வியாழன், 7 ஜூன், 2012

சொல்கிறார்கள்


"கிராமியக் கலைகளால்ஈர்க்கப்பட்டேன்!'
நலிந்து வரும் கிராமியக் கலைகளை ஊக்குவிப்பதற்காக, தக்ஷினசித்ரா ஆர்ட் கேலரி நடத்தி வரும் பெபோரா: நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், இந்தியக் கலைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். அதற்குக் காரணம், என் கணவர் தியாகராஜன். அமெரிக்காவில், நாங்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது, தமிழக கிராமியக் கலைகள் பற்றி, நிறைய பேசுவார். அவர் பேச்சாலும், கிராமியக் கலைகளாலும் ஈர்க்கப்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டு, தமிழகத்திற்கு வந்து விட்டேன்.இந்தியக் கலைகளின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நேரில் பார்த்த பின், இவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, "ஆர்ட் கேலரி' உருவாக்கலாம் என, முடிவு செய்தோம். எங்கள் யோசனையை ஏற்று, ஈ.சி.ஆர்.,ல் 10 ஏக்கரில், ஒரு இடத்தை, தமிழக அரசு எங்களுக்கு ஒதுக்கியது. அங்கு, தக்ஷினசித்ராவை உருவாக்கினோம்.தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் உள்ள பாரம்பரிய வீடுகளில், ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கினோம். அந்த வீடுகளை சேதப்படுத்தாமல், அப்படியே பக்குவமாக உடைத்து எடுத்து வந்து, அந்தந்த மாநிலக் கட்டடக் கலை நிபுணர்களின் உதவியுடன், இங்கு முறையாக அஸ்திவாரம் போட்டு, "பிக்ஸ்' பண்ணினோம். இப்போது பார்த்தால், கேரளாவில் உள்ளது போலவே, ஒரு வீடு இங்கு இருக்கும். ஆனால், அது இங்கேயே கட்டியது போன்று தோற்றமளிக்கும்.தினமும், ஏதாவது ஒரு கிராமியக் கலை யை மையமாக வைத்து, நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். சனி, ஞாயிறுகளில் தோல் பொம்மலாட்டம் நடத்துவோம். சீசனுக்கு ஏற்றபடி கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமாக நடக்கும். ஆண்டிற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இது தவிர, ஓவியக் கலையை வளர்க்கும் விதமாக, அடிக்கடி ஓவியக் கண்காட்சியும் நடக்கும். பாரம்பரியக் கலைகளை, வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு, "தக்ஷினசித்ரா விருது' வழங்குகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக