திங்கள், 25 ஜூலை, 2011

அசைக்காது.. அசைக்க முடியாது...! கருணாநிதி

தி.மு.க. என்னும் மலையை யாராலும் அசைக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் தலைமையின் குடும்பப்பாசம் அதனை அரித்துக் கொண்டுள்ளது என்பது் பேருண்மை.கட்சிக் கொத்தடிமைகள் விழிப்புணர்வு பெற்றாலன்றித் தலைமை  உணராது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அசைக்காது.. அசைக்க முடியாது...! கருணாநிதி

First Published : 25 Jul 2011 12:59:17 AM IST


கோவை, ஜூலை 24: தேர்தல் தோல்வி திமுகவை அசைக்காது; அசைக்க முடியாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார்.  கோவை சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் மு.கருணாநிதியின் துவக்க உரை:  கோவையில் நடைபெறும் திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  பல பேர் எதிர்பார்த்தார்கள், இன்றைக்கு காலையிலே கூட பத்திரிகைகளைப் பார்த்தால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றம். சனிக்கிழமை நடைபெற்ற செயற்குழுவில் பெரிய கலவரங்கள் தோன்றும், பெரிய அமளிகள் தோன்றும், புயல் வீசும், அந்தப் புயல் காற்றை நாம் நம்முடைய கட்சிக்குத் தென்றலாக ஆக்கிக் கொள்ளலாம் என்று எண்ணியவர்கள் எல்லாம் ஏமாந்தார்கள் என்பதுதான் நேற்றைய தினம் நாம் நடத்திக் காட்டிய செயற்குழுவின் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.  அதே ரீதியில் நம்முடைய பொதுக்குழுவையும் கட்டுப்பாட்டோடு, அமைதியோடு, அரசியல் எழுச்சியோடு நடத்த வேண்டிய பெரும் பொறுப்பிலே இன்றைக்கும் நாம் இருக்கின்றோம்.  சில பத்திரிகைகாரர்கள், அவசரக்கார அரசியல்வாதிகள் என்ன எண்ணிக் கொண்டார்கள்? ஏதோ பொதுக் குழு கூடுகிறதென்றால், இந்தப் பொதுக் குழுவிலே தலைவர் யார்? பொதுச் செயலாளர் யார்? செயலாளர்கள் யார்?  என்றெல்லாம் தேர்தல் நடைபெறும் என்று எண்ணி பல பேர் கணக்குப் போட்டார்கள். அவர்களுடைய கணக்கு தவறானது என்பதை இன்றைக்கு வந்துள்ள தினசரி ஏடுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.  இடையிலே ஏற்பட்ட தேர்தல் தோல்விகளை நீங்கள் எண்ணிப் பார்த்துக் கொண்டு, இங்கே அமர்ந்திருக்கத் தேவையில்லை. தேர்தல் என்பது திமுகவின் இலக்கல்ல. அதிலே வெற்றி பெறுவது என்பது திமுகவின் விடாப்பிடியான கொள்கையுமல்ல.  நாம் நடந்து செல்கின்ற பாதையில், மக்களுடைய ஆதரவை எந்த அளவிற்குப் பெற்றிருக்கிறோம் என்ற கணக்கை நாம் பார்ப்பதற்கு பயன்படுத்துகின்ற ஒன்றே தேர்தல் என்பது தவிர, அதுவே முடிவானது அல்ல.  அந்த வகையிலே, திமுகவினுடைய இந்தத் தேர்தல் தோல்வி, நம்மை அசைக்காது. அசைக்க முடியாது. என்றைக்குமே திமுகவை நிலை குலையச் செய்யக்கூடிய ஆற்றல், இத்தகைய வெற்றித் தோல்விகளுக்குக் கிடையாது. வெற்றியிலும் நாம் வீராப்பு கொண்டு அலைந்ததில்லை. தோல்வியிலும் துவண்டு போனதில்லை.  இதனிடையே தோல்விகளை சந்திக்கின்ற சூழ்நிலைக்கு உள்ளாகி, இன்றைய தினம் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது? தோற்றுப் போன ஒரு கட்சி,  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகக் கூட அமைகிற வாய்ப்பற்றுப் போன ஒரு கட்சி, என்ன முடிவெடுக்கப் போகிறது என்று நம்மைப் பார்த்து, ஏளனப் புன்னகையோடு, இவர்களா மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறார்கள்? என்கிற அலட்சியப்  புன்னகையோடு, நம்மை சந்திக்கின்ற, நம்மைப் பற்றி சிந்திக்கின்ற யாராக இருந்தாலும், அவர்கள் எல்லாம் மலைக்கின்ற அளவிற்கு மாநாடு போல இன்றைய பொதுக்குழு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.  

1 கருத்து: