நீர்நிலைகளை ப் பாதுகாப்பதில் சின்னநாகபூண்டி ஊரினர் முன் எடுத்துக்காட்டு
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைகளில்
வசிப்பவர்கள், தங்கள் வீட்டு கழிவுநீர் மற்றும் குப்பையை, அதே நீர்
நிலைகளில் வெளியேற்றுவது வழக்கமாகி விட்டது. இதனால், நீர் மாசுபடுவதுடன்
அதில் வாழும் உயிரினங்களும் செத்து மடிகின்றன. குடியிருப்போர் இடையே
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.
கோவில் குளம்: திருவள்ளூர்
மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னநாகபூண்டி கிராமம்.
சோளிங்கர் - சித்தூர் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. இங்கு, ஏறத்தாழ 500
விவசாய குடும்பங்கள் உள்ளன. கிராமத்தில், நெடுஞ்சாலையை ஒட்டி, படவேட்டம்மன்
கோவில் உள்ளது. கோவிலின் முன் அமைந்துள்ள குளத்தில் ஆண்டு முழுவதும்
தண்ணீர் நிரம்பி காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவில் குளம்
தூர் வாரப்பட்டு சீரமைக்கப் பட்டது. குளத்தின் மேற்கு கரையில் தொடக்கப்
பள்ளி, வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம்
உள்ளிட்டவை உள்ளன. வடக்கு கரையில் கதிரடிக்கும் களம், நூலகம் உள்ளன.
கிழக்கு கரையில் வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் அமைந்து உள்ளன.
"குளம் மாசடையக்கூடாது':
குளக்கரையில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டு கழிவுநீர், குளத்தில் சென்று
சேரக் கூடாது என்பதிலும், குளம் மாசுபடக் கூடாது என்பதிலும் கவனமாக
உள்ளனர். இதற்காக, தங்கள் சொந்த செலவில், வீடுகளின் பின்புறம் பிளாஸ்டிக்
குழாய்கள் அமைத்துள்ளனர். குழாய்களை பூமியில் பதித்து, ஊரின் வடக்கு
பகுதியில் உள்ள போக்கு கால்வாயில் இணைத்து உள்ளனர். இதன் மூலம், கழிவுநீர்
ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. இதனால், குளம் சுத்தமாக
காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், குளத்துநீரை அச்சமின்றி
பயன்படுத்துகின்றனர். இது குறித்து, குளக்கரையில் வசிக்கும் தயாளன்
கூறுகையில், ""குளத்தில் கழிவுநீரை விடக்கூடாது என்பதால், பிளாஸ்டிக்
குழாய் பதித்து உள்ளோம். இதற்கு 5,000 ரூபாய் செலவு ஆனது. குளத்தில் உள்ள
தாமரை செடிகள் மற்றும் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில்
கவனமாக உள்ளோம். எங்களால் நீர் மாசுபடுவதை நாங்கள் விரும்பவில்லை,''
என்றார்.
"மற்ற ஊராட்சிகளிலும்': இது குறித்து,
சின்னநாகபூண்டி ஊராட்சிமன்ற தலைவர், வள்ளியம்மாள் கூறுøகியல்,
""ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய்
அமைக்கப்பட்டு, கழிவுநீர் ஊருக்கு வெளியே கொண்டுபோய்
வெளியேற்றப்படுகிறது,'' என்றார். மேலும், ""குளக்கரை பகுதியில் உள்ள
வீடுகளுக்கு மட்டும் கழிவுநீர் கொண்டு செல்வதற்கான கால்வாய் அமைக்க போதிய
இடவசதி இல்லை. இதனால், அங்கு வசிப்பவர்களே தங்கள் வீடுகளில் இருந்து
வெளியேறும், கழிவுநீரை பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி
வருகின்றனர்,'' என்றார்.
இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு
தலைவர், இளங்கோவன் கூறுகையில், ""சின்னநாகபூண்டியில் கழிவுநீர் கால்வாய்
வசதி இல்லாத இடங்களில், பொதுமக்கள் குழாய்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்றி
வருது நல்ல ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுபோல், மற்ற ஊராட்சிகளிலும்
செயல்படுத்துவது குறித்து, அடுத்தக் கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து
தீர்மானிக்கப்படும்'' என்றார்.
உண்மையான பசுமை வீடு: குளக்கரையில்
உள்ள ஒரு வீட்டின் நடுவே, ஆலமரம் வளர்ந்து வருகிறது. இந்த மரத்திற்கு எந்த
பாதிப்பும் இல்லாமல் அதை சுற்றி வீடு கட்டப்பட்டுள்ளது. கடந்த, 30
ஆண்டுகளாக இந்த மரம் வீட்டுக்குள் வளர்ந்து வருகிறது. சிமென்ட் மற்றும்
செங்கல்லால் கட்டப்பட்ட வீடு என்றாலும், இதுதான் உண்மையான பசுமை வீடாக
இருக்க முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக