ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓவியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விவிலியாவின் கருவூலங்கள்







சென்னையைச் சேர்ந்தவர் 
விவியா வாலண்டினா. 
எம்எஸ் பயோ டெக்னாலாஜி படித்துவிட்டு அமெரிக்காவில் கொஞ்ச நாள் வாசம், பின் தேசத்தின் மீதான நேசம் காரணமாக திரும்ப இங்கே வந்தவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஓவிய கலையின் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் உண்டு. பள்ளி பருவத்திலேயே இதற்காக பல பரிசுகள் பெற்றுள்ளார். பின்னர் தனது ஓவிய திறமையை நிறையவே வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒருவித அற்புதமான அழகுடன் மிளிர்கிறது. லேண்ட்ஸ்கேப் வகை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்ற இவரின் கைவண்ணம் அது தொடர்பான அலைகள், கடற்கரை, பனிக்காடு போன்ற ஓவியங்களில் அழகாக வெளிப்பட்டுள்ளது.
அதே போல கறுப்பு வெள்ளையில் சிவப்பு வண்ண பின்னணியில் இவர் வரைந்துள்ள ஆண், பெண் ஓவியம் ஒரு காவியம் போல பல கதை சொல்கிறது. தண்ணீரில் அலைபாயும் பாய்மரப் படகின் ஓவியம் பார்ப்பவரின் மனதை சந்தோஷத்தில் அலைபாய வைக்கிறது. பசுமை நிறைந்த காட்டுக்குள் பாயும் தண்ணீர் நம்மை ஜில்லிட வைக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியமும் ஒரு உணர்வை நம்முள் உண்டாக்குகிறது என்றால் அது ஓவியரின் திறமையே.
இவரது ஓவிய கண்காட்சி சென்னை எக்மோர் மாண்டியத் சாலையில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில் வருகின்ற செப்டம்பர் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இவரது தொடர்பு எண்: 9789859717.
இவரது ஓவியங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்து பார்க்கவும்.
- எல்.முருகராசு,

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஓவியத்தில் கலக்கும் 80 அகவை உடுமலை இளைஞர்

ஓவியத்தில் கலக்கும் 80 அகவை
 உடுமலை இளைஞர்
 http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_78942320130827002940.jpg
உடுமலை :தொழிலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால், வயதும் தடையல்ல என்பதற்கு, 80 வயதிலும் ஓவியத்தில், முத்திரை பதிக்கும் உடுமலை முதியவர் உதாரணமாக செயல்பட்டு வருகிறார். தான் பயின்ற கலை தன்னோடு அழியாமல் தொடர இளைஞர்களுக்கு ஓவியப்பயிற்சியளிக்கும் இவரது முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

உடுமலை திருப்பூர் ரோட்டில் உள்ள வளாகத்தில், "பெண்டா சிஸ்டம்ஸ்' செயல்பட்டு வருகிறது. இக்கடைக்குள் சென்றால், விளம்பர பலகைகள் எழுதுவதில், மும்முரமாக ஒரு 80 வயது இளைஞர் ! ஈடுபட்டு வருகிறார்.விளம்பர பலகைகள் எழுத அழைத்தால், இவ்வளவு வயதிலும் சுறுசுறுப்பாக கிளம்பும் இவரது பெயர் நடராசன். விளம்பர பலகைகள் மட்டுமல்ல "ஆயில் பெயிண்டிங்', "பைன் ஆர்ட்ஸ்' ஆகிய முறைகளில் இவரது படைப்புகளை பார்த்தால், ஆச்சரியத்தில் கண்கள் விரியும்.நம்மோடு பேசுவது போல காணப்படும் சிவன், பார்வதி, கண்களை மூடி சிரிக்கும் காந்தி, சிந்தனையுடன் தாகூர் உட்பட பல்வேறு ஓவியங்கள் இவரது திறமைக்கு சான்று அளிக்கின்றன. இந்த வயதிலும் கண்களில் எந்த குறைபாடும் இல்லாததால், கண்ணாடி அணியாமல் ஓவியங்களை முழு ஈடுபட்டுடன் வரைகிறார்.

வண்ணக்கலையில், மூழ்கிய இவருக்கு கண்மணி என அவராக பெயர் சூட்டியுள்ள பெண் தெய்வங்களை வரைவதில் அலாதி பிரியம். உடுமலை மாரியம்மனை பல்வேறு கோணங்களில் வரைந்து, தனது இறையுணர்விற்கு அர்ப்பணம் செய்துள்ளார்.நடராஜன் தற்போதும் அரசு அலுவலகங்களில், தகவல் பலகை எழுதுதல் உட்பட பணிகளை யாருடைய உதவியும் இல்லாமல் மேற்கொண்டு அனைவரின் ஆச்சரியத்தை பெற்றுள்ளார். எப்போது, துவங்கியது இந்த ஓவியப்பயணம், எதிர்கால திட்டம் என்ன என்பது குறித்து நடராஜனிடம் பேசுகையில், கடந்த 1934 ம் ஆண்டு பிறந்த நான், திருச்சூர் கலைக்கல்லூரியில், 1952 ம் ஆண்டு ஓவியப்படிப்பை முடித்தேன். 1953 ம் ஆண்டு ஏ.நாகூர் மேல்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்து 1967 ம் ஆண்டு வரை பணியாற்றினேன். விருப்ப ஓய்வு பெற்ற பின், முழுமையாக ஓவியம் மற்றும் விளம்பர பலகை எழுதும் துறையில் ஈடுபட்டேன்.கம்ப்யூட்டர் காலம் துவங்கி, ப்ளக்ஸ் போர்டு கலாசாரம் வேகமாக பரவியுள்ளது. இதனால், ஓவியப்படிப்பு படித்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை. காலத்திற்கு நாமும் மாறினால் மட்டுமே சாதிக்க முடியும். " ப்ரீ ஹோண்ட்', பெயிண்டிங், "ஜியாமாண்டிரிக்கல் டிராயிங்', "டிசைன்', ஆகிய பிரிவுகளில் பயிற்சி பெற்று போட்டித்தேர்வுகள் மூலம் அரசுப்பணியில் சேரலாம்.இதற்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு தற்போதும் அளித்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

சிறுவன் வரைந்த ஓவியம் உரூ.12 கோடிக்கு ஏலம்

சிறுவன் வரைந்த ஓவியம் உரூ.12 கோடிக்கு ஏலம்
 
சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.12 கோடிக்கு ஏலம்
இலண்டன், சூலை 19–
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 10 வயது சிறுவன் கியரான் வில்லியம்சன். இவன் அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் படிக்கிறான்.
இவன் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன். தனது 5 வயதில் இருந்து ஓவியம் வரைந்து வருகிறான்.
இந்த நிலையில் அவன் வரைந்த ஒரு ஓவியம் இ–மெயில் மூலம் ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவிய ஏலத் தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக் கப்பட்டது.
ஆனால் அது ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் இவன் வரைந்த 23 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவை அனைத்தும் 20 நிமிட நேரத்தில் ரூ.2 கோடிக்கு விற்று தீர்ந்தன.
அவன் வரைந்த ஓவியத்திலேயே தற்போது விற்பனை யான ஓவியம் தான் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஆனால் ஒரு ஓவியம் மட்டுமே ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மிக குறைந்த அளவு ஏலம் போனது. இதை வாட்டர் கலர் மூலம் மிகவும் எழிய முறையில் அவன் உருவாக்கி இருந்தான்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கியரான் ஓவியம் வரைய வில்லை. ஆர்வம் மிகுதியால் அவன் ஓவியம் வரைய தொடங்கினான். தற்போது அது பணம் சம்பாதித்து தருகிறது என அவனது தந்தை தெரிவித்தார்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஓவியமாகத் தீட்டப்பட்ட தமிழ் : கல் உடைக்கும் தொழிலாளி அருவினை










ஓவியமாக த் தீட்டப்பட்ட தமிழ் எழுத்து : கல் உடைக்கும் தொழிலாளி அரினை

சேலம்: தமிழ் எழுத்துகளை, தூரிகையால், ஓவியமாக தீட்டி, சாதனை படைத்துள்ளார் கல் உடைக்கும் தொழில் செய்யும் வாலிபர்.சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த களரம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் நாராயணசாமி, 24. இவர் தாய் ராஜாத்தி. தாய், மகன் இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தொரப்பள்ளி கிராமத்தில் தங்கி, கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.வேலை நேரம் தவிர்த்து, நாராயணசாமி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.காம்., படித்து வருகிறார். தமிழில் உள்ள, 247 எழுத்துக்களை, 247 அடி பேனரில் எழுதி, சாதனைக்கு விதை போட்டுள்ளார்.

இதுகுறித்து, நாராயணசாமி கூறியதாவது:சிறு வயதிலேயே தந்தையை இழந்த நான், வறுமையால், மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்க முடியவில்லை. எனினும், படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஊற்றெடுத்தது. என் தாத்தா பெரமச்சி வழிக்காட்டுதல்படி, அரிச்சுவடு வாங்கி, தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க கற்றுக் கொண்டேன். காலப்போக்கில், தமிழ் எழுத்துக்கள், 247ம் மனப்பாடம் செய்த பின், குறிப்பிடும் தமிழ் எழுத்தின், முன், பின் உள்ள எழுத்துக்களை, முறை பிறழாமல், சொல்லுவதில் தேர்ச்சி பெற்றேன். அதையடுத்து, "நன்றி' என்ற வார்த்தையை, ஒரு மி.மீ., அளவில் எழுதி, 11.11.2011 அன்று, "நன்றி என்றும் மறவாதே' என விழிப்புணர்வு ஏற்படுத்தி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றேன். அன்று முதல், நன்றி நாராயணசாமி என அழைக்கப்பட்டேன்.

தமிழில் மொத்தமுள்ள, 247 எழுத்துக்களையும், 247 அடி, அளவு பேனரில் ஓவியமாக தீட்டினேன். அதில், தமிழ் எழுத்து, 3.33 லட்சத்து, 333 முறையும், 247 தமிழ் எழுத்துக்கள், 9.99 லட்சத்து, 999 முறையும் இடம் பெற்றுள்ளன.இந்த பேனரை, 100 அடி தொலைவில் நின்று பார்த்தால், "தமிழ்' என்ற மூன்றெழுத்து மட்டும் தெரியும். 40-50 அடி தொலைவில் இருந்து பார்த்தால், 247 எழுத்துக்கள், 247 சதுரஅடி ஓவியமாக தெரியும். அருகில் சென்று பார்த்தால், எல்லா எழுத்துக்களும், தமிழ், தமிழ் என்றே தெரியும். இந்த எழுத்து சாதனைகள், 13 அடி உயரம், 19 அடி அகல பேனரில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினா
ர். 






புதன், 13 பிப்ரவரி, 2013

ஓவியத்தில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழக ச் சிறுமி!

ஓவியத்தில் சாதித்த தமிழக ச் சிறுமி!

ஓவியப் போட்டியில், 30 லட்சம் பள்ளி குழந்தைகளில், முதலிடம் பெற்று, ஜனாதிபதியிடம் பரிசு வாங்கிய, 5ம் வகுப்பு மாணவி ரோஷிணி: நான், சென்னை அண்ணா நகரில், தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன் ரோஷித் என, அனைவரும், நான் எல்.கே.ஜி., படிக்கும் போதே, ஓவியம் வரைய கற்றுக் கொடுத்து ஊக்கப்படுத்தினர். ஓவியம் வரைய, சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே வரைய ஆரம்பித்தேன். மின் சேமிப்பு குறித்து, மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில், தமிழகத்திலேயே முதலாவதாக வந்து, மின் துறை அமைச்சரிடம், பரிசு பெற்றேன். இப்போட்டி முடிந்த ஒரு மாதத்தில், மத்திய மின்துறையின், "பீரோ ஆப் எனர்ஜி எபிஷியன்சி' அமைப்பின், தேசிய அளவிலான ஓவியப் போட்டியில், 30 லட்சம் பள்ளி மாணவியரில் ஒருவராக, நானும் கலந்து கொண்டேன்.மாநிலப் போட்டியில் வென்ற அனுபவத்தை பயன்படுத்தி, நல்ல ஓவியம் வரைந்து, 105 பேர் மட்டுமே பங்கு பெறும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தேன். போட்டிக்கு முன்னரே, வரையப் போகும் ஓவியத்திற்கான தலைப்பை தந்து, பெற்றோருடன் கலந்தாலோசிக்க செய்தனர். ஏனெனில், ஓவியம் வரையும் இடத்திற்கு, பெற்றோருக்கு அனுமதி இல்லை.கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில், "சேவ் எனர்ஜி, சேவ் மணி' என்ற தலைப்பில், ஓவியம் வரைந்தேன். 30 லட்சம் பேரில், என் ஓவியம், முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, என் ஓவியத்தை பார்த்து பாராட்டி, பரிசுத் தொகையாக, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு சான்றிதழ், கடிகாரம், "லேப்-டாப்' ஆகியவற்றை வழங்கினார்.எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்தேசியப் போட்டியில், தமிழகம் சார்பில், முதல் முறையாக வெற்றி பெற்றது, நான் தான்.

சனி, 26 மே, 2012

"சமூக அவலங்களைப் பேசும் ஓவியம்!'



ஓவியர் முகிலன்: இந்த சமூகத்தின் மீது நான் வைக்கும் விமர்சனம் தான் என் ஓவியம். வெறும் ரசனை சார்ந்தது மட்டுமல்ல, எந்த ஒரு கலைப்படைப்புமே, அதைச் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என நம்புகிறேன். அதனால், சமூகம் என் ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு கலைஞனும், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிதான். நானும் ஓவியங்களின் வழியாக ஒடுக்கப்படும் மக்களின் சார்பாக பேசுகிறேன்.என் ஓவியங்கள், நான் சார்ந்த அரசியலின் கருத்துக்களை பிரதிபலித்தாலும், அவற்றை வெறும் பிரசாரம் என ஒதுக்கிவிட முடியாது. சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, துவங்கிய அரசியல் ஆர்வமும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களும் தான், என் ஓவியங்களின் உள்ளடக்கத்தை மாற்றியது. இல்லையேல், நானும் மற்றவர்களைப் போல, இயற்கை ஓவியங்கள் வரைந்து கொண்டு இருந்திருப்பேன். ஒரு கிராமத்தை ஓவியத்திற்குள் கொண்டு வருதல் என்பது, மாட்டு வண்டி, தலையில் கலையம் சுமந்த பெண்கள், மருதாணி விரல்கள் என்பது மட்டுமல்ல; கிராமங்களின் சமூகப் பிரச்னைகளை சொல்வதும் தான்.ஜாதியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், இரட்டை குவளை முறையும் தான் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன. கிராமம் என்றால் எனக்கு அவைகள் தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாஸ்கோ ஆலைக்காக மலைகளை தாரைவார்ப்பதை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்காக நீர் நிலைகளைக் கையளிப்பதை என் ஓவியங்கள் வேறு கோணத்தில் பிரதிபலிக்கின்றன.எனக்குக் கிடைத்த ஆயுதமாகத்தான் நான் தூரிகையைப் பார்க்கிறேன். வணிக ரீதியாக இதுவரை என் ஓவியங்களை விற்பனை செய்தது இல்லை. எவரும் வாங்கியதும் இல்லை. மலம் வாளி சுமக்கும் ஓவியத்தை எந்த வரவேற்பறையில் வைப்பர். ஆனால், அது தான் என் ஓவியங்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நான் எதை வரைய வேண்டும் என்பதைவிட, எதை வரையக் கூடாது என்பதில் தான் தெளிவாக இருக்கிறேன்.