வியாழன், 4 ஏப்ரல், 2013

மே.வங்கத்தில் காவலர் தாக்கியதில் மாணவன் பலி : நாடு முழுவதும் கொந்தளித்த மாணவர்கள்




மே.வங்கத்தில் காவலர்  தாக்கியதில் மாணவன் பலி : நாடு முழுவதும் கொந்தளித்த மாணவர்கள்
கல்கத்தா -  மேற்குவங்க மாநிலத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர், போலீசார் தாக்கியதில் மரணமடைந்ததாக எழுந்த புகாரால் அம்மாநிலத்தில் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு்ள்ளது. இந்த சம்பவத்தினை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மனித உரிமை கமிஷன் விசா‌ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இம்மாநிலத்தில் மாணவர் சங்க தேர்தல் நடத்தும் முடிவினை அம்மாநில அரசு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள் சங்க கூட்டமைபினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நேற்று மாணவர்கள் கூட்டமைப்பினர் (எஸ்.எப்.ஐ.) சார்பில் கோல்கட்டாவில் பேரணி நடந்தது. அப்போது மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். இதில் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீஸ் தாக்கியதில் தான் மாணவர் பலி
: இந்த தாக்குதலில் சுதீப்தா குப்தா (23) என்ற கல்லூரி மாணவரை, போலீசார் தாக்கியதில் காயமடைந்தார். கோல்கட்டா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவர் இறந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. சம்பவம் தொடர்பாக கண்ணால் பார்த்த சக மாணவர் கூறிய போது, போலீசார் சுதீப்தா குப்தாவை தலையில் தாக்கினர். காயத்துடன் போலீஸ் காவலில் தான் இருந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் இறந்தார் என்றார்.

நீதி விசாரணை நடத்த கோரிக்கை
இது குறி்த்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மாணவர் சுதீப்தா குப்தா இறந்தது துரதிருஷ்டவசமானது. மம்தாவின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டில்லியில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் சில மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மாணவர் இறந்தது குறித்து மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டின் முன்பு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் , மாணவர் அமைப்புகள் குவிந்து வருகின்றனர். மாணவர் இறந்த சம்பவத்தினை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவிட்டனர். எனினும் முதல்வர் மம்தா, இறந்த மாணவனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக மம்தா கூறினார். மாணவர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. காங். கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக