஸ்.பி.,யானேன். எந்த ஊரில் பணியாற்றினாலும், எனது தந்தையை என்னுடன் அழைத்து வந்து விடுவேன். தொடர்புக்கு 98408 55903

தந்தை, மகன் உறவில் கசப்புக்கு இடமில்லை-எம்.என். ராமதாஸ், ஸ்பின்னிங் மில் அதிபர்,விருதுநகர் :தந்தை எம்.நடராஜன், 1946ல் சேட்டு பஞ்சு கடையில், நான்கு ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து, 1953ல் ராம்கோ குழுமத்திற்கு பஞ்சு வாங்கும் புரோக்கரானார். 1986ல் சொந்தமாக பஞ்சுக்கடை வைத்தார். 1992 ல் சொந்தமாக ஸ்பின்னிங் மில் துவக்கினார். 2007 ல் பிரைவேட் லிமிட்டெட் ஆக்கினார். தனது வாழ்நாள் முழுக்க தொழிலில் கற்றுக்கொண்ட நுணுக்கங்களை, சில நாட்களில் கற்றுக்கொடுத்து, எங்களது சகோதரர்கள் 5 பேரையும் தொழில் அதிபர் ஆக்கினார். தொழிலில் நேர்மை, துணிச்சல் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என, அவர் சொன்ன தாரக மந்திரம்தான், இன்று வரை எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. 160 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. நானும் எனது சகோதரர்களும், அப்பாவுக்கு எந்த குறைவும் வைக்காமல்
பாதுகாத்தோம். தந்தை மகன் உறவில், என்றுமே கசப்பு ஏற்பட்டதேயில்லை. அவர் காட்டிய வழிதான், இன்றும் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. அவர் எங்களுடன் இல்லை என்றாலும், எங்களின் உள்ளங்களில் நிறைந்து இருக்கிறார். தொடர்புக்கு 98423 43157.

அப்பாவுக்காக ஐ.ஏ.எஸ்., ஆசையைத் துறந்தேன்-எம்.மகேஸ்வரி, உதவி கமிஷனர், வணிகவரித்துறை, மதுரை:அப்பா மணிமுத்து, பத்தாவது வரை படித்தவர். மதுரை வேடர்புளியங்குளத்தில் சொந்தநிலத்தில் விவசாயம் செய்கிறார். நான் மூத்தவள், அடுத்து இரண்டு தம்பிகள். வெறும் வார்த்தையல்ல... நிஜமாகவே, எங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எங்கள் அப்பா. செருப்பு அறுந்து போனால், பத்துமுறை தைத்து அணிவார். ஆனால் மதுரையில் எங்கு புத்தக கண்காட்சி நடந்தாலும், எங்களை அழைத்துச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வார். புத்தகங்கள் தான் எங்களை திசைமாற்றும் என்று சொன்னதோடு, வாசிப்பில் ஆர்வத்தையும் ஏற்படுத்தினார். அவரும் விரும்பி படிப்பார்.நான் இரண்டாவது படிக்கும் வரை, படிப்பில் பிரமாதமில்லை. ஒருமுறை திருக்குறள் போட்டியில் நான் தோற்றுவிட்டேன். ஆனால் அப்பாவிடம் போய், "நான் தான் முதலிடம் பெற்றேன்' என்று சொன்னேன். பரிசளிப்பு தினத்தன்று அப்பாவும் வந்துவிட்டார். முதல்பரிசு வேறொருவருக்கு கொடுத்தபோது, "உனக்கு ஏன் கொடுக்கலை' என்று கேட்டார். "அன்னைக்கு நான்தான் முதல் பரிசுனு சொன்னாங்கப்பா' என்று பொய் சொன்னேன்.ஆனாலும் திருக்குறள் வாங்கி கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிலிருந்து படிப்பை நோக்கி என் பாதை சென்றது. திருக்குறள் மாவட்ட, மாநிலப் போட்டிகளில் முதலிடம் பெற்றேன். அப்பாவின் ஆசைப்படியே பி.எஸ்சி., விவசாயம் படித்தேன். எம்.எஸ்சி.,யில் நான்கு பாடங்களில் தங்கப்பதக்கம் பெற்றேன். அத்தனையும் அப்பா காட்டிய புத்தகப் பாதை தான் காரணம்.நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. ஐ.ஏ.எஸ்., ஆனபின் வேறு மாநிலம் சென்றால், அப்பாவை பிரிய நேரிடும் என்பதாலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வை தவிர்த்தேன். குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றேன். இப்போதும் வாரம் ஒருமுறை அப்பாவை பார்த்தால் தான், அடுத்த வாரம் தொடர்ந்து வேலை செய்வதற்கு புதிய தெம்பு கிடைத்தது போலிருக்கும். அடுத்த பிறவியில், அப்பா என் பிள்ளையாக பிறக்கவேண்டும். அவருக்கு நான் சேவை செய்ய வேண்டும். தொடர்புக்கு 98942 04908
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை-இன்று உலக தந்தையர் தினம் - :

அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார். பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது. குடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) கொண்டாடப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும், இந்தியாவிலும் இத்தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தந்தைக்கு, நேரிலோ, போனிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடலாம். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டும்.
எப்படி வந்தது:

அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக இந்நாளை அறிவித்தார்.










பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம்! இன்று உலக த் தந்தையர்  நாள்
 

இந்திய அரசின் அகங்காரமான திமிர்: வைகோ

இந்திய அரசின் அகங்காரமான திமிர்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று தஞ்சையில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தது, தமிழக மக்களை எப்படி வேண்டுமானாலும் வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம் என்ற ஆணவத்தின் பிரதிபலிப்பாகும். தமிழக முதலமைச்சர் அவர்கள், சிங்கள இராணுவத்தினரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியை அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. ஆனாலும் மத்திய அரசு, சிங்கள இராணுவத்தினரை வெளியேற்றவில்லை.
மத்திய அரசின் இந்த மமதைப் போக்கு தமிழக மக்களின் மான உணர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் விடப்பட்டுள்ள சவால் ஆகும்.இந்த மண்ணில் தான் மொழிப்போரில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிகளையே தமிழ் இளைஞர்கள் எதிர்கொண்டனர் என்பதும், ஈழத் தமிழர்களைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட19 வீரத் தமிழ் இளைஞர்கள் மரணத் தீயை அணைத்துக் கொண்டனர் என்பதும் தமிழகத்தின் வீர வரலாறு ஆகும். ஆனாலும் இதனை எல்லாம் துச்சமாகக் கருதி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் இழைத்து வினை விதைத்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, அதற்குரிய வினையை அறுவடை செய்யும் காலம் வந்தே தீரும்.
சிங்கள இராணுவத்தினரை வெளியேற்ற 18 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் முற்றுகையிட குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்துள்ளன.இந்த அறப்போரில் நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்களும், கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கூறியுள்ளார்.

தமிழுக்கு த் தொண்டாற்றிய சப்பானியர்!

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,00:00 IST


தமிழுக்கு த் தொண்டாற்றிய சப்பானியர்!
தமிழ் மொழிக்கு தொண்டு செய்ததற்காக, பிரதமரிடமிருந்து  தாமரை த திரு (பத்மசிரீ) விருது பெற்ற, தமிழறிஞர் நொபுரூ கராஷிமா: நான், ஜப்பான் நாட்டை சேர்ந்தவன். தமிழகத்தின் பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க, பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஆனால் நான், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், ஜப்பானிலிருந்து பல ஆயிரம் மைல் தூரத்தை கடந்து, தமிழகம்
வந்தேன். தமிழ் மொழியை கற்று, புலமை பெற்றேன்.
நான், வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் என்பதால், தமிழக கல்வெட்டுகளையும், தமிழினத்தின் வரலாறு தொடர்பான நூல்களையும் படித்து, தென்னக வரலாற்றை அறிந்து கொண்டேன். தமிழக கல்வெட்டுகள் தொடர்பாக நான் ஆராய்ந்தவற்றை, 10க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளேன். இவை, கல்வெட்டு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக உள்ளன.
தமிழ் பற்றிய ஆராய்ச்சி முடிந்ததும், மீண்டும் ஜப்பான் சென்று, டோக்கியோ பல்கலை கழகத்தில், தெற்காசிய வரலாற்று பேராசிரியராக பணியாற்றினேன். டாய்ஷோ பல்கலை கழகத்தில், இந்தியவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிய போது, என்னை போன்று பல ஆராய்ச்சி மாணவர்களை
உருவாக்கினேன். நான், "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்' தலைவராக பணியாற்றும் காலத்தில், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தஞ்சையில் நடைபெற்ற, "எட்டாவது உலக தமிழ் மாநாட்டை' வெற்றிகரமாக நடத்தினேன்.
தமிழுக்கு தொண்டு செய்ததற்காக, கடந்த ஏப்., 5ம் தேதி, "பத்மஸ்ரீ' விருது வழங்கி, பாராட்ட அழைத்த போது, என் உடல் நிலை சரியில்லை. அதனால், பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானிய பயணமாக சமீபத்தில் வந்த போது, என்னிடம் விருது வழங்கினார். சக்கர நாற்காலியில் நான் அழைத்து வரப்பட்ட போது, பிரதமருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்த நான், இறுதியாக, "நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.

நகர்த்தலும் உயர்த்தலும் -லிப்டிங்அண்டு ஷிப்டிங்!

பள்ளத்தில் உள்ள வீட்டை, மேல் நோக்கி உயர்த்தும் புதிய தொழில்நுட்பத்தை கூறும்,
இன்ஜினியர் சுஷில்: நான், ஆரம்பத்தில் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் தான் ஈடுபட்டிருந்தேன். கன்ஸ்ட்ரக்ஷன் தொடர்பான ஆராய்ச்சிக்காக, வெளிநாடுகளுக்கு சென்ற போது, பள்ளத்தில் உள்ள வீட்டை, 3 அடிக்கு மேல் உயர்த்தும் தொழில்நுட்பத்தை, தெரிந்து கொண்டேன். இன்று வீடு கட்டுவது, வாழ்நாள் கனவாக உள்ளது.கஷ்டப்பட்டு கட்டினால், சில காலங்களிலேயே சாலைகள் உயர்த்தப்படுவதால், ஆசையாக கட்டிய வீட்டிற்குள், மழைநீர் வரும் அளவிற்கு, சாலைகளை விட, கீழே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இக்குறைபாட்டை தவிர்க்க தற்போது, "லிப்டிங் அண்ட் ஷிப்டிங்' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் படி, வீட்டின் மொத்த தரைதளத்தையும் சுற்றி, குறிப்பிட்ட ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, "பேஸ்மென்ட்'டின் சரிபாதியை அறுத்து, அந்த இடத்தை சுற்றிலும் இரும்பு தகட்டை பொருத்த வேண்டும்.இரும்பு தகட்டின் கீழ், எல்லாபுறமும் சரியான உயரத்தில், ஜாக்கிகள் பொருத்தப்பட வேண்டும். பின்னர், தரைதளத்தில் இருக்கும் பைப் லைன், செப்டிக், டிரெய்னேஜ் போன்ற கனெக்ஷன்கள், டெம்ரரியா செதுக்கி, எல்லாம் சரியாக அமைந்த பின், "கவுன்ட் டவுன்' ஆரம்பிக்கும். பள்ளத்தில் உள்ள வீட்டை உயர்த்தும் இத்தொழில்நுட்பம், முழுக்க முழுக்க, மனித உழைப்பை நம்பியே செய்யக் கூடிய வேலை.இயந்திரங்களை பயன்படுத்தாததால், நொடிக்கு நொடி, கவனமாக செயல்படுவது முக்கியம். எல்லா ஜாக்கிகளும் சரியான நேரத்தில், 108 தடவை சரியாக இயக்கப்பட்டால், கட்டடம், 4 அங்குலம் உயர்ந்து விடும். தனி வீடு, அபார்ட்மென்ட், காம்ப்ளக்ஸ் என, எதை வேண்டுமானாலும் இம்முறையில் உயர்த்தலாம், நகர்த்தலாம். வீட்டின் அமைப்பு மாறாமல் இருப்பதோடு, கட்டடத்தின் ஆயுளும் தொடர்கிறது.இதனால், நேரம், புது வீடு கட்டும் பணம் போன்றவை, நமக்கு மிச்சமாகின்றன. ஐரோப்பிய நாடுகளில், சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம், விரைவில் இந்தியாவில் பயன்படுத்தும் நிலை வரும்.

மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்




வருத்தமான வரலாற்று ப் பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கருங்கல்லும், சுண்ணாம்பும், நேர்மையும், உண்மையும் கலந்து 1934ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே பெரியநீர்தேக்கமாகவும் விளங்கியது.


அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கும். நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படும். அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கும். எங்கும் சசந்தோஷம் பொங்கியிருக்கும்.


ஆனால் இப்போது நிலமையே வேறு, கடும் வறட்சி காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடுமையாக குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் சில நாள் நீடித்தால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட மக்களின் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. 16 கண் மதகு அருகே தண்ணீருக்கு பதில் காய்ந்த செடிகளும், கொடிகளும், கற்களும், குப்பைகளும் கிடக்கின்றன. மின்சாரம் எடுப்பதற்காக தண்ணீர் செல்லும் சுரங்கம் வறண்டு காணப்படுகிறது. இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் வற்றிப்போய், வறண்ட வெடிப்புகளுக்கு மத்தியில் நந்தியும், தேவாலயத்தின் இரட்டை கோபுரமும் சோகக்கதை சொல்லியடி வேதனையோடு நிற்கின்றது.


பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணைநீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.


அணையில் 120 அடி தண்ணீர் தேங்கி நின்றால் 9,347 கோடி கனஅடி தண்ணீர் நமக்கு கிடைக்கும்


மேட்டூர் அணையானது மழை நீரையும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளது. இந்த இரண்டுமே பொய்த்துப்போன நிலையில் தற்போது அணையின் நிலமை கண்ணீரை வரவழைக்கிறது.
விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. அணையின் மீன் வளத்தை பாதுகாக்கவும், 11 மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் அணையில் குறைந்த பட்சம் ஐந்து டிஎம்சி அதாவது 20 அடி தண்ணீரை தேக்கிவைத்திருக்க வேண்டும். ஆனால் குடிநீருக்காக நாள்தோறும் 600 கனஅடி திறந்துவிடப்படுவதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கட்டாய இருப்பு தண்ணீரில் இருந்தே கைவைக்கவேண்டிய அபாய நிலை, ஆனால் வேறு வழியும் இல்லை. இந்த நிலையில் இரண்டு நாள் கர்நாடாகவில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் பெருகி வந்தது, ஆஹா! தண்ணீர் வருகிறது என சந்தோஷப்படுவதற்குள் அந்த தண்ணீரும் நின்று நிலமை பழையபடி மோசமாகிவிட்டது.
எத்தனையோ பேரை காப்பாற்ற போகும் இந்த அணை வேண்டும் என்பதற்காக பல கிராமத்தினர் தங்களது வீடுகள், நிலங்களை எல்லாம் விட்டுக்கொடுத்தனர். அணையில் நீர் பெருக, பெருக வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி பல கோயில்களும் கூட நீரில் முழ்கியது.
அந்த கோயில்களை எல்லாம் இந்த தலைமுறை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை, அவ்வப்போது நந்தி சிலையும், சர்ச்சின் இரட்டை கோபுரத்தையும் மட்டும் எப்போதாவது பார்த்து வருவார்கள்.
இந்த நிலையில் முதல் முறையாக தண்ணீரில் முழ்கியிருக்கும் வீரபத்திரன் கோயில் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வரை போய் பின் அங்கிருந்து அணைக்குள் பத்து கிலோமீட்டர் தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் செய்தால் இந்த கோயிலை இப்போது பார்க்கலாம். எப்போதும் தண்ணீரில் முழ்கியிருக்கும் இந்த கோயிலின் பக்கத்தில் கோடிப்பாடி கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராம மக்களே இந்த கோயிலை பார்த்ததாக நினைவில் இல்லை என்கின்றனர், மிகவும் வயதான பெரியவர்கள் மட்டுமே ஆமாம் இது வீரபத்திரன் கோயில், அருமையான பெருமையான கோயிலாகும், இங்கு மண்டபம், கிணறு எல்லாம் இருந்தது என்கின்றனர்.
மேட்டூரைச் சேர்ந்த ஏ.கோபிக்கு அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போதெல்லாம் மனசும் சந்தோஷத்தில் நிரம்பியிருக்கும், அணை வறண்டுவிட்டால் இவரது மனசும் வறண்டு விடும், ஆனாலும் வறண்ட வரலாறையும் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக வீரபத்திரன் கோயிலுக்கு சென்று படம் எடுத்து திரும்பியுள்ளார். அவரது படங்கள் முதன் முதலாக நமது பொக்கிஷம் பகுதியில்தான் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோபியுடன் தொடர்பு கொள்ள: 9566997483.
-  எல்.முருகராசு

Bookmark and Share

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்டு.



Bookmark and Share
  • தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்டு.
     
    உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.
    அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்
    கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
    கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.
    பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.
    பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.
    பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.
    பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.
    அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.
    கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.
    இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.
    ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.
    அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.
    விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.
    அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.
    இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.
    கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.
    சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.
    இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.
    எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் "என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.
    சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.
    .சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.
    - எல்.முருகராசு,






மன்னர் திருமலை நாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம்

திருமலை நாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம்!






மதுரையைத் தலைநகராகக் கொண்டு திருமலைநாயக்கர் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு, மதுரைக் கோயில் நிர்வாகங்களைச் சீர்திருத்தி, எஞ்சியிருந்த அம்மன் கோயில் திருப்பணிகளை நிறைவு செய்தார். விசுவநாத நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் அமைச்சராகக் கோயில் பணிகளைச் சீர்திருத்தியபோது, வெகு காலமாக திருமுறைப்பணி நின்றுபோயிருந்ததைப் புதுப்பிக்க எண்ணி, திருவாரூர் கமலை ஞானப்பிரகாசருக்கு ஓலை அனுப்பினார்.
கமலை ஞானப்பிரகாசர் தன் தங்கை சிவகாமி அம்மாள் மகன், அலங்கார ஓதுவாரை, அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி, மதுரைக் கோயில் பணிக்கு அனுப்பி வைத்தார். அலங்கார ஓதுவார், மகன் ஆனந்த ஓதுவார், கனகசபாபதி ஓதுவார், வீதிவிடங்க ஓதுவார் குமாரன் தாண்டவமூர்த்தி ஓதுவார் ஆகியோர் காலத்தில், அவ்வப்போது ஊதியமாக அரச பண்டாரத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்த தாண்டவமூர்த்தி ஓதுவார் விண்ணப்பித்துக் கொண்டபடி, தனியாக ஒரு கிராமத்தையே ஓதுவார் பணிக்கு, செப்புப் பட்டயம் மூலமாக "தான சாசனம்' செய்து ஊதியம் பெறவைத்தார். அக்கிராமம் இன்றும் திருப்பூவணத்துக்குப் பக்கத்தில் "ஓதுவார் செங்குளம்' என்ற பெயரில் வழங்கி வருகிறது.
செப்புப்பட்டயச் செய்தி:
இச்செப்புப் பட்டயம், திருமலை நாயக்க மன்னரால் வழங்கப்பட்டது. தற்சமயம் ஓதுவார் மற்றும் ஆஸ்தானப் புலவராக என் தலைமுறையில் இருந்து வரும், என்னிடம் இச்செப்புப் பட்டயம் உள்ளது. இச்செப்புப் பட்டயத்தின் பிரதியை 1963-ஆம் ஆண்டு குடமுழக்கு மலரில் வெளியிட்டுள்ளேன். இச் செப்புப்பட்டயத்தின் தொடக்கத்தில் திரிசூலம் காணப்படுகிறது. அவ்வாறு சூலக்குறி இருந்தால், அது சிவாலயத்துக்கு விடப்பட்டுள்ளதைக் குறிக்கும். முன் பகுதியில் விஜயநகர வேந்தரின் பாரம்பரியம் சொல்லப்படுகிறது. அதன் பின்பு அவ்வேந்தரின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் பாரம்பரிய வரிசை பேசப்படுகிறது.
பட்டய விளக்கம்:
இப்பட்டயம் கூறுகின்ற செய்தியில் கூறப்படுகின்ற ஓதுவார் செங்குளம், என் தந்தைமாற் (தாண்டவமூர்த்தி ஓதுவார்) காலம் வரை அனுபவத்தில் இருந்து தற்சமயம் 1950-ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த ஜமீன் இனாம் ஒழிப்பில், அக்கிராமம் எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டது. அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகை தேவஸ்தானம் கையில் வரப்பெற்று அத்தொகையின் வட்டி மட்டும் பெற்று இன்றும் தொடர்ந்து திருமுறைப்பணி செய்யப்பட்டு வருகிறது.
இராஜராஜன் காலத்தில் திருமுறை ஓதுவார்க்கு மானியம் தந்து ஆதரித்தைக் கல்வெட்டு கூறுவதற்கு முன்பே, பல்லவரும் பாண்டியரும் திருமுறை ஓதுவார்களை ஆதரித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆனால், பட்டயம் எதுவும் கிட்டவில்லை. திருமலைநாயக்கர் கொடுத்த செப்புப் பட்டயம் ஒன்றுதான் இன்று வரலாற்றுத் துறைக்குப் பயன்படுவதாகும்.

இயக்குநர் மணிவண்ணன் மறைவு

 https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=13f477910df8c4b1&attid=0.1&disp=inline&realattid=f_hhynrf440&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1371351223082&sads=iN1XGpUyoehnLVj3gF3IUMnxaW0&sadssc=1


தலைவணங்குகின்றது ஊடகஇல்லம்

தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து
எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே!
தமிழீழக் கனவைச் சுமந்த இதயம்
தமிழன் விடிவையே சுவாசித்த சுவாசம்
இன்று அமைதியாய் அடங்கிவிட்டது.
தன் உடலம் மீது
தமிழீழத் தேசியக் கொடியைப் போற்றுங்கள்
என்று தமிழீழத்தையும்
தமிழீழத் தேசியத் தலைவரையும்
ஆழமாக நேசித்த பொதுவுடமைவாதி!
மணிவண்ணன் - புரட்சியின் மறுபெயர்
மணிவண்ணன் - சுயமரியாதையின் மறுவடிவம்

மணிவண்ணன் அவர்கள் தமிழ்த் திரையுலகத்தில் நல்ல படைப்பாளி.
நல்ல சிந்தனையாளர். பொதுவுடமை தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்.
தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து சென்றவர். ஈழவிடுதலைக்கு முழுமையான
ஆதரவினை வெளிப்படுத்தியவர்.
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில்
பங்கெடுத்து தமிழ் உணர்வினை வெளிப்படுத்தியவர்.
இவர் தனது 59வது வயதில்
இன்று 15.06.2013 அன்று மாரடைப்பால் சாவடைந்தார்.

தமிழீழ உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்களுக்கு
ஊடகஇல்லம் தன் தலை சாய்த்து வணங்குகின்றது.
அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு இதயபூர்வமான
ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

- ஊடகஇல்லம்

இயக்குநர் மணிவண்ணன் மறைவு

திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (59) சென்னையில் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணிவண்ணன், சில ஆண்டுகளுக்கு முன் முதுகு தண்டுவடப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒரு வார காலமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மதியம் ராமாவரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தபோது, 12 மணிக்கு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது.
கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக திரையுலகில் நுழைந்தார். "கல்லுக்குள் ஈரம்', "காதல் ஓவியம்', "அலைகள் ஓய்வதில்லை', "நிழல்கள்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியதுடன், பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
1982-ஆம் ஆண்டு வெளிவந்த "கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "24 மணி நேரம்', "நூறாவது நாள்', "முதல் வசந்தம்', "பாலைவன ரோஜாக்கள்', "ஜல்லிக்கட்டு', "சின்னத்தம்பி பெரியதம்பி', "அமைதிப்படை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முத்திரைப் பதித்தார். கடந்த மாதம் அவர் இயக்கத்தில் 50-ஆவது படமாக "நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' வெளியானது.
ரஜினிகாந்த் நடித்து 1988-ஆம் ஆண்டு வெளிவந்த "கொடி பறக்குது' படத்தின் மூலம் மணிவண்ணனை வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. அதைத் தொடர்ந்து வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். "உள்ளத்தை அள்ளித்தா', "அமைதிப்படை', "முகவரி', "காதலுக்கு மரியாதை', "சங்கமம்', "பொற்காலம்' உள்ளிட்ட 450-க்கும் அதிகமான படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தார். இறுதியாக "நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் நடித்திருந்தார்.
வலது கால் பகுதியில் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் பெரிதும் உடல் நலிவுற்றார். தமிழ் ஈழ ஆதரவு கொள்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
திரையுலகினர் அஞ்சலி: மணிவண்ணன் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ஷக்தி, சிவகார்த்திகேயன், செந்தில், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ், விவேக், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, அமீர், கஸ்தூரிராஜா, பார்த்திபன், புகழேந்தி தங்கராஜ், பாக்யராஜ், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் சரண்யா, வடிவுக்கரசி, அனுராதா, கவிஞர்கள் அறிவுமதி, சினேகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொது மக்களும் மணிவண்ணனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கு: மணிவண்ணனுக்கு செங்கமலம் என்கிற மனைவி, மகள் ஜோதி, மகன் ரகுவண்ணன் ஆகியோர் உள்ளனர். மகள் ஜோதிக்கு திருமணம் முடிந்துவிட்டது. "மாறன்', "நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.' ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுவண்ணனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. மணிவண்ணனின் உடல் ராமாவரம் ஜெய்பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது வேண்டுகோளின்படி மணிவண்ணனின் உடல் மீது புலி உருவம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் கொடி போர்த்தப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை போரூர் மின் மயானத்தில் நடக்கிறது.

கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை

 கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை
                                                                                              நண்பர்களுக்கு வேண்டுகோள்

                        13-06-2013 கோயபம்புத்தூர், காந்திபுரம் சிபி ஐ.ஏ.எஸ். அகாதமியில் எழுத்தாளர்கள், நண்பர்கள் பலர் கூடி தமிழ் நேயம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்க வேண்டுமென்றும் அதன் சார்பில் சில முக்கியமான பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானித்தோம்.
 கூட்டத்தில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து, அறிஞர் செ. நாராயணசாமி, முனைவர் கோ. ஆறுமுகம், கவிஞர். அறிவன், பாவலர் இரணியன், நந்தினி பதிப்பக உரிமையாளர் திரு. வேனில், முனைவர் வே. சுகுமாரன், எழுத்தாளர் சு. வேணுகோபால், மருத்துவர் அரங்கசாமி, திரு.கு.வே.கி.செந்தில், திரு. கார்த்திகேயன், முனைவர் கு. முத்துக்குமார், முனைவர் க. ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துகொள்ள இயலாத பிற நண்பர்கள் பலர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பதாகக் கூறினர்.
                   கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்திறனாய்வு பற்றியும் மார்க்சியம், மெய்யியல் பற்றியும் தொடர்ந்து எழுதிவருவதோடு பரிமாணம், நிகழ், தமிழ் நேயம் ஆகிய சிற்றிதழ்களைச் சிறப்பாக நடத்தியவர் என்ற முறையிலும் இதர பல இயக்கப் பணிகளில் காலம் முழுதும் இயங்கியவர் என்ற முறையிலும்  கோவை ஞானி சார்பில் "தமிழ் நேயம்" அறக்கட்டளை என்றோர் அமைப்பை உருவாக்குவதென நண்பர்கள் முடிவுசெய்தனர். 

அறக்கட்டளையின் பணிகளென கீழ்காணும் சிலவற்றைத் தீர்மானித்தனர்

 1. 5000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஞானியின் படைப்புக்கள் அனைத்தையும் இலவயமாகப் பார்க்கவும் படி எடுத்துக் கொள்ளவும் உரிய முறையில் ஒரு வலைதளத்தை உருவாக்கவேண்டும்.

2. ஞானியின் விருப்பப்படி ஆண்டுதோறும் இலக்கியத் திறனாய்வுத்துறை/ படைப்பிலக்கியத் துறையில் வெளியிடப்படும் மிகச்சிறந்த நூல்கள் மூன்றைத் தக்க நடுவர்களைக் கொண்டு தெரிவு செய்து மூவருக்கும் ரூ. 25,000 வீதம் விருது வழங்குவது.

3. கோவை வட்டாரத்தில் கடந்த நூறாண்டுகளுக்கிடையில் எழுத்தாளர்கள், கவிஞர், ஆய்வாளர் ஆகியோரின் அனைத்துப் படைப்புக்களையும் எதிர்காலத் தலைமுறையினர் படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் தேவையான முறையில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும்.

4. கோவை வட்டாரத்தில் கடந்த ஒரு நூறாண்டளவில் வாழ்ந்த/ வாழும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தாம் வாழும் காலத்தில் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான நூல்களை ஒரு சேர இயன்ற அளவில் தொகுத்து மேற்குறிப்பிட்ட நூலகத்தில் பாதுகாத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும்படி வைக்கவேண்டும்.

 மேற்கண்ட பணிகளில் குறிப்பிட்ட வரிசையில் ஒவ்வொன்றாகச் செய்துமுடிக்க வேண்டும். 
 இத்தகைய அறக்கட்டளை ஒன்றை உருவாக்கும் முறையில் தற்காலிகச் செயற்குழு ஒன்றை நண்பர்கள் தெரிவு செய்தனர். தலைவராகப் புலவர் ஆதி, செயலாளர்களாக முனைவர் கு. முத்துக்குமார், திரு . கார்த்திகேயன் ஆகியவர்களோடு சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களும் செயற்குழு உறுப்பினர்களாக முடிவுசெய்தோம். அறக்கட்டளை தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழ் உணர்வு சார்ந்த இதழாளர்கள், தமிழியக்கத்தினர், தமிழாய்வு நிறுவனத்தினர் முதலிய அனைவரோடும் பகிர்ந்து கொள்வதென்றும் அவர்கள் மூலம் தேவையான தொகையைத் திரட்ட முயற்சி செய்வதென்றும் முடிவுசெய்தோம். இதுகுறித்துத் தங்கள் கருத்துரைகளைப் பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம்.
                                                                                                                     நன்றி, 
                                                                                                                                                                            செயற்குழுவின் சார்பாக‌