வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இனப்படுகொலையை மறைக்கப் போர் எனச் சொல்லும் பிரணாப்



அமைச்சராக இருந்தபொழுதுதான் சிங்கள இனப்படுகொலைக்குப் பல்வேறு வகையில் இந்திய அரசு சார்பில் உதவியாக இருந்த பிரணாப் இப்பொழுதேனும் மாறலாம் அல்லவா? நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்ததைப் போர் முடிவிற்கு வந்து விட்டது என்று சொல்வதில் இருந்தே இவரது ஒரு தலைச்சார்பும் தமிழின எதிர்ப்போக்கும் வெளிப்படுகிறது. தாய்மண்ணைப்பற்றிச் சிந்திக்காத கலாம் போன்றவர்கள் அல்லாமல் மனித நேயம் மிக்கத் தமிழ் உணர்வாளர்கள் குடியரசுத்தலைவராகவும் தலைமை அமைச்சராகவும் அமர்ந்தால்தான் தமிழர்க்கு விடிவு கிடைக்கும். இனப்படுகொலையைப் போர் என்றும் வன்முறைக்கு எதிர்ப்பான நடவடிக்கை என்றும் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.  தமிழகச் சட்டமன்றத்தின் தமிழ்  ஈழம் தொடர்பான தீர்மானம் உலகெங்கும் பரவி ஈழத்தமிழ் மக்கள் விடுதலையும் நல்வாழ்வும் அடைய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


இலங்கையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு: பிரணாப் முகர்சி

போர் முடிவுக்கு வந்ததால் இலங்கையில் ஒற்றுமை நிலவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப்பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் கூறியதாவது: இந்தியா-இலங்கை இடையே  பல்லாண்டு காலமாக கலாசார, வரலாற்று அடிப்படையில் நெருங்கிய உறவு உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நெருங்கிய நட்புறவின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களில் இந்தியாவுக்கும் அக்கறை உண்டு.
போர் முடிவுற்றதால் அரசியல் தீர்வு காண இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக