சிக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூலை, 2013

1. காய்கறித்தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன? 2. சிக்கலைத் திறமையாகச் சமாளியுங்கள்

நாமே உருவாக்கினால் என்ன!

காய்கறிகளின் விலை உயர்வை ச் சமாளிக்க, வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியத்தை கூறும், சுல்தான் அகமது இஸ்மாயில்:
நான், சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர். சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம். இதுதொடர்பாக உரையாற்ற, பயிற்சியளிக்க என, பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன். தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டிலேயே தோட்டம் அமைக்க, சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எல்லாருக்குமே, வீட்டு தோட்டம் அமைப்பதில், விழிப்புணர்வு தேவை. பெரிய பெரிய கட்டடங்களின் சுவர் வெடிப்புகளில், அரச மரமே வளரும் போது, கைப்பிடி மண்ணில், ஏன் காய்கறி செடியை வளர்க்க முடியாது என்ற, நேர்மறையான சிந்தனை இருந்தாலே, ஒரு பைசா கூட செலவில்லாமல், நாமே கொத்து கொத்தாக காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இதனால், விண்ணை முட்டும் விலைவாசியில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் டப்பா, பெயின்ட் வாளிகளை முதலில் சேகரிக்க வேண்டும். குப்பையாக தூக்கி எறியும் காய்கறி கழிவுகளை, மண்ணுடன் சேர்த்து அதில் போட்டால், இயற்கை உரம் ரெடி. அத்துடன் சிறிது மண்ணை சேர்த்து, சற்று அழுகிய அல்லது உடைந்த தக்காளியை பிழிந்தால், சில நாட்களில் தக்காளி செடி முளைக்கும். சந்தையில் விற்பனையாகும், மற்ற காய்கறி விதையும் போடலாம். தேங்காய் நார், ஒரு மிக சிறந்த நீர் தேக்கி. அதை மண்ணுக்குள் புதைத்து, காய்கறி அலசிய நீரை ஊற்றினாலே போதும்; ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும். வீட்டு தோட்டம் என்றாலே, பூச்சிகள் அதிகம் இருக்கும் என்ற பயம் வேண்டாம். இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை 100 கிராம் வீதம் சேர்த்து அரைத்து, 10 லிட்டர் நீரில், 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின், 1 லி., கோமியத்துடன், 9 லி., நீர் சேர்த்து ஊற வைத்து, அந்த இரண்டையுமே செடிகளின் மீது தெளித்தால், பூச்சி தாக்குதல் இருக்காது. அனைத்தும் இயற்கை முறை என்பதால், எந்த பாதிப்பும் வராது. குடும்ப செலவும் மிச்சப்படும்.


பிரச்சினையைச் சாதுரியமாகச் சமாளியுங்கள்!

வீட்டை விட்டு பெண்கள் வெளியே போக கூடாது என்ற குடும்பத்தின் எதிர்ப்பை, சாதுர்யமாக சமாளித்து, எச்.ஆர்., துறையில் சாதித்த, அனிதா
: என் அப்பாவின் வேலையில் மாற்றல் அதிகம் இருந்ததால், மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்தேன். பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதால், கோல்கட்டா, ஐ.ஐ.எம்.,மில், எம்.பி.ஏ., சீட் கிடைத்தது. "கட்டிக் கொடுக்க போகும் பொண்ணுக்கு படிப்பு எதற்கு' என, என் படிப்பை நிறுத்த முயற்சித்தனர். வந்த வரை லாபம் என, மும்பையிலேயே, எம்.பி.ஏ., படித்தேன். பேச்சு போட்டியில் வென்ற பல கோப்பைகளை கூட, மற்றவர் பார்வையில் படும்படி வைக்க அனுமதிக்கவில்லை. "வாயாடி' என, நினைத்து, உன்னை பெண் பார்க்க வரமறுப்பர் என, காரணம் கூறினர். படிப்பு முடிந்ததும், என் திறமையை பார்த்து, மனித வள துறையில் பெரிய நிறுவனமான, ஏ.எப். பர்கூசனில் வேலை கிடைத்தது. "நீ தான் வசதியான குடும்பத்துல பிறந்தவளாச்சே... நீ சம்பாரிச்சு தான் சொத்து சேர்க்கணுமா? நல்லவங்க, கெட்டவங்க என, பல ஆண்கள் வேலை செய்வதால், தேவையற்ற பிரச்னை வரும்' என, பெண்களை வீட்டின் உள்ளேயே பூட்டி வைக்க, நம் சமுதாயம் அடிக்கடி சொல்லும் அறிவுரை இது தான்.
பெண்ணாக பிறந்தது முதல், இப்படி பல பிரச்னைகளை சந்தித்து வந்தாலும், யாரிடமும் சண்டை போடாமல், சாதுர்யமாக சம்மதிக்க வைத்தேன். இதனால் தானோ என்னவோ, கோடிகளில் புழங்கும் பெரிய நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில், ஏதாவது பிரச்னை இருந்தால், சாதுர்யமாக சமாதானப்படுத்தி, பிரச்னையை தீர்க்கும், "ரிவார்ட் மேனேஜ்மென்ட்' என்ற கடினமான வேலையை கூட, திறம்பட செய்ய முடிந்தது. எச்.ஆர்., துறையின் நுணுக்கங்களை அறிந்து, படிப்படியாக முன்னேறியதால், "செரிபிரஸ் கன்சல்டன்ட்' என்ற, எச்.ஆர்., நிறுவனத்தை நானே ஆரம்பித்தேன். பெரிய நிறுவனங்களின் பிரச்னையை சாதுர்யமாக தீர்த்து வைப்பதால், இன்று, மனிதவள மேம்பாட்டு துறையில், இந்தியாவின் மிக முக்கிய முகமாக கவனிக்கப்படுகிறேன்.

முதுகுத்தண்டு வடச் சிக்கலால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி

முதுகுத்தண்டு வட ச் சிக்கலால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் பலரை நீங்கள் கடைத் தெருவில், ரோட்டில், ஆஸ்பத்திரி வாசலில், கல்வி கூடங்களில், அரசு அலுவலகங்களில் என்று பல இடங்களிலும் பார்த்து இருப்பீர்கள்.
இதில் பலரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வார்கள், சிலர் தாங்களே சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டோ, அல்லது எரிபொருளின் உதவியுடன் உருளும்படி செய்தோ செல்வார்கள்.
சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் எல்லாம் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே நம்மில் பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.
அவர்களில் பெரும்பாலோனார் முதுகுதண்டு வட பாதிப்பு அடைந்தவர்கள்.
முதுகு தண்டு வட பாதிப்பு என்பது கடுமையான விஷயமாகும்.
தலைக்கு பின் பக்கம் மூளையில் இருந்து ஆரம்பிக்கும் முதுகு தண்டு வடத்தினுள் செல்லும் நரம்புகள்தான் உடம்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் இயக்குகிறது, கட்டுக்குள் வைக்கிறது. மூளையிடும் உத்திரவை இந்த நரம்புகள்தான் செயல்படுத்துகிறது.
இந்த நிலையில் முதுகு தண்டு வடத்தில் அடிபடும் போது எந்த இடத்தில் அடிபடுகிறதோ, அந்த பகுதியில் இருந்து அதன் செயல்பாடுகள் நின்று போகும்.
முதுகுதண்டு வடம் எப்படி பாதிக்கும்:


உயரமான இடத்தில் இருந்து கீழே விழும்போது, விபத்தில் சிக்கும்போது என பல்வேறு காரணங்களால் முதுகுதண்டு வடம் பாதிக்கும்.
முதுகு தண்டு வட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தன் உடல் உறுப்புகளை இயக்குவது என்பது மிக கடினமான ஒன்று, மூளை சொல்வதை நரம்புகள் எடுத்துச் செல்லாது, இதன் காரணமாக கையை யாராவது கத்தியைக் கொண்டு அறுத்தாலும் வலி என்கின்ற உணர்வு மூளைக்கு செல்லாது.


மிகவும் பாதிப்பு என்பது சிறுநீர் போவதும், மலம் கழிப்பதும்தான், இந்த இரண்டு பிரதான விஷயங்களுமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதால், என்னதான் சமாதானம் செய்துகொண்டாலும், இவர்களைப் பொறுத்தவரை அன்றாடம் தங்கள் வாழ்க்கையை ஒரு நரகமான வாழ்க்கையாகவே நினைக்கின்றனர்.


பிறகு படுக்கை புண் வரும். கொசு கடித்தால் கூட யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்கச் சொல்ல வேண்டும், படுக்கை அல்லது சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை கழிக்கவேண்டி இருக்கும். தொற்று நோய் எளிதில் பரவும்.


இரண்டாவது உலகப்போரின் போதுதான் முதுகு தண்டு வட பிரச்னைக்கு ஆளானவர்கள் அதிகம் பேர் இருந்தனர், இவர்கள் அதிகபட்சமாக அடிபட்டு ஆறுமாத காலம்தான் இருந்தார்கள் பிறகு தொற்று காரணமாக இறந்தனர். அதன்பிறகுதான் மருத்துவ உலகம் விழித்துக் கொண்டு இவர்களுக்கான மருந்து மாத்திரைகளை கண்டு பிடித்தது, கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை திருப்தியான தீர்வு என்பது கிடைக்கவில்லை.


இதன் காரணமாக இறந்து போகும் நாள் தள்ளிப்போனதே தவிர இழப்பை எந்த விதத்திலும் இன்றைக்கு வரை ஈடு செய்யமுடியவில்லை.


நமது நாட்டைப் பொறுத்தவரை முதுகு தண்டு வடத்திற்கான சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை.


சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவர் ஞானபாரதி. சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ரயில் விபத்தால் முதுகு தண்டு வட பிரச்னைக்கு உள்ளானவர். தனக்கு இந்த பிரச்னை வந்த பிறகு இவர் நிறையவே அனுபவப்பட்டுவிட்டார். அந்த அனுபவங்கள் எல்லாம் மிக வேதனையானவை.


தனது வேதனையை தீர்க்க நிறைய இடங்களுக்கு பயணப்பட்டார், நிறைய தேடல்களில் ஈடுபட்டார்.


இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இப்போதும் ஒரே வழி சீக்கிரமாக செத்துப் போவதுதான் அவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது. இதில் இந்த நோய்க்கொடுமை ஒரு பக்கம் என்றால் இந்த நோயாளிகளை அரசும், மருத்துவர்களும் அணுகும் முறையும் கொடுமையாக இருக்கிறது என்கிறார்.



சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேர் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். நான் பட்ட அனுபவங்கள் மற்றும் தேடுதலை பகிர்ந்து கொள்வதன் மூலம் முதுகு தண்டு வட பிரச்னை உள்ளவர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறேன். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நண்பர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மத்திய, மாநில அரசிடமும், மருத்துவத்துறையிடமும் நிறைய கேட்க வேண்டியிருக்கிறது.என் வாழ்க்கையில் பெரும் பங்கினை இதற்காகவே செலவழித்தாலும் பராவாயில்லை ஆனாலும் இந்த பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும். போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பயணத்தை துவக்கி விட்டேன் என்று ‌சொல்லும் ஞானபாரதியிடம் தொடர்பு கொள்ள: 9962528232.



- எல்.முருகராசு

புதன், 27 மார்ச், 2013

கப்பல் வீரர்கள் சிக்கல்: இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் விலகல்

கப்பல் வீரர்கள் சிக்கல்: இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் விலகல்

First Published : 26 March 2013 08:29 PM IST
கப்பல் வீரர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், இத்தாலிய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியுற்றதாக எழுந்த பலத்த சர்ச்சைகளால், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கியுலியோ தெர்ஸி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவுக்கு கப்பல் வீரர்கள் இருவரும் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரம் இத்தாலியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

ஈழத் தமிழர் சிக்கல்- மாணவர்களின் உண்ணா நோன்பிற்கு ஆதரவு பெருகுகிறது

ஈழத் தமிழர் சிக்கல்- மாணவர்களின் உண்ணா  நோன்பிற்கு  ஆதரவு பெருகுகிறது










இலங்கைத் தமிழர் பிரச்னையை வலியுறுத்தி லயோலா கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழீழம் அமையும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா.வில் இந்தியாவே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லயோலா கல்லூரியைச் சேர்ந்த திலீபன், பிரிட்டோ, அந்தோனி சாஜி, பார்வைதாசன், பால்கென்னட், மணி, கேபரின், லியோ ஸ்டாலின் ஆகிய 8 மாணவர்கள் வியாழக்கிழமை முதல் (மார்ச் 7) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று நேரில் சந்தித்து மாணவர்களின் கோரிக்கையை மதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்பாளர் பழநெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், சமூக ஆர்வலர்கள் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
முதலில் லயோலா கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள், வெள்ளிக்கிழமை இரவு முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் ஒன்றில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 17 நவம்பர், 2012

ஆந்திர, கேரள மீனவர்களால் தமிழக மீனவர்களுக்குச் சிக்கல் - முதல்வர்


சென்னை:"ஆந்திர மீனவர்கள், அவ்வப்போது, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இப்படி, தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை, ஆந்திர மீனவர்கள் கைவிட வேண்டும்' என, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தி உள்ளதை, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வாசித்தார்.’

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூருவில், நேற்று நடந்தது.இதில், தமிழக முதல்வர் சார்பில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் சார்பில், அமைச்சர் மணி மற்றும், நான்கு மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் மேம்பாடு, தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னை, சுற்றுலா வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு பல விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில், தமிழக முதல்வரின் உரையை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்தார். முதல்வர் கூறியிருப்பதை, பன்னீர் செல்வம் வாசித்ததாவது:

தமிழக மீனவர்கள், ஆந்திர ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தால், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பின், தமிழக மீனவர்களிடம், கணிசமான தொகையை பெற்று விடுவிக்கின்றனர்.கடந்த, 2007ல், அமைச்சர் அளவில் நடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கு வசதியாக, மீன்பிடி உரிமம் வழங்க வேண்டும் என, விவாதிக்கப் பட்டது.ஆனால், இந்த விஷயத்தில், ஆந்திர அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. ஆந்திர மீனவர்கள், சட்டத்தை, தாங்களே கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.

இதேபோல், கன்னியாகுமரி மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்தால், கேரள மீனவர்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது; படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அளவிற்கு, மீன்பிடி உரிமம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், மின் தேவை மற்றும் மின் உற்பத்திக்கு இடையே, பெரிய இடைவெளி உள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2012-17), தமிழகத்தின் மின் தேவை, 18 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். ஆனால், தற்போது, 8,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மின்தேவையை பெருக்க, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வரும், 2015க்குள், சூரிய ஒளி மின் உற்பத்தி வழியாக, 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உரையை பன்னீர்செல்வம் வாசித்தார்.

வியாழன், 15 நவம்பர், 2012

இலங்கைத் தமிழர்காக அனைத்துக் கட்சி கூட்டம்: கோ.க.மணி

இலங்கைத் தமிழர்  சிக்கலுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டம்:  

கோ.க.மணி கோரிக்கை

First Published : 15 November 2012 07:02 PM IST
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிóக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் ஜி.கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டானியா தமிழர் பேரவை சார்பில் நவம்பர் 7 முதல் 9-ம் தேதி வரை லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் ஜி.கே. மணி, வியாழக்கிழமை காலை சென்னை திரும்பினார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே. மணி பேசியது:-
லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராடாமல் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தமிழர்களும், இங்கிலாந்து எம்.பி.க்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
எனவே, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கவும், இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை வலியுறுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

திங்கள், 6 டிசம்பர், 2010

மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் சிக்கல்

பணியாற்றுவோர் தங்கள் பணிப்பதிவேட்டில் பட்டத்தகுதி குறிக்கப்பெற்றுள்ள பக்கத்தின் நேர்படியை  அளித்தால் போதும் எனப்படுகிறது.
சான்றிதழைச்சரிபார்ப்போரிடம் அரசு தக்க வகையில் அறிவுறுத்த வேண்டும்.  பணியிடங்களுக்கே சென்று வாக்காளர் பெயர்களைச் சேர்க்கும்  முகாம்கள் அரசால் நடத்தப்பட வேண்டும். வாக்காளர்  பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மேலும் கால வாய்ப்பை வழங்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நிறுவனங்களிடம் சிக்கிய அசல் கல்விச்சான்றுகள்: மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் சிக்கல்; சான்றிதழ்கள் இல்லாததால் பட்டதாரிகள் அவதி


திருப்பூர் : தனியார் நிறுவனங்களிடம் பணிக்குச் சேர்ந்துள்ள பெரும்பாலான பட்டதாரிகளின் அசல் கல்விச்சான்றிதழ்களை அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களே பெற்று வைத்துள்ளன. இதனால், மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் இருந்தும், அசல் கல்வி சான்றிதழ் இல்லாமல் பட்டதாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.÷தமிழக சட்டமேலவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள 7 பட்டதாரி தொகுதிகள், 7 ஆசிரியர் தொகுதிகளில், பட்டதாரிகள், ஆசிரியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பட்டதாரிகளிடம் இருந்து போதிய அளவில் விண்ணப்பங்கள் வருவதில்லை.÷உதாரணமாக, மேற்கு மண்டலத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6,915 பட்டதாரிகளும், 1,057 ஆசிரியர்களும் மட்டுமே வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ÷ டிசம்பர் 7 வரை மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் பட்டதாரிகள் போதிய அளவில் விண்ணப்பிக்கவில்லை. ÷இதற்கு மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பட்டதாரிகள் தங்கள் அசல் கல்விச் சான்றிதழைக் காட்ட வேண்டும் என்பதே முக்கிய காரணம் ன்று கூறப்படுகிறது.÷தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் 75 சதவிகித பட்டதாரிகள் தனியார் நிறுவனங்களிலேயே பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள், பட்டதாரிகளை வேலைக்குச் சேர்க்கும் போதே அவர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களைப் பெற்று வைத்துக் கொள்கின்றன. குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலுள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பட்டதாரிகளிடம் அசல் கல்விச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக உள்ளது.÷தகுதி வாய்ந்த பட்டதாரிகள் வேலையை கற்றுத் தெரிந்தவுடன் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவதைத் தடுக்கவும், பணிபுரியும் ஊழியர்களாலேயே நிறுவனத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த உத்தி கையாளப்படுகிறது.÷இச்சூழ்நிலையில், மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அசல் கல்விச் சான்றுகள் கேட்கப்படுவதால், தனியார் நிறுவன நிர்வாகத்திடம் கொடுத்துள்ள சான்றிதழ்களைப் பெற முடியாமல் பட்டதாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.÷மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் நகல் கல்விச் சான்றிதழ் இணைத்தால் போதும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த நகல் கல்விச்சான்றிதழ்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், பள்ளித் தலைமையாசிரியர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர், ராணுவப் பள்ளி முதல்வர் ஆகிய 5 பேரில் ஒருவரிடம் அத்தாட்சிக் கையொப்பம் பெற்று வருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ÷அதன்படி, நகல் கல்விச் சான்றிதழ்களில் கையொப்பம் பெற அந்த அலுவலர்களிடம் செல்லும் பட்டதாரிகள் கல்விச் சான்றிதழைக் காட்ட வேண்டியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு பட்டதாரி இளைஞர் கூறுகையில், ""தனியார் நிறுவனங்கள் அசல் கல்விச் சான்றிதழ் பெறுவது சட்டப்படி குற்றம். இருப்பினும், குடும்பச் சூழ்நிலைக்காக பட்டதாரிகள் வேலை தரும் தனியார் நிறுவனங்களிடம் அசல் கல்விச் சான்றுகளை அடகு வைக்க வேண்டியுள்ளது. இச் சிக்கல் காரணமாகவே மேலவை வாக்காளர் பட்டியலில் பெரும்பாலான பட்டதாரிகளால் பெயர் சேர்க்க இயலவில்லை'' என்றார்.÷இப் பாதிப்புகளைத் தவிர்க்க, தனியார் நிறுவனங்கள் பெற்று வைத்துள்ள அசல் கல்விச் சான்றுகளை அந்தந்தப் பட்டதாரிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும். பட்டதாரிகளிடம் அவர்களின் சான்றிதழ்களைத் தர மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.÷இல்லையேல், மாதக் கணக்கில் காலஅவகாசம் கொடுத்தாலும், தகுதியான பட்டதாரிகளால் மேலவை வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க முடியாது.