செவ்வாய், 2 ஏப்ரல், 2013

இசுடெர்லைட் டு ஆலையைத் திறக்க உச்ச மன்றம் இசைவு

தூத்துக்குடி  இசுடெர்லைட் டு ஆலையைத் திறக்க  உச்ச மன்றம் இசைவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம்கோர்ட்டு அனுமதி
புதுடெல்லி, ஏப். 2-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆலை தொடங்கியது முதலே, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூய சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு ( என்.டி.சி.இ ) சார்பில் ஐகோர்ட்டில் 1996-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 1997-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

2010-ல் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு ஒப்பந்த தொழிலாளி ஒருவர் இறந்தார். இதனையடுத்து பிரச்சினை பெரிதாகியது. காற்று, தண்ணீர் ஆகியவற்றில் மாசு ஏற்படுத்துவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ஐகோர்ட்டில் மறு சீராய்வு மனு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு 18-10-2010-ல் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேற்றபட்ட நச்சு வாயுவினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை 30-ந்தேதி மூடப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோட்டில் நடந்து வரும் வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இன்னும் 3 மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக