சென்னை: வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோர், இனி
தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியது இல்லை. இணையதள மையங்களில் இருந்து,
ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 944 இணையதள மையங்களுடன்,
தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலில்,
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய, முன்பு தாலுகா
அலுவலகம் அல்லது ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அங்கு செல்ல
முடியாதவர்கள், அரசியல் கட்சியினரின் உதவியை நாடினர்.
ஆர்வம் குறைவு:
இதை
தவிர்க்க, தேர்தல் கமிஷன், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறையை
அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, ஆன்- லைனில்
விண்ணப்பிக்கும் முறை, அமலில் உள்ளது. ஆனால், மக்கள் ஆன்-லைனில்
விண்ணப்பிக்க, ஆர்வம் காட்டவில்லை. கேரளாவில், 75 சதவீதம் பேர், ஆன்-லைனில்
விண்ணப்பிக்கின்றனர். ஆந்திராவில், 40 சதவீதம் பேர், ஆன்-லைனில்
விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில், 7.8 சதவீதம் பேர் மட்டுமே, ஆன்-லைனில்
விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,
2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 20 ஆயிரம் பேர் மட்டுமே,
ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்-லைனில் விண்ணப்பிப்பது எளிது.
விண்ணப்பங்களை, கள அலுவலர்கள், நேரடியாக விசாரித்து சரி பார்த்த பிறகே,
பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதன்பின், வாக்காளர் அடையாள
அட்டை வழங்கப்படும். ஆனால், கம்ப்யூட்டர், லேப்டாப் வசதி இல்லாதவர்கள்,
ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடிவதில்லை.
ஒப்பந்தம்:
இப்பிரச்னைக்கு
தீர்வு காண, நாட்டில் முதன் முறையாக, தமிழகத்தில் இணையதள மையங்களுடன்,
தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
செல்லும்போது, அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை. ஆனால், அலுவலர்கள்
ஆய்வுக்கு வரும்போது, இருப்பிடச் சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றை
காண்பிக்க வேண்டும். சென்னையில், இப்பணியை மேற்கொள்ள உள்ள, 84 இணையதள
பயிற்சியாளர்களுக்கு, மாநகராட்சி அலுவலக கட்டடத்தில், பயிற்சி
அளிக்கப்பட்டது.
இணையதள மையங்கள்:
இது
குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:
இணையதள மையங்களில், விண்ணப்பிப்போருக்கு ரசீது வழங்கப்படும். அதில் உள்ள
எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆன்-
லைனில் அறிந்து கொள்ள முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த, 40
நாட்களுக்குள், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள
அட்டையில், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் செய்த அடையாள
அட்டை வழங்க, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், திருத்தம்
இல்லாமல், இரண்டாவது முறையாக, வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், 25
ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 32 மையங்களில், 944
இணையதள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பொறுத்து,
கூடுதல் இணைய தள மையங்களுக்கு, அனுமதி வழங்கப்படும். இணையதள மையங்கள்,
தேர்தல் கமிஷன் அனுமதி அளித்த, கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்
கூடாது. வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், கட்டணமில்லா தொலைபேசி
எண் 1950ஐ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கட்டணம் நிர்ணயம்:
இணையதள மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம்
செய்ய, இடமாற்றம் செய்ய, 10 ரூபாய்; வாக்காளர் பட்டியலை, பிரின்ட் எடுக்க
விரும்பினால், ஒரு பக்கத்திற்கு, 3 ரூபாய்; வாக்காளர் பெயர், ஓட்டுச்
சாவடி, விண்ணப்பத்தின் நிலை, ஆகியவற்றை அறிந்து கொள்ள, 2 ரூபாய்; புகார்
பதிவு செய்ய, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண விவரம், இணையதள
மையங்களில் எழுதி வைக்கப்படும்.