painting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
painting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூன், 2012

சொல்கிறார்கள்


"கிராமியக் கலைகளால்ஈர்க்கப்பட்டேன்!'
நலிந்து வரும் கிராமியக் கலைகளை ஊக்குவிப்பதற்காக, தக்ஷினசித்ரா ஆர்ட் கேலரி நடத்தி வரும் பெபோரா: நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், இந்தியக் கலைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதற்குக் காரணம், என் கணவர் தியாகராஜன். அமெரிக்காவில், நாங்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது, தமிழக கிராமியக் கலைகள் பற்றி, நிறைய பேசுவார். அவர் பேச்சாலும், கிராமியக் கலைகளாலும் ஈர்க்கப்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டு, தமிழகத்திற்கு வந்து விட்டேன்.இந்தியக் கலைகளின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நேரில் பார்த்த பின், இவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, "ஆர்ட் கேலரி' உருவாக்கலாம் என, முடிவு செய்தோம். எங்கள் யோசனையை ஏற்று, ஈ.சி.ஆர்.,ல் 10 ஏக்கரில், ஒரு இடத்தை, தமிழக அரசு எங்களுக்கு ஒதுக்கியது. அங்கு, தக்ஷினசித்ராவை உருவாக்கினோம்.தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் உள்ள பாரம்பரிய வீடுகளில், ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கினோம். அந்த வீடுகளை சேதப்படுத்தாமல், அப்படியே பக்குவமாக உடைத்து எடுத்து வந்து, அந்தந்த மாநிலக் கட்டடக் கலை நிபுணர்களின் உதவியுடன், இங்கு முறையாக அஸ்திவாரம் போட்டு, "பிக்ஸ்' பண்ணினோம். இப்போது பார்த்தால், கேரளாவில் உள்ளது போலவே, ஒரு வீடு இங்கு இருக்கும். ஆனால், அது இங்கேயே கட்டியது போன்று தோற்றமளிக்கும்.தினமும், ஏதாவது ஒரு கிராமியக் கலை யை மையமாக வைத்து, நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். சனி, ஞாயிறுகளில் தோல் பொம்மலாட்டம் நடத்துவோம். சீசனுக்கு ஏற்றபடி கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமாக நடக்கும். ஆண்டிற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இது தவிர, ஓவியக் கலையை வளர்க்கும் விதமாக, அடிக்கடி ஓவியக் கண்காட்சியும் நடக்கும். பாரம்பரியக் கலைகளை, வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு, "தக்ஷினசித்ரா விருது' வழங்குகிறோம்.

சனி, 26 மே, 2012

"சமூக அவலங்களைப் பேசும் ஓவியம்!'



ஓவியர் முகிலன்: இந்த சமூகத்தின் மீது நான் வைக்கும் விமர்சனம் தான் என் ஓவியம். வெறும் ரசனை சார்ந்தது மட்டுமல்ல, எந்த ஒரு கலைப்படைப்புமே, அதைச் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என நம்புகிறேன். அதனால், சமூகம் என் ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு கலைஞனும், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிதான். நானும் ஓவியங்களின் வழியாக ஒடுக்கப்படும் மக்களின் சார்பாக பேசுகிறேன்.என் ஓவியங்கள், நான் சார்ந்த அரசியலின் கருத்துக்களை பிரதிபலித்தாலும், அவற்றை வெறும் பிரசாரம் என ஒதுக்கிவிட முடியாது. சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, துவங்கிய அரசியல் ஆர்வமும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களும் தான், என் ஓவியங்களின் உள்ளடக்கத்தை மாற்றியது. இல்லையேல், நானும் மற்றவர்களைப் போல, இயற்கை ஓவியங்கள் வரைந்து கொண்டு இருந்திருப்பேன். ஒரு கிராமத்தை ஓவியத்திற்குள் கொண்டு வருதல் என்பது, மாட்டு வண்டி, தலையில் கலையம் சுமந்த பெண்கள், மருதாணி விரல்கள் என்பது மட்டுமல்ல; கிராமங்களின் சமூகப் பிரச்னைகளை சொல்வதும் தான்.ஜாதியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், இரட்டை குவளை முறையும் தான் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன. கிராமம் என்றால் எனக்கு அவைகள் தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாஸ்கோ ஆலைக்காக மலைகளை தாரைவார்ப்பதை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்காக நீர் நிலைகளைக் கையளிப்பதை என் ஓவியங்கள் வேறு கோணத்தில் பிரதிபலிக்கின்றன.எனக்குக் கிடைத்த ஆயுதமாகத்தான் நான் தூரிகையைப் பார்க்கிறேன். வணிக ரீதியாக இதுவரை என் ஓவியங்களை விற்பனை செய்தது இல்லை. எவரும் வாங்கியதும் இல்லை. மலம் வாளி சுமக்கும் ஓவியத்தை எந்த வரவேற்பறையில் வைப்பர். ஆனால், அது தான் என் ஓவியங்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நான் எதை வரைய வேண்டும் என்பதைவிட, எதை வரையக் கூடாது என்பதில் தான் தெளிவாக இருக்கிறேன்.

திங்கள், 26 மார்ச், 2012

drawing while cycling by madurai youth




மதுரை: சைக்கிள் "ஹேண்ட் பாரை' பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், "ஹேண்ட் பாரை' பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்

மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக உள்ள இவருக்கு, இந்த சைக்கிள் சாதனை ஆசை எப்படி வந்தது? ""எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். தென்மாநிலங்களில் சைக்கிளில் ஊர் சுற்றி வந்து உள்ளேன். சைக்கிள் ஓட்டியவாறு ஓவியம் வரைந்தால் என்ன? என சிந்தித்தன் விளைவுதான், இன்று 50 கி.மீ., தூரம் நிற்காமல் சைக்கிள் ஓட்டியபடி இரு கைகளாலும் மாறி மாறி ஓவியம் வரைகிறேன். தவிர, சைக்கிளின் முன் படுக்கை வசம் உள்ள "பாரில்' அட்டையை இணைத்து, அதில் இரு கைகளாலும் ஓவியம் வரைகிறேன். ஒரு வேலையை கவனமாக செய்ய வேண்டும் என்பதை, இச்சாதனை எனக்கு உணர்த்தியது,'' என்றார் கூடல்கண்ணன்.

- தினமலர்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

door pictures by santhana krishnan: கதவு சொல்லும் பண்பாட்டுக் கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

சென்னையைச் சேர்ந்த ஓவியர் சந்தான கிருஷ்ணன், தன் ஓவியங்கள் மூலம் கலாசாரத்தை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.



கதவை மட்டுமே பிரதானமாக வரைந்து, தேசமெங்கும் சுற்றி வரும் 34 வயது இளைஞர் சந்தான கிருஷ்ணன். உலகம் முழுக்க, 30க்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தி இருக்கும் இவர், தைவான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று, கை நிறைய விருதுகளை அள்ளி வந்திருக்கிறார். ஒவ்வொரு ஓவியரும் தங்கள் படைப்பின் தனிபாணி மூலம் அறியப்படுவது உண்டு. ஓவியர் மூக்கையாவுக்கு, "குதிரை'; சந்ருவுக்கு "எருது'; மனோகருக்கு "ஆடு'; பாஸ்கருக்கு "பூனை'; சந்தான கிருஷ்ணனுக்கு "கதவு'. அக்ரகாரத்து வீடுகள் தான் சந்தான கிருஷ்ணனின், "கதவு' ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் படித்த போது, கல்லூரிக்குச் செல்லும் சாலையில் இருந்த அக்ரகாரத்து வீதிகளும், வீடுகளும், கதவுகளும் ஒவ்வொரு ரகமாக இருந்திருக்கின்றன. மனதை பறிகொடுத்த போது, தொடர்ந்து கதவுகளை வரையும் எண்ணம் அவருக்கு வந்தது. சந்தான கிருஷ்ணனின், "கதவுகள்' தனிச்சிறப்பானவை.

ஒவ்வொரு கதவுக்குள்ளும், அதற்குப் பின்னாலும், சின்ன சிறுகதைகளை சொல்வது இவருடைய சிறப்பு. நிலையில் இருக்கும் சிற்பங்கள், அதனருகில் இருக்கும் சுவர் சித்திரங்கள் என, ஒவ்வொன்றும் நாம் கடந்து வந்த நாகரிக வளர்ச்சியை சொல்பவை. கதவுகளின் வழியே தெரியும் முற்றம், தாழ்வாரம், புழக்கடை, சமையலறை, புறவாசல், அதன் வழியே தெரியும் அடுத்த வீதி என, நம் வாழ்வை திரும்பிப் பார்க்க செய்பவை. நிலைப்படியில் இருக்கும் கடவுள் சிலைகள் மாறி, கண்ணாடி கிராதிகளானதும், பின்னால் வண்ணங்கள் கொண்டதும், அதன் பின் வெறுங்கதவாகி, இன்று கதவே வீடானது வரை இவருடைய கதவு ஓவியங்கள், பல அர்த்தங்களைச் சொல்லி, நம் கன்னத்தில் அறைபவை. "கதவு வெறும் கதவு மட்டும் அல்ல; அது வீட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சும் விளக்கு. நம் பண்பாட்டின், கலாசாரத்தின், குலப் பெருமையின் வெளிப்பாடு. அதனால் தொடர்ந்து கதவுகளை வரைவதன் மூலமாக, சிதைந்து போன நம் கலாசாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.

சென்னையில் இவரது ஓவியக் கண்காட்சி நடந்த போது, வெளிநாட்டில் குடியேறிய தமிழர் ஒருவர், ஓவியங்களை உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்; ஆழமாக ரசிக்கிறார் என்று அவர் அருகில் சென்று பார்த்த சந்தான கிருஷ்ணன் அதிர்ச்சியாகியுள்ளார். "ஓவியத்தை உற்றுப்பார்த்திருந்த, அவருடைய கண்கள் சிவந்திருந்தன. அடக்க முடியாமல் அழுதபடி, தன் மகளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் சென்ற என் கைகளை பற்றி, "நான் அமெரிக்காவில் குடியேறி பல ஆண்டுகளாகி விட்டன. வெளிநாட்டில் வளர்ந்த என் மகளுக்கு, எப்படி சொந்த ஊரை காண்பிக்கப் போகிறோம் என்று கலக்கத்துடன் இருந்தேன். அந்த குறையை உங்கள் ஓவியம் பூர்த்தி செய்து விட்டது. நீங்கள் வரைந்திருப்பது எங்கள் வீட்டுக் கதவு. இதற்காக எங்கள் தலைமுறையே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது' என்று அவர் கதறலோடு சொன்னார். இது என் ஓவியத்திற்கு கிடைத்த மறக்க முடியாத அங்கீகாரம்' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.

முந்தைய கால வீடுகளில், எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். வழிப்போக்கர்கள், உறவினர்கள், அயலார் என எல்லோரும் வந்து புழங்குவதற்கு கதவுகள் அனுமதிக்கும். ஆனால், இன்றைய கதவுகள் அடுத்த வீட்டு எண்ணை கூட தெரிந்து வைத்திருக்காதவை. குவிலென்ஸ் வழியாக வெளியே இருக்கிறவர்களை பார்த்த பின் அனுமதிப்பவை. "மனிதனின் பேராசையும், பெருங்கோபமும் தான் உறவுகளில் இருந்து நம்மை பிரிப்பவை. நம்மில் கண்ணுக்கு தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் கண்ணியை அறுந்து விடாமல், கதவுகள் தான் காக்க வேண்டும். அதற்காகத் தான் ஓவியங்கள் மூலம் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.' என்ற சந்தான கிருஷ்ணனின் ஆசை, "எல்லா கதவுகளும் உடைந்து போய், வெளிச்சம் பரவ வேண்டும்' என்பது தான்.

- அ.ப.இராசா -

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

ஓவியர் பார்த்தசாரதி சின்னச்சாமிக்குப் பாராட்டுகள். செய்தியாளர் ஆனந்து அத்தகைய சில படங்களையும் வெளியிட்டு இருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும்.  தொடர்பு முகவரி தெரிவித்து இருந்தால் எல்லா ஊர்களிலும் இத்தகைய ஓவியத்தமிழ்க் காட்சி நடத்த வாய்ப்பாக  இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

First Published : 06 Aug 2011 02:13:09 PM IST


தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு? இந்தக் கேள்வியை ஓவியத்தின் மூலமே எழுப்புகிறார் ஓர் ஓவியர். அவர், அமெரிக்க வாழ் தமிழரான பார்த்தசாரதி சின்னசாமி. கோவை பீளமேடு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக் கூடத்தில் நான்கு நாள்கள் நடந்த "ஓவியத்தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த ஓவியக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தோம்.இப்படியொரு கண்காட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம் என்று யாரோ விதைத்த விதை. இன்று ஆலமரமாய் கிளை பரப்பியுள்ளது. மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மட்டும் அல்ல, இந்திய மொழிகள்... ஏன் உலக மொழிகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் எந்த நகரத்தில் நாம் நின்று சுற்றிப் பார்த்தாலும், உற்றுப் பார்த்தாலும் இது தெளிவாக விளங்கும்.நமது சமூக சூழலில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி வரைய வேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், தாய்மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் என்பதை உணர்ந்தேன். அப்போது தோன்றிய உணர்வுகளுக்கு வண்ணமேற்றி ஒவியங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். எனக்கே நான் சொல்ல ஆசைப்பட்ட செய்திகளைத் தாய் மொழி நலம் விரும்பும் என் உடன்பிறப்புகளுக்குச் சொல்ல கடல் தாண்டி, ஓவியங்களைச் சுமந்து வந்தேன். "ஓவியத்தமிழ்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தக் காரணம்?தமிழில் பேசும்போது அதில் ஆங்கிலம் கலந்துள்ளது என்பதை ஓவியம் வாயிலாக வெளிபடுத்தியுள்ளேன். ஓவியம் என்பது வண்ணச் சிதறலாக மட்டுமல்லாமல் எண்ணச் சிதறலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஓவியம் வழி எனக்கு நானே சொல்லிக் கொண்ட செய்திகளை உங்கள் பார்வைக்குப் படைக்க நான் தேர்வு செய்த தலைப்பு இது.அமெரிக்காவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்இந்த ஓவியக் கண்காட்சியை ஏன் வைத்தீர்கள்?அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்தான். காரணம், அங்கிருக்கும் தமிழர்கள் நீண்ட நேரம் உரையாடுவது அமெரிக்கர்களுடன்தான். அதனால் அவர்கள் தமிழ் பேசினாலும் அதில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நாகரிகம் எனும் போர்வையில் தாய்மொழியில் பேசாமலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து "தமிங்கல'மாகப் பேசுவதும் இங்குதானே நிகழ்கிறது! அதனால்தான் தமிழ்நாட்டில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.எந்த கல்லூரியில் ஓவியம் பயின்றீர்கள்?நான் யாரிடமும் ஓவியம் பயிலவில்லை. சிறுவயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை வெ.சின்னசாமி என்னை உற்சாகப்படுத்தினார். என் உள்ளக் குமுறல்கள், மொழி சிதைவடைகிறது என்ற எண்ணத்தினால் ஏற்படும் நடுக்கங்கள் கை வழியே ஊடுருவி ஓவியமாக மாறின. நீங்கள் எந்த ஊரில் எந்த மொழியில் கல்வி பயின்றீர்கள்?நான் உதகை அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 12-ம்வகுப்பு வரை தாய்மொழியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெற்றேன். தமிழில் கற்றதால் ஆங்கிலம் வராது என்ற தவறான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன். தற்போது. ஆங்கிலம், தமிழில் நல்ல புலமையுண்டு. கொமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்.எல்., படித்தேன். தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

வியாழன், 26 மே, 2011

அலைக்கற்றை வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்குக் கண்டனம்

இதில் என்ன குற்றம் உள்ளது? எல்லாமே வெளிப்படையாக நடக்கும் பொழுது அவை படமாக்கப்படும் பொழுது வரைவதில் என்ன தவறு? ஒளிப்படத்தை விடத் தன் திறமையை நம்பிய கலைஞரை ஊக்கப்படுத்தலாம்? ஒளிப்படம் அல்லது காட்சிப்படம் எடுக்கத் தடை இருப்பின் அதனையும் நீக்கலாம். மறைமுக உசாவலில் (in  கேமரா inquiry)தான் தடை விதிக்க வேண்டும்.  காலம் மாறுகிறது. நீதிமன்றம் பழமையிலேயே ஊறிக்கிடக்கிறது. புதுமை எண்ணம்  கொண்ட நீதிபதிகள் அதனை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


2ஜி வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்கு கண்டனம்

First Published : 26 May 2011 02:34:08 AM IST


புது தில்லி, மே 25: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்த பத்திரிகை வரைபடக் கலைஞருக்கு நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கனிமொழி உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்றத்துக்குள் நின்றுகொண்டிருந்த பத்திரிகை கலைஞர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்து கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த நீதிமன்ற ஊழியர் ஒருவர் படம் வரைவதை நிறுத்துமாறு கூறினார். எனினும் அவர் நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து படம் வரைந்தார். இதையடுத்து நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் அந்த ஊழியர் புகார் தெரித்தார்.இதனையடுத்து அந்த கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவரை எச்சரித்தார்.அவர் வரைந்த படங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அவரது அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் நீதிமன்ற ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த நபர், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

திங்கள், 24 ஜனவரி, 2011

Prof.Dr.S.Ilakkuvnar : unveil of portrait: 25-1-2011 - பேராசிரியர் சி. இலக்குவனார் படத்திறப்பு விழா :


செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் தமிழ் இனப் போராளி கு.முத்துக்குமார் படத்திறப்பு தி.பி. 2041, தை 11 ( 25-1-2011), செவ்வாய்க்கிழமை அன்று திருக்குறள் தேசிய நூல்-தமிழ் மைய ஆட்சிமொழி மாநாட்டில், தலைநகரத் தமிழ்ச்சங்கம் நடத்துகிறது.

நிகழ்ச்சியைப் பற்றிய முழு விபரங்களை மற்றும் அழைப்பிதழ் காண இங்கே அழுத்தவும்

புதன், 24 பிப்ரவரி, 2010

Human Intrest detail news

ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,



இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.



""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்.