வெள்ளி, 9 மார்ச், 2012


பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நிறுவப்பட்ட அப்புசாமி - சீதா பாட்டி இசைக்கூடல் அமைப்பு, மற்ற சபாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நன்றே அடிப்படை என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கலைஞர்களை தேர்ந் தெடுத்து, மேடை வாய்ப்பு கொடுக்கும் இதன் நோக்கங்கள் சிறப்பானவை. மயிலை, கற்பகாம்பாள் நகர் கோகலே சாஸ்திரி வளாகத்தில் நடைபெற்றது, இந்த இசை நிகழ்ச்சி. இசைக் கலைமணி மல்லிகா ரமணன் இந்த நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அற்புத படைப்புகளை முழுவதுமாக தேர்ந்தெடுத்து, தமிழ் மணக்க, செவிகள் இனிக்கப் பாடியது, கேட்க இன்பமாக இருந்தது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் பெரும்பாலும், துக்கடாக்களின் பகுதியிலோ அல்லது இடைச் செருகலாகவோ மட்டுமே இடம் பெற்று வருவது, மிக வருந்தத்தக்க நிலையாகும். மிகத் துணிவாக, பாரதியின் முழு தமிழ்ப் பாடல்களை மட்டுமே உள்ளடக்கிய இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வேளை, மகாகவி பாரதியின் வீரம் செறிந்த பாடல்கள் காரணமாக இந்த ஏற்பாடா எனத் தெரியவில்லை.

மல்லிகா ரமணன் நிகழ்ச்சியின் துவக்கத்தில், மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து, கற்பக விநாயக கடவுளைப் போற்றி (கல்யாணி) என்று மதுரமாகப் பாடி, தொடர்ந்து பாருக்குள்ளே (ஜோன்புரி) - மற்றும் இமயமலை (மோகனம் - சண்முகப்ரியா - பெகாக்) ராகங்களில் பாடியது, குறிப்பாக சங்கதிகளில் வல்லினம், மெல்லினம் தெரிந்து இதமாகப் பாடியது, கேட்க பரவசமாக இருந்தது.

நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அருமையான பாடல்களாக செந்தமிழ் நாடெனும் (செஞ்சுருட்டி), எந்தையும் தாயும் (இந்தோளம்), "வாழ்க நீ எம்மானிந் (சுருட்டி) கானடா - மோகனம் - தன்யாகி, (மத்யமாவதி) காந்திஜி மீது அவர் பாடிய வரிகளில், மனம் நெகிழ்ந்துருகியது. வெள்ளைத் தாமரை (பீம்ப்ளாஸ்) கலைமகளின் சிறப்பு சங்கதிகள் அருமை. தீராத விளையாட்டுப் பிள்ளை (ராகமாலிகை) உச்சரிப்பு தெளிவுடன், அமரர் டி.கே.பியை நினைவு படுத்தியது. ரமணனின் குரலில், நவரச உணர்வுகளையும் கேட்டு மகிழ முடிந்தது. வாழிய செந்தமிழுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மோகனம் - இந்தோனம் ராகங்களில் விரிவுகளை அநாயாசமாக, குறிப்பாக மேல்ஸ்தாயி படு துல்லியமாக கேட்க பரவசமூட்டியது. டாக்டர் பாலமுரளியிடம் பயின்றவர் என்று அறியப்பட்ட, இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களின் பாடல்களை இந்த மேடையிலாவது கேட்டு மகிழும் வாய்ப்பு கிடைத்ததற்காக, அப்புசாமி - சீதாபாட்டி இசைக்கூடலை வாழ்த்தலாம். மல்லிகா ரமணனுக்கு பக்கவாத்தியம் படு அமர்க்களம். வயலினில் சிவகாமி நாராயணனின் அடக்கமும், நயமுமான வாசிப்பு மனதை விட்டகலவில்லை. மிருதங்கத்தில் மதுரமான நாதத்துடன், நயமாக வாசித்த கலைஞர் லட்சுமி கணேஷ், ஒரு பெரிய லயசிம்மத்தின் புதல்வர். கும்பகோணம் நாராயணசாமி அய்யர் லயத்தில் ஒரு ஆலவிருட்சமாக திகழ்ந்தவர் மட்டுமின்றி, பல லய வேர்களை உருவாக்கியவர். லட்சுமி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் வாசித்த விதம், மிக உயர்வானது; பாராட்டத்தக்கது.

- மாளவிகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக