TGTE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TGTE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்

 அகரமுதல


தமிழ்மக்களின் தமிழீழப் போராட்டத்துக்குக் குந்தகம் விளைவிக்கின்றது : தலைமையர்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை !

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தற்சார்பு உரிமையின் அடிப்படையில் விடுதலை தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த மேன்முறையீட்டு விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான பயங்கரவாத முத்திரையினைச் சிறிலங்கா அரசு தனது தமிழினஅழிப்பைப், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாகக் கைக்கொள்கின்றது எனவும் தலைமையர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக இந்த சட்டநடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் முத்திரை குத்துவதற்கு எதிரான முதன்மையான அறைகூவல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓர் அமைப்பு நிகழ்நடப்பில் (பிரித்தானிய பயங்கரவாதச் சட்டம், 2000 தந்துள்ள வரைவிலக்கணப்படி) ”பயங்கரவாதத்தில்’ தொடர்புடையது’ என்று பிரித்தானிய உள்துறை ‘நியாயமாக நம்பினால்’ மட்டுமே அந்த அமைப்பைத் தடைசெய்ய முடியும். ஆனால் தடைக்கான சட்டச் சோதனை தொடர்ந்து நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை அரசினர் மீளாய்வு செய்வதற்கு எவ்விதப் பொறிமுறையும் இல்லை. அஃதாவது தடைநீக்கத்துக்காக உள்துறைச் செயலருக்குத் தரப்படும் விண்ணப்பம் வெற்றிபெறா விட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காலவரையின்றி தடைப்பட்டியலில் இருந்து வரும் என்று பொருளாகும்.

” தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, தன்வரையறை உரிமையின் அடிப்படையில் தமிழீழ அரசு விடுதலைக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்குக் குந்தகம் விளைக்கின்றது “

-தலைமையர் வி.உருத்திரகுமாரன்

தொடர்பான மேல் விவரங்கள் வருமாறு:

பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் சயித்து சாவித்து நா.உ.க்கு, 2018 ஆம் ஆண்டு திசம்பரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எழுதிய விண்ணப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரியிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பயங்கரவாதத்தில் தொடர்பில்லை என்ற அடிப்படையிலும், அதன் மீதான தடை நீடிப்பது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட) தமிழ்மக்களின் பேச்சுரிமைக்கும், ஒன்றுகூடும் உரிமைக்கும் இடையூறாக உள்ளது என்பதோடு, தமிழர் தன்வரையறை உரிமையை விடுதலை அரசின் வடிவத்தில் பயன்படுத்துவதற்குத்கு தடையாக உள்ளது என்ற அடிப்படையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தடைநீக்கம் கோரப்பட்டிருந்தது.

2018 சூன் மாதம் இலங்கை ஒட்டுசுட்டானில் மூன்று தனியாட்கள் ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளது கொடிகளையும் தமது வாகனங்களில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் ஒரே நிகழ்வுபற்றிய இலங்கையின் பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகப் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்திருந்தன். இதன் பொருள் ‘தமிழீழ விடுதலைப் புலிகளைச் சார்ந்த ஆட்களும் குழுக்களும்’ ‘பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களாக’ இருக்கக் கூடும் என்பது இந்தப் பகுப்பாய்வுக் குழுவின் கருத்தாகும்.

இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலித்திருந்ததோடு, குறித்த பத்திரிகைச் செய்திகள் உண்மையானதாக என்பதற்குப் போதியளவு சான்றுகள், ஆதாரங்கள் பிரித்தானிய உள்துறை அமைச்சு வழஙகவில்லை என்றும், மேலும் இந்த நிகழ்வினை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்த முடியாது என்றும் வாதிட்டிருந்தது.

இதனை 2019 மார்ச்சில் பிரித்தானிய உள்துறைச் செயலர் மறுத்த நிலையிலேயே அதற்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்போது மேல்முறையீடு செய்திருந்தது.

நடந்த விசாரணையில் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கான சட்டத்தரணிகள் வாதுரைத்த போது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் ‘நம்புவதற்கு நியாயமான காரணங்கள்’ இருப்பதாகக் கூறினார்கள்.

குறித்த ஒட்டுசுட்டான் நிகழ்வு இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதியாக நாடகமாக இருக்கலாம் அதே பத்திரிகையில் இருந்த செய்தியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குப் ‘பயங்கரவாதத்தில் தொடர்புண்டு’ என்று முடிவுசெய்திருந்தாலும், புலிகளைத் தொடர்ந்து தடை செய்வது குறித்த தற்துணிவு அதிகாரத்தைப் பிரித்தானிய உள்துறைச் செயலர் சட்டமுறைப்படிப் பயன்படுத்தவில்லை எனவும் வாதிப்பட்டப்பட்டது. ஏன்எனில் விடுதலைப் புலிகள் மீது தொடரும் தடையினால் தமிழர்கள் விடுதலை அரசின் வடிவில் தனியரசுக்கு ஆதரவு திரட்டவும் தெரிவிக்கவும் பிரித்தானியாவில் தமிழர்களுக்குள்ள உரிமைகள் மீது தாக்கம் கொளவதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரையாக அமைந்திருந்தது.

கடந்த சூலை 31 இல் இடம்பெற்றிருந்த கமுக்கச் சான்றுரைகளின் அடிப்படையில் கமுக்க விசாணை இடம்பெற்றிருந்தது. இந்த ஆணையத்தின் விசாரணை என்பது பிரித்தானிய நீதித்துறையினால் மறைவான வழக்கு நடவடிக்கையில் கமுக்கச் சான்றாளரை ஆணையம் விசாரித்தது ஆகும்.

இந்த விசாரணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமோ, அவர்களது சட்டத்தரணிகளோ கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டவாளர்கள் பட்டியலில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தேர்ந்தெக்கபட்ட சட்டவாளர் அங்கசு மெக்குள்ளோக்கு அ.வ.( Angus McCulloch Q.C) பங்கெடுத்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்ககத்தின் இந்த சட்ட நடவடிக்கையில் இங்கிலாந்து பேரரசியாரின் அ.வ.(QC) மாண்பைப்பெற்ற மாயா இலெசுட்டர் அ.வ.(Maya Lester QC),  பிரிக்கு வழக்காளர் மன்றத்தின் மால்கம்  (Malcolm Birdling of Brick Court Chambers), இயாமி பாட்டர்(Jamie Potter),  கரோலின் இராபின்சன் Caroline Robinson of Bindmans LLP.) முதலான பல முதன்மைச் சட்டவாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

வியாழன், 4 ஜூன், 2020

தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா



தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா

கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா
 நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர்,
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.  
கிழக்கு திமோர் தலைநகரம் திலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் பின்வருமாறு தெரிவித்தார்:
கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட்டு தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, இசுகாட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான்  வேண்டும்;இசுபெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் இசுகாட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்துக் கருத்துரைத்தார்.
இலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதைக் குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் செருமனியில் (இ)யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும். ஒவ்வொரு தேசமும் விடுதலையாக  இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த விடுதலையின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய  கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் விடுதலைக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
இலங்கை அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் இரமோசு-ஓர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.
மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

புதன், 27 மார்ச், 2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்

அகரமுதல
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.
தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/  இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விவரங்கள்:
செருமனி : திரு இரா.பாசுகரன்
மின்வரிberlintamil@web.de
 பிரான்சு : திரு குமாரசாமி பராசா
மின்வரிtgtefranceelection@gmail.com
பேசி: 07 53 31 85 45
சுவிசுதிரு ஞானசம்பந்தன் குகநாதன்
மின்வரிswiss.ec@tgte.org
 பிரித்தானியா : திரு சி.சிதம்பர(பிள்ளை)
மின்வரிinfo@tgteelection.org
 அமெரிக்கா திரு இராசன் மனோரஞ்சன்
மின்வரிranjan@3sg.com
 தென்மார்க்கு  – நோர்வே – சுவீடன் – பின்லாந்து:   திரு எசு.கே.கதிர்
மின்வரிkathirkar@hotmail.com
பேசி : 4591403739
 ஆத்திரேலியா – நியூ சிலாந்து :  திருவாட்டி இலட்சுமி உலோகதாசன்
மின்வரிausnzl.ec@tgte.org
 கனடா : திரு சிவ இரத்தினசிங்கம்
மின்வரிsiva.mtg@gmail.com
 தேர்தல் தொடர்பிலான நாடுவாரியான விவரங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 அக்டோபர், 2018

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம்

– உருத்திரகுமாரன் கண்டனம்


மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள உருத்திரகுமாரன், சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த செய்தி சரியானது என்பதை மெய்ப்பித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 இலங்கையின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு r.thave@tgte.org
நாடுகடந்த தமிழீழ அரசு
+1 614-202-3377

திங்கள், 16 ஜனவரி, 2017

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.



அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

சிறிலங்காவின் நள்ளிரவு நீதி

பன்னாட்டு நீதிபதிகளுக்கான 

தேவையினை வலுப்படுத்துகிறது.

 

மனித உரிமை மன்றமேவட கொரியாவைப் போல் சிறிலங்காவையும்
நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!
  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராசா இரவிராசு அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரவிராசு அவர்கள் 2006 ஆம்ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு நகர்மையப்பகுதியில் காவல்துறை – பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூப்பிடு தொலைவில் பட்டப்பகலில்கொலைகாரர்கள் அவர் வண்டியின் மீது சுட்டார்கள்.
  இரவிராசு படுகொலைக்காக 2015 நவம்பர் 3ஆம் நாள் கடற்படையினர் மூவர் உட்பட அறுவர் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்கள். 2016திசம்பர் 24ஆம் நாள் ஒரு சிங்கள நீதிபதியும் சிங்களச் சான்றாயர் குழுவும் அனைத்து எதிரிகளையும் விடுவித்தனர். இவ்வழக்கில் நீதிபதியான மணிலால் வைத்யதிலக சான்றாயத்தில் சிங்கள இனத்தவர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற எதிர்த் தரப்புவேண்டுகோளை ஏற்றுக் கொண்டிருந்தார்.
  சான்றாயம் அமைப்பதில் இத்தகைய இனப் பாகுபாட்டுக் காரணங்களைப் பயன்படுத்தியிருப்பது சிறிலங்காவின் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. எதிரிகளை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த சான்றாயர்கள் நள்ளிரவு கடந்த மௌன வேளையில் தமது தீர்ப்பை வழங்கினார்கள். இதுவும் கூட சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில்முதல் முறைதான். இந்தத் தீர்ப்பிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால், சிறிலங்காவின் நீதித் துறையும் அரசுமே கூடஇனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க் குற்றங்களுக்கும் மானிடஎதிர்க் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது.         
  கடந்த 2015 அட்டோபர் மாதம் சிறிலங்கா அரசாங்கமே அயல்நாட்டு  நீதிபதிகளின் பங்கேற்புடன் நிலைமாற்ற நீதிச் செயல்வழிகோரும் தீர்மானத்தைப் பிற அரசுகளுடன் சேர்ந்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கூட்டாக முன்மொழிந்திருந்தது. இது குறித்து இற்றைவரை சிறிலங்கா அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அது மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்த உறுதிகளை அப்பட்டமாக மறுதலித்து, அயல்நாட்டு நீதிபதிகள் யாரும் இடம்பெறப்போவதில்லை எனவே அறிவித்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வித வழக்கும் தொடுக்கப் போவதில்லை எனவும் கடற்படை- படைத்துறை அதிகாரிகளுக்கும் இதே போன்ற வாக்குறுதிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனா முன்பே வழங்கியுள்ளார்;.
  இந்த நூற்றாண்டின் ஆகக் கொடிய குற்றங்கள் சிலவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக இனியும்  நிலையான பொறுப்புக்கூறல் பொறிமுறை இல்லாமற்போவது இக்குற்றங்களுக்கு இலக்காகிப் பாதிப்புற்ற தமிழ் மக்கள் தொடர்பான சிக்கல்மட்டுமல்லாது ஐநா அதனது மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மை, நம்பகத்தன்மையின் மீதுநேராகத் தாக்கங்கொள்வதாகும்.
  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாவது வரவிருக்கும் 2017மார்ச்சு அமர்வில் சிறிலங்காவுக்கு மேலுமொரு நீட்டிப்பு வழங்குவதன் மூலம் பாதிப்புற்ற தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு நீங்களும் உடந்தையாக இருந்து விடாதீர்கள் என்பதே. 2015 செட்டம்பரில் மனிதஉரிமைகளுக்கான உயர் ஆணையர் பரிந்துரைத்த இடைக்காலப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான காலம் வெகுவாகக்கடந்து விட்டதென்பதே உண்மை.
   மனித உரிமை ஆணையம்; ஏற்கெனவே வட கொரியாவுக்குச் செய்ததுபோல சிறிலங்காவையும் ஐநாவின் பொதுப் பேரவையின்பார்வைக்கு அனுப்ப வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் மீது மக்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை நிலைத்திருப்பதற்குஅவ்வகை முரணற்ற உறுதிப்பாடு முக்கிய காரணியாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
விசுவநாதன் உருத்திரகுமாரன்
தலைமையர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
– முருகையா சுகிந்தன், செயலகம், நா.த.ஈ.அ