மேட்டூர் அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேட்டூர் அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மேட்டூர் அணையை வடிவமைத்த பொறியாளர் எல்லீசு...

மேட்டூர் அணையை வடிவமைத்த பொறியாளர்  எல்லீசு...


 
 

 

 
 
 
 
இது நமது மண் இங்கேதான் நாமும்,நமது தலைமுறையும வாழப்போகிறோம், வளரப் போகிறோம். இருந்தும் நம்மில் பலருக்கு இங்கே நம் தாய் மண்ணில் ஒரு மரம் நடக்கூட நேரமில்லை, ஆனால் நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்.

அவர்தான் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தர விட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

அணையின் அகலம் 171 அடி

அணையின் சேமிப்பு உயரம் 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.
முக்கிய குறிப்பு: கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் இருந்த தோற்றத்தையும் பின் அணை படிப்படியாக கட்டப்பட்ட தோற்றத்தையும் பழங்கால அபூர்வ படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இப்போது அந்த அணையின் அழகினை பொக்கிஷம் பகுதியில் உள்ள புகைப்படங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
 - எல்.முருகராசு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...


நிரம்புவது அணை மட்டுமல்ல நம் நெஞ்சமும்தான்...























கடந்த சில மாதங்களுக்கு முன் கடுமையாக வறண்டு கிடந்த மேட்டூர் அணை கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் மழை காரணமாக நிரம்பிவருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு , 1934-ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்ட போது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே அதிக பெரிய நீர்தேக்க அணையாகவும் விளங்கியது.

அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் நிலையில் தற்போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கிறது. நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கிறது, எங்கும் சந்தோஷம் பொங்கியிருக்கிறது.
பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணை நீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து காவிரியாக கிளம்பும் ஆறு பல்வேறு கிளை நதிகளாக பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்விக்க இருக்கிறது.

கடந்த 2ம்தேதி அணையில் கூடுதல் நீர் திறப்பின் போது நேரில் போயிருந்த போது அணையின் பல்வேறு பகுதிகளுக்கு போய் அபூர்வமான படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
-எல்.முருகராசு



ஞாயிறு, 16 ஜூன், 2013

மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்




வருத்தமான வரலாற்று ப் பதிவு... மேட்டூர் அணை வறண்டதால் வெளியே தெரியும் வீரபத்திரன் கோயில்

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி ஆற்றின் மீது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பத்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கருங்கல்லும், சுண்ணாம்பும், நேர்மையும், உண்மையும் கலந்து 1934ல் கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது, கட்டி முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே உயரமான அணையாகவும், உலகிலேயே பெரியநீர்தேக்கமாகவும் விளங்கியது.


அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது 59 மைலுக்கு பரந்து விரிந்து கடல் போல தண்ணீர் காட்சியளிக்கும். நாள்தோறும் மின்சாரம் எடுக்கப்படும். அணையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோயில், இரட்டை கோபுர தேவாலயம் எல்லாம் தண்ணீரில் முழ்கியிருக்கும். எங்கும் சசந்தோஷம் பொங்கியிருக்கும்.


ஆனால் இப்போது நிலமையே வேறு, கடும் வறட்சி காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடுமையாக குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் சில நாள் நீடித்தால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்ட மக்களின் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது. 16 கண் மதகு அருகே தண்ணீருக்கு பதில் காய்ந்த செடிகளும், கொடிகளும், கற்களும், குப்பைகளும் கிடக்கின்றன. மின்சாரம் எடுப்பதற்காக தண்ணீர் செல்லும் சுரங்கம் வறண்டு காணப்படுகிறது. இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைவாடி கிராமத்தில் வற்றிப்போய், வறண்ட வெடிப்புகளுக்கு மத்தியில் நந்தியும், தேவாலயத்தின் இரட்டை கோபுரமும் சோகக்கதை சொல்லியடி வேதனையோடு நிற்கின்றது.


பல லட்சம் ஏக்கர் டெல்டா விவசாயிகள் இந்த அணைநீரை நம்பித்தான் இருக்கிறார்கள், பிழைக்கிறார்கள்.


அணையில் 120 அடி தண்ணீர் தேங்கி நின்றால் 9,347 கோடி கனஅடி தண்ணீர் நமக்கு கிடைக்கும்


மேட்டூர் அணையானது மழை நீரையும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளது. இந்த இரண்டுமே பொய்த்துப்போன நிலையில் தற்போது அணையின் நிலமை கண்ணீரை வரவழைக்கிறது.
விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. அணையின் மீன் வளத்தை பாதுகாக்கவும், 11 மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் அணையில் குறைந்த பட்சம் ஐந்து டிஎம்சி அதாவது 20 அடி தண்ணீரை தேக்கிவைத்திருக்க வேண்டும். ஆனால் குடிநீருக்காக நாள்தோறும் 600 கனஅடி திறந்துவிடப்படுவதால் நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கட்டாய இருப்பு தண்ணீரில் இருந்தே கைவைக்கவேண்டிய அபாய நிலை, ஆனால் வேறு வழியும் இல்லை. இந்த நிலையில் இரண்டு நாள் கர்நாடாகவில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் பெருகி வந்தது, ஆஹா! தண்ணீர் வருகிறது என சந்தோஷப்படுவதற்குள் அந்த தண்ணீரும் நின்று நிலமை பழையபடி மோசமாகிவிட்டது.
எத்தனையோ பேரை காப்பாற்ற போகும் இந்த அணை வேண்டும் என்பதற்காக பல கிராமத்தினர் தங்களது வீடுகள், நிலங்களை எல்லாம் விட்டுக்கொடுத்தனர். அணையில் நீர் பெருக, பெருக வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி பல கோயில்களும் கூட நீரில் முழ்கியது.
அந்த கோயில்களை எல்லாம் இந்த தலைமுறை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை, அவ்வப்போது நந்தி சிலையும், சர்ச்சின் இரட்டை கோபுரத்தையும் மட்டும் எப்போதாவது பார்த்து வருவார்கள்.
இந்த நிலையில் முதல் முறையாக தண்ணீரில் முழ்கியிருக்கும் வீரபத்திரன் கோயில் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேட்டூரில் இருந்து கொளத்தூர் வரை போய் பின் அங்கிருந்து அணைக்குள் பத்து கிலோமீட்டர் தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் செய்தால் இந்த கோயிலை இப்போது பார்க்கலாம். எப்போதும் தண்ணீரில் முழ்கியிருக்கும் இந்த கோயிலின் பக்கத்தில் கோடிப்பாடி கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராம மக்களே இந்த கோயிலை பார்த்ததாக நினைவில் இல்லை என்கின்றனர், மிகவும் வயதான பெரியவர்கள் மட்டுமே ஆமாம் இது வீரபத்திரன் கோயில், அருமையான பெருமையான கோயிலாகும், இங்கு மண்டபம், கிணறு எல்லாம் இருந்தது என்கின்றனர்.
மேட்டூரைச் சேர்ந்த ஏ.கோபிக்கு அணையில் தண்ணீர் நிரம்பியிருக்கும் போதெல்லாம் மனசும் சந்தோஷத்தில் நிரம்பியிருக்கும், அணை வறண்டுவிட்டால் இவரது மனசும் வறண்டு விடும், ஆனாலும் வறண்ட வரலாறையும் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக வீரபத்திரன் கோயிலுக்கு சென்று படம் எடுத்து திரும்பியுள்ளார். அவரது படங்கள் முதன் முதலாக நமது பொக்கிஷம் பகுதியில்தான் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோபியுடன் தொடர்பு கொள்ள: 9566997483.
எல்.முருகராசு

Bookmark and Share