உருத்திரகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உருத்திரகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 பிப்ரவரி, 2019

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

அகரமுதல
தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோபோவதில்லை! – உருத்திரகுமாரன்
 இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித் தலைமையர் இரணில் விக்கிரமசிங்க கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில் நல்லிணக்கம் காணவேண்டும் எனக் கோரியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்  துவேசத்தால் நிகழ்ந்திருந்த இனப்படுகொலைக்குத் தீர்வாக அங்கு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமிக்கப்பட்டு வழக்கு, தண்டனை எதுவும் இல்லாமல் நிகழ்ந்த சிக்கல்கள், மன்னிக்கப்பட்டு நல்லிணக்கம் உருவானது போல, இலங்கைத் தீவிலும், அப்படியானதொரு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமித்து, கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிபோம்’ என்ற வகையில், நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று  இலங்கையின் தலைமையர் கோரியுள்ளார். இதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்-
 இனப்படுகொலைக்கு உள்ளான தென்னாப்பிரிக்க கறுப்பர்கள்,அரசியல் விடுதலை பெற்று ஆட்சியில் இருந்தவாறு, வெள்ளையர்களை மன்னித்த தென்னாப்பிரிக்க எடுத்துக்காட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாகிஉரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளாக இருக்கும் ஈழத் தமிழருக்குப்பொருந்தாது. தென்னாப்பிரிக்காவின் சிக்கல் வேறு. ஈழத் தமிழர்களின் சிக்கல் வேறு. இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாது.
 தென்னாப்பிரிக்காவின் மொத்த குடித்தொகையில் 8.9 விழுக்காட்டைக் கொண்ட வெள்ளையர்கள் பெரும்பான்மைக் கறுப்பின மக்களை இனவெறி/இன ஒதுக்கல் (Apartheid) என்று சொல்லப்படுகின்ற இன வெறுப்புக்  கொள்கையின் கீழ், பெருந்தொகையான கறுப்பினத்தவர்கள் இனப்படுகொலைகளுடன் கூடிய பாரிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர்.
 ஆனால் நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசு, தீரத்துடன் போராடி 1995ஆம் ஆண்டு வெள்ளையின வெறுப்பு ஆட்சியாளர்களைத் தோற்கடித்துக், கறுப்பர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் ஊடாக இனத்துவேச வெள்ளையர்கள் தோற்கடிக்கப்பட்டு ‘Apartheid’ என்ற இனவெறி வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டது. அத்துடன் ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாறியது. வெற்றிபெற்ற கறுப்பர்கள் எட்மண்டு தூட்டூ (Desmond Tutu) என்ற கறுப்பினத் தலைவரின் கீழ் மேற்படி விசாரணைக் ஆணையத்தை அமைத்து, வெள்ளையர்களுக்கு மன்னிப்பு அளித்தமை வரலாற்றில் நீதிமான்கள் அளித்த மன்னிப்பாக அமைந்தது.
 ஆனால் இலங்கையின் நிலைமை அப்படியல்ல. ஒன்றரை இலட்சம் தமிழ்மக்களை இனஅழிப்பு புரிந்த ஆட்சியாளர்களும், அந்த இனமும் தொடர்ந்தும்அதிகாரத்தில் உள்ளார்கள். இனஅழிப்பு புரிந்த இனத்தின் கையில் அரசியல் அதிகாரம் அப்படியே உள்ளது.
 இங்கு அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்கள்ஆக்கிமிரமிக்கப்பட்டவர்களாய்;, படுகொலை செய்யப்பட்டவர்களாய்அவமானத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் இனஅழிப்பு புரிந்த சிங்களஇராணுவம் தொடர்ந்தும் தமிழ் மண்ணை தம் இரும்புப் பிடிக்குள்வைத்திருக்கிறது.
 இங்கு யார் யாரை மன்னிப்பது?
 இனஅழிப்பின் ஊடான ஆக்கிரமிப்பை மன்னித்துத் தம்மை அதிபர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையின் தலைமையர் இரணில் கோருகிறார். இத்தகைய அதிபர் அங்கீகாரத்தைத்தான் அவர் நல்லிணக்கம் என்று சொல்கிறார்.
 அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்களின் அடிப்படைஉரிமைகள் எட்டப்படாமலே உள்ளன. அரசியல் தீர்வு என்பது; பொய்க்கதையாகவே ஆகிவிட்டது. போருக்குக் காரணம் தமிழ் மக்கள் அல்லர். அவர்களின் அடிப்படை பிறப்புரிமைகளை மறுத்து, அவர்கள் மீது இனப்படுகொலைக்கான படுகொலைகளை இலங்கையின்  படைத்துறை- காவல் தரப்பினர் கட்டவிழ்த்து விட்ட நிலையிற்தான் போர் வெடித்தது. அந்தப் போரைச் சிங்களத் தேசமே உருவாக்கியது. இந்தப் போரைத் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தள்ளப்பட்டார்கள்.
 இப்போது இனஅழிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு மாற்றாக இனப்படுகொலையாளிகளை மன்னிக்குமாறு தமிழ் மக்களை, இலங்கையின் தலைமையர் இரணில் கிளிநொச்சியில் நின்று கோரியுள்ளார். இங்கு இனஅழிப்புக்குப் பொறுப்பான அரசியல் தலைவர்களும், படைத்தளபதிகளும் தண்டிக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது.
 சிறுபிள்ளைக்குக் கூறுவதுபோல முற்றிலும் வேறுபட்ட, அரசியல் தீர்வு காணப்பட்ட, கறுப்பின மக்களின் கைக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்ட, கறுப்பின மக்களால் வெள்ளையர்களுக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை இலங்கைத்தீவின்  சிக்கலுக்கு இரணில் பொருத்தப் பார்க்கிறார். இது அறிவியல் குறைபாட்டின் காரணமாய் நடைபெற்றதொன்றல்ல. சிங்களத்தின் மீதுவிழுந்துள்ள தமிழின அழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து சிங்களத் தேசத்தைக்காப்பாற்றத் திட்டமிட்ட வகையில் இரணில் இதனைச் செய்கிறார். இதற்குத் தமிழர் தலைவர் எனக் கூறிக் கொள்வோர் சிலரும் சாமரம் வீசுகின்றனர்.
 இலங்கைத்தீவில் தமிழின அழிப்பைப் புரிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில்இருக்கின்ற சிங்கள இனத்தலைவர்களுக்கும், படையினருக்கும், நீதிமறுக்கப்பட்டிருக்கும், நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் எவ்வாறுமன்னிப்பு அளிக்க முடியும்? எவ்வாறு இனவழிப்பை மறந்து விட முடியும்?
 இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளாகியும் சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான நீதி பற்றி இன்னும் சிந்திக்கும் நிலையில் இல்லை. மாறாகத் தமிழின அழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் சிங்களத் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது ஒத்துவராது – சாத்தியப்படாது. உரிமைகள் மறுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்தோடு நல்லிணக்கம் பேசுவது என்பது அதிபர்-அடிமை உறவு நிலையாகும். எனவே முதலாவதாகத் தமிழர் தேசத்துக்கு நீதி கிடைத்தாகவேண்டும்.
 “இனப் படுகொலையைப் பிரிவினை மூலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்.” (“Genocide can be compensated only by secession”) என்ற கூற்று இங்கு கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் பன்னாட்டுப் போர்க்குற்றக் கூட்டு விசாரணைக்காகச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் நிலையில், இனஅழிப்புக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்களிடம் இருந்து இரணில் மன்னிப்புப் பத்திரம் கோருகிறார். தமிழ் மக்களுக்கு நீதியையும், அரசியல் உரிமையையும் வழங்குவதற்கு மாற்றாக, இனப்படுகொலை புரிந்த சிங்களத் தலைவர்களையும், கொல்லும் இயந்திரம்(Killing Machine) எனச் சொல்லப்படுகின்ற சிங்களப் படையினரையும் காப்பாற்றுவதற்கு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் வாயிலாக மன்னிப்புப் பத்திரம் பெற்றுப் படுகொலையாளிகளைப் பாதுகாக்க முற்படுகிறார். இது நல்லிணக்கம்,மன்னிப்பு என்ற சொற்களின் பேராலான இன்னொரு மோசமானஇனஅழிப்புச் சிந்தனை கொண்ட அரசியலாகும். இது குறித்துத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 
 இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 அக்டோபர், 2018

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம்

– உருத்திரகுமாரன் கண்டனம்


மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள உருத்திரகுமாரன், சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த செய்தி சரியானது என்பதை மெய்ப்பித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 இலங்கையின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு r.thave@tgte.org
நாடுகடந்த தமிழீழ அரசு
+1 614-202-3377

வெள்ளி, 22 மார்ச், 2013

செனீவா தீர்மானம் - இலங்கைக்குத் தோல்வி: உருத்திரகுமாரன்

செனீவா தீர்மானம்- தமிழர்களுக்கு வெற்றி இல்லை; ஆனால் இலங்கைக்கு த் தோல்வி: உருத்திரகுமாரன்

ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம், தமிழர்களுக்கு வெற்றி இல்லை; ஆனால், அது இலங்கைக்கு தோல்வியே என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன்.
"தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, இந்திய அரசை தம் வசப்படுத்துவதில் தமிழகம் அடையும் வெற்றியில்தான் பெரிதும் சார்ந்துள்ளது."
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. ஆனால் நிச்சயமாக இதனை இலங்கைக்கான தோல்வியாக நாம் பார்க்க முடியும் என்றார் ருத்திரகுமாரன்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம்தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை இலங்கைவுக்கான தோல்வியாக நாம் பார்க்க முடியும்.
அனைத்துலக அழுத்தங்கள் எதுவுமின்றி, தான் விரும்பியவாறு அதிகாரத்தை தமிழர் தேசத்தின் மீதும் இலங்கைத் தீவின் ஏனைய மக்கள் மீதும் செலுத்த விரும்பும் மகிந்த ராஜபட்சவின் குடும்ப ஆட்சிக்கு இத் தீர்மானம் ஒரு தொல்லையாகவே இருக்கும். மேலும் இத்தகைய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதும் நிறைவேற்றப்படுவதும் சிங்களம் மறைக்கவும் மறக்கவும் விரும்பும் இறுதி போர்க்கால நிகழ்வுகளை அனைத்துலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு வழிகோலச் செய்கிறது.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இலங்கைக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் உறுதியான ஆதரவு நாடான ஜப்பான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருப்பதை இங்கே குறிப்பிடலாம்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை இலங்கையின் ஆதரவு நாடுகள் என்பதனை விட ஏதோ ஒரு வகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகைளுடன் முரண்பட்ட நாடுகள் எனக் குறிப்பிடுவதும் கூடுதல் பொருத்தமாக இருக்கும். இந்த உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கில் (unipolar world order) இருந்து விலகி பல முனை உலக ஒழுங்கினுள் (Mulit-polar world order) நுழையும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது.
இருந்தபோதும் இலங்கை அனைத்துலக அரங்கில் கூடுதலான தனிமைப்பட்டு வருகிறது என்பதனை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை வாக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுவது மிகவும் முக்கியமானது.
1) முதலாவது, ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு இனஅழிப்பு (Genocide) புரிகிறது என்பது தீர்மானத்தில் உள்ளடக்கப்படல்.
2) இரண்டாவது, இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் மீது அனைத்துலக விசாரணை, நீதியான பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டுவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளடக்கப்படல்.
இந்த இரண்டையும் அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. இதனால் இத் தீர்மானத்தை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்மானமாக, திருப்பதிப்படுத்தும் தீர்மானமாக நாம் கருதமுடியாது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் அரசுகள் இயங்கும் நடைமுறையினைப் அறிந்தவர்கள் என்ற வகையிலும் நலன்களின் அடிப்படையில் அமையும் அரசுகளின் லாப நட்டக் கணக்களின் சூத்திரங்களைப் புரிந்தவர்கள் என்ற வகையிலும் இந்தத் தீர்மானம் எமக்கு ஆச்சரியமான ஒன்றாக அமையவில்லை.
இருப்பினும் நீதி கோரும் தமிழ் மக்களின் நீதிக்கான குரல் இத் தீர்மானத்தில் உரிய முறையில் மதிக்கப்படவில்லை என்பது குறித்து நமது அதிருப்தியினை பதிவு செய்ய விரும்புகிறோம்.
குறைந்தபட்சம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தீர்மானத்தில் உரியவகையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
மத அடிப்படையிலும் அரசியல் கருத்து அடிப்படையிலும் இலங்கைத் தீவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குறிப்பிடும் இத் தீர்மானம் இலங்கைத் தீவில் பாரிய முறையில் மனித உரிமை மீறல்கள் தமிழினம் அடிப்படையிலேயே மீறப்படுகின்றன என்ற உண்மையை சுட்டிக் காட்டாமையை நாம் கண்டிக்கின்றோம்.
இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய சிலவற்றை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் முக்கியம் எனக் கருதுகிறேன்.
நாம் உலக அரசுகளுடன் நமக்கு நியாயம் கிடைப்பதற்காக அரசியல் ராஜதந்திர வழிகளில் தொடர்சியாகப் போராட வேண்டியவர்களாக உள்ளோம். இலங்கைத் தீவில் சிங்கள அரசாங்கம் தமிழீழ மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர வன்முறை இனஅழிப்பின் (genocide) பாற்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான ஒன்றல்ல.
இருப்பினும் இதனை இன அழிப்பாக வெளிப்படுத்தாது வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது இரு தரப்பிரானாலும் புரியப்பட்ட போர் குற்றம் என்ற நிலைப்பாட்டையே அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கின்றன.
இன அழிப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பாதுகாப்பான தீர்வாக பாதுகாப்பு, (self defense), தன்னினம் பேணுதல் (self preservation) ஆகிய சர்வதேச சட்ட தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பரிகார நீதியாக remedial justice ) தமிழீழத் தனி அரசு அமைக்கும் நிலையை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவந்திருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவந்திருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்

தெற்காசிய பிராந்தியத்தில், அதிகார மையமாகத் திகழும் இந்தியாதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரகுமாரன். இது குறித்து சென்னையில் இணையவழி காணொளி மூலம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை சபையினை மையப்படுத்திய இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகக் கருத்தபடுகிறது. மேலும், இந்திய மத்திய அரசினை நோக்கி தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் வலுத்துவரும் நிலையில், அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிரான வலுவானதொரு தீர்மானத்தினை இந்தியா கொண்டு வந்தால், உலக சமூகமும் அதனைப் பின்தொடரும் என்றார் அவர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான அவைப் பிரதிநிதி, தமிழக தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி ஏற்பாட்டின் பேரில் இந்த ஊடக மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ருத்திரகுமாரன், தமிழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்துவரும் 'மாணவர் போராட்டத்தை' பாராட்டினார். மாணவர்கள் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்திகள். மாணவர்களால் மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்றார்.
இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு 'இனப் படுகொலையே' என்பதை பலமுறை வலியுறுத்திப் பேசிய அவர், அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச் சபையில், இந்திய அரசு 'அனைத்துலக சுதந்திரமான விசாரணையை' முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த் தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும் என்றார்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, 'வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 'அனைத்துலக விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை' ஆகியவற்றைக் கோரியிருப்பது பாராட்டத்தக்கது. அதேபோல, தமிழக ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், 'இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே' என்பதை கோரியிருப்பது வரவேற்கத் தக்கது; மத்திய அரசை தமிழகம் நிர்பந்திக்க வேண்டும் எனக் கூறினார்.
உலக நாடுகள் இலங்கையை எதிரி நாடாகக் கருத தயாராயில்லை. தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கைப் பிரச்னையை அணுகுகின்றன. அதனால்தான் தெரிந்து இருந்தும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன. அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும்.
தாய்த் தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலகத் தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது என்று கூறிய ருத்திரகுமாரன், தமிழீழத்தைப் பெற்றுத் தர இந்திய முயற்சி செய்ய வேண்டும். தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்ற கேள்விக்கு இடமில்லை என்று கூறினார். காரணம், காஷ்மீர் விவகாரம் வேறு, ஆனால் இலங்கையில் நடப்பது 'இனப்படுகொலை' என்பதை உணர வேண்டும் என்றார்.
உலக நாடுகள் வடக்கு-கிழக்குப் பகுதிகளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் தங்களது தூதரகங்களைத் திறக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தார் ருத்திரகுமாரன்.