ஞாயிறு, 24 ஜூலை, 2011

சனநாயகக் களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்

ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்

தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் உரைகல் என்பார்கள். மக்களால் மக்களுக்காக மக்களிடமிருந்து உருவாக்கப்படுவது சனநாயகம். அது அவர்களின் உணர்வின் பிரதிபலிப்பாகும். தற்போது சிறிலங்கா அரசு உரைத்து பார்க்க விரும்புவது ஜனநாயகத்தை அல்ல.
மத்தியிலிருக்கும் ஆளும் கட்சியினையே மாகாணத்திலும் உள்ளுராட்சியிலும் தெரிவு செய்வதனால் மட்டுமே தற்போது நடைபெறும் அபிவிருத்தி முயற்சிகள் தடைப்படுதனை தவிர்க்கமுடியும் – பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச
அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆளும்கட்சியின் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் – வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி.
தமிழ்மக்கள் கனவுகளிலிருந்து விடுபடவேண்டும். இல்லையேல் மீண்டும் அழிவினைக்காணவேண்டிவரும் – மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும் ஜாதிக கெலஉறுமயவின் தலைவருமான பாடலி சம்மிக ரணவக்க.
உள்ளூராட்சித் தேர்தலில் வடபகுதி மக்கள் அனைத்துலக சமூகத்தின் வாயை அடைக்கும் வகையில் தெளிவான தீர்ப்பை அளிப்பார்கள் -  சிறிலங்கா அரசின் அமைச்சர்களில் ஒருவரான விமல் வீரவன்ச.
இவர்களின் சொற்களின் பின்னே ஒளிந்திருப்பது பெருந்தேசிய பெருமிதம்.
இவர்கள் கூறவிரும்புவது தெளிவானது.  தமிழ் மக்கள் கட்டாயமாக ஆளும்கட்சியுடன் ஒத்துப்போகவேண்டும். வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையேல் தண்டிக்கப்படுவார்கள்.
எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 23-07-2011 அன்று  64 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடக்கப் போகின்ற போதும், வடக்கில் 20 உள்ளூராட்சி சபைகளுக்கு நடக்கப் போகும் தேர்தல் தான் – நாடாளுமன்றத் தேர்தல் போன்று முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.
வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள 20 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதில்தான் சிறிலங்கா அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்கிறது.
இந்த 20 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கும் விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்கலாம்.
‘உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது’ என்று ஒரு பழமொழி.
ஆனால் ‘வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில்  பெறும் வெற்றியினைக்கொண்டு  உலகின் வாயை அடைக்கலாம்’ என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் தமிழ்மக்களின் அரசியல்உரிமைகள் வலுப்படுத்தப்படும் என்றோ – உள்ளுராட்சி அதிகாரங்கள் உள்ளுர் மக்களிடம் கையளிக்கப்படும் என்றோ -  வடக்கை மிகப்பெரிய அளவில் அபிவிருத்தி செய்வோம் என்றோ – மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றோ – அல்லது பிரதேச ரீதியான திட்டங்கள் குறித்தோ வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
மாறாக பௌத்த சிங்கள தேசியவாத பேயின் கூக்குரல்:
“உங்கள் உடன்பிறப்பை, தந்தையை, தனையனை, குழந்தைகளை கொல்வோம் – கொடுஞ்சிறையிலிடுவோம்.
உம்  தாயினை, தாரத்தை, தங்கையை, தமக்கையை பாலியல் வன்புணர்வுகொள்வோம்.
உம் நிலத்தினை, வளத்தினை, பண்பாட்டு தளத்தினை, கையகப்படுத்துவோம் கருவறுப்போம்.
நடந்ததை மறந்து இன்று நடப்பதை மறுத்து நாளை இருப்புக்கு பயந்து எம்முடன் இணைவீர் எம் காட்டாட்சிக்கு பணிவீர்.”
என்றே வடக்கின் பட்டி தொட்டியெங்கும் எதிரொலிக்கின்றது.
இந்த எதிரொலியுடன் கூடவேதான் ‘உலகின் வாயை அடைப்போம்’ என்பது சிறிலங்கா அரசின் வாக்குறுதியாக இருக்கிறது.
இப்போது சிறிலங்கா அரசின் ஒரே இலக்கு அனைத்துலகத்தின் வாயை அடைப்பது தான்.
அதற்குத் தான் தமிழர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.
இதிலிருந்தே இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
இந்தத் தேர்தலில் நீதியாகவோ நியாயமாகவோ நடைபெற வாய்ப்பில்லை என்ற உண்மையை அனைவராலுமே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தநிலையில் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருக்க அரசாங்கத் தரப்பு தன்னால் இயன்றளவுக்கு சலுகைகளை நீட்டி வடபகுதி மக்களின் வாக்குகளை அபகரிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தத் தேர்தலில் ஈபிடிபி நிறுத்திய வேட்பாளர்கள் தான் பெரும்பாலும் போட்டியிடுகின்ற போதும், ஈபிடிபியை விட அதிக பரப்புரையில் ஈடுபடுவது என்னவோ சிறிலங்கா அரசாங்கம் தான்.
வெற்றிலையின் வெற்றி தான் அரசாங்கத்துக்கு இப்போது அதிக தேவையாக உள்ளது.
இதற்குக் காரணம் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலகப் பொறிகளில் சிக்கியுள்ளதே.
பொறிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உபாயமாக இந்தத் தேர்தலை சிறிலங்கா அரசு பயன்படுத்த எத்தனிக்கிறது.
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டவையே.
எனவே தமிழ்மக்களின் வாக்குகள் சிறிலங்கா அரசுக்கு கிடைக்குமேயானால், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றே உலகம் ஏற்றுக் கொண்டு விடும் என்று நம்புகிறது சிறிலங்கா அரசாங்கம்.
சனல் -4 காணொலி, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் அழுத்தங்கள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகள், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளின் அழுதங்கள் எல்லாமே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கழுத்தை ஒன்று மாறி ஒன்றாக நெரித்துக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தில் இருந்தும் தம்மை விடுவிப்பதற்கான ஒரே ஆயுதமாக சிறிலங்கா கருதுவது இந்தத் தேர்தலைத் தான்.
தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், எவ்வாறு அவர்கள் தம்மோடு இணைந்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்புவதற்குத் தயாராகி வருகிறது சிறிலங்கா அரசு.
அதற்காகவே இந்தத் தேர்தலின் வெற்றியைக் குறிவைக்கிறது.
இந்தநிலையில் தமிழ்மக்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் காயமடைந்ததும், சிறைகளுக்குள் தள்ளப்பட்டதும், காணாமற் போனதும் ஒன்றும் பொய்யான நிகழ்வுகள் அல்ல.
இந்தக் காயங்களையெல்லாம் அபிவிருத்தி, சலுகைகள் போன்ற மாயமான்களை காட்டி- மூடி மறைத்து விடலாம் என்று கற்பனை செய்கிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
போரினால் சீரழிந்து சிதைந்து போயுள்ள தமிழரின் தாயகத்தை அபிவிருத்தி செய்வது முக்கியமானதும் முதன்மையானதுமான கடமையே.
எப்படி கண்களை விற்று சித்திரம் வாங்க முடியாதோ அதேபோல்  அபிவிருத்திக்காக அரசியல் உரிமைகளைப் பறிகொடுத்து விட முடியாது. ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இரண்டில் எதனையும் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை என்பதே தமிழ்மக்களின் பட்டறிவாகும்.
அரசாங்கத்துடன் இணைந்து நின்றால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்ற கோட்பாடு பொய்யானது.
ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கும் சக்திகளால், இதுவரை காலத்திலும் தமிழ்மக்களால் எதைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது?
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த டக்ளஸ் தேவானந்தா அதையெல்லாம் கைவிட்டு மகிந்த ராஜபக்ச சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாகியுள்ளது தான் மிச்சம்.
தமது சின்னத்தையும் கொள்கையையும் கூட தக்க வைக்க முடியாதவர்களால் தமிழ்மக்களின் உரிமைகளைத் தட்டிக் கேட்க முடியும் என்று எவ்வாறு நம்ப முடியும்?
யாழ்ப்பாண மாநகரசபையினை வெற்றிலைச்சின்னத்தின் கீழ் வெற்றி கொண்டபின் சிலையாக நின்ற சங்கிலியனும் கூட வாளேந்தும் உரிமையிழந்தான். தமிழர்கள் எப்போதும் ஆட்சியாளருக்கு வால்பிடிக்கவேண்டுமே ஒழிய ஒடுக்குமுறைக்கு எதிராக வாள் பிடிக்ககூடாது என்கிறார் யாழ்ப்பாண மாநகரத்தின் முதல்வர் அம்மணி.
தேர்தல் ஒன்று வந்தபின்னர் தான் யாழ்ப்பாணத்தில் பல பத்தாண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த வீதிகள்  திறக்கப்படுகின்றன.
மீன்பிடித் தடைகள் நீக்கப்படுகின்றன. மீள்குடியமர்வுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடக்கிறது.
இவையெல்லாம் தேர்தல் கால கனவுகள். அவை நிரந்தரமானவையல்ல. இதற்கு முந்திய தேர்தல் காலங்களில் திறக்கப்பட்ட வீதிகள் மூடப்பட்டதும், தளர்த்தப்பட்ட தடைகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டதும் தான் வரலாறு.
அப்படியானால்  இம்முறை தேர்தல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது ஏன்?
ஐ.நா அறிக்கையும் சனல் 4 காணொலியும் உலகின் முன் சிங்கள பெளத்த தேசியவாதிகளினையும் சிறிலங்காவின் ஆட்சியாளர்களினையும் நண்பர்களினையும் நிர்வாணப்படுத்தியுள்ளது. மனச்சாட்சியுள்ள மனிதர்களின் ஆன்மாவினை உலுப்பிக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் வரை பலியாக்கப்பட்ட பதினாயிரம் மக்களின் அப்பாவி உயிர்களுக்கு பதில்சொல்லவேண்டிய வேளைவந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள இத்தேர்தல் ஊடாக சிங்கள ஆளும்வர்க்கம் முயற்சிக்கின்றது.
இங்கு எதுவுமே நடக்கவில்லை. தமிழ்மக்கள் எங்களது ஆட்சியினையும் அதன் அக்கிரமங்களினையும் மகிழ்ந்து ஏற்றுள்ளனர். எம்மையே ஆதரிக்கின்றனர் என உலகுக்கு பறைசாற்றி தப்பித்துக்கொள்ளவே இத்தேர்தலில் மகிந்த அரசு களமிறங்கியுள்ளது.
எனவே இத் தேர்தல் தமிழ்மக்களுக்கு மிக முக்கியமானது. எமது அக்கறையின்மையினையும் அசமந்தத்தினையும் அச்சப்படும் பலவீனத்தினையும் சாட்டாக கொண்டு மகிந்தவினையும் அவர் கூட்டத்தினரையும்  புனிதராக்க  வாய்ப்பளிக்க கூடாது.
இத்தேர்தல் எமக்கு உரிமைகளினைத்தராது ஆனால் தம்மை அழித்தவர்களுடன் தமிழ்மக்கள் இல்லை என்ற செய்தியினை உலகுக்கு கூறவேண்டியுள்ளது. எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நியாயம் கோரும் போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
ஆகவே, உள்ளூரில் தெரிந்த முகங்கள், உறவினர் என்பதற்காக புள்ளடி போட வேண்டும் என்று கருதுவது தவறானது. இலவச சேலைக்கும் தற்காலிக வேலைக்கும் வெற்றுக் காசோலைகளுக்கும் வெகுமதிகளுக்கும் எமது மக்கள் சோரம் போகமுடியாது.
வாய்ப்பு என்பது ஒருமுறைதான். மீளவும் வருவதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. தமிழரின் கருத்துரிமைச் சுதந்திரத்தினை வாக்களிக்கும் உரிமைகளினூடாக உறுதிப்படுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இந்தமுறை தவற விட்டால் இதுபோன்ற வாய்ப்பு பின்னொரு போதும் கிடைக்காது போய்விடலாம்.
எனவே தமிழ்மக்கள் சரியான தெரிவை – முடிவை எடுக்க வேண்டியது அவசியம். கடந்த காலங்களில் தேர்தல்களில் பங்குபற்றாமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்தது போல் இம்முறை வாழாவிருக்கக்கூடாது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அறிமுகங்கள் சொந்தபந்தங்கள் என்ற நிலைகளினைக் கடந்து அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலத்தினை அதிகரிக்கவேண்டும்.
தேர்தலில் பங்குபற்றாமல் ஒதுங்கியிருப்பது சிங்களக்கட்சிகளின் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் என்பதனை நாம் மறக்ககூடாது.
புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் தேசத்தில் வாழும் தங்கள் உறவுகள் தேர்தலில் பங்குபற்றுவதனையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதனையும் ஊக்குவிக்கவேண்டும். உறுதிசெய்யவேண்டும்.
தமிழரின் கையாலேயே தமிழரின் தலையில் மண் அள்ளிப் போட வைக்கவே சிறிலங்கா அரசு முனைகிறது.
இன்று தமிழருக்கு நியாயம் கிடைக்க உலகின் பல நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதையெல்லாம் இந்த ஒரே தேர்தலின் மூலம் தட்டிக்கழித்து நிராகரித்து விடக் கூடாது.
உலகத்தை எமது பக்கம் திருப்பும் முயற்சியில் இப்போது தான் ஓரளவு வெற்றி கிடைத்து வருகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வெண்ணெய் திரண்டு வருகையில் நாம் தாழியை உடைத்து விடக் கூடாது.
தமது வரலாற்றுக் கடமையை தமிழ் மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
- புதினப்பலகை குழுமத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக