வியாழன், 28 ஜூலை, 2011

சமச்சீர் கல்வியில் செயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்

சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: 
உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்

First Published : 28 Jul 2011 02:20:16 AM IST


புது தில்லி, ஜூலை 27: தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே சட்டப் பேரவையில் பேசியுள்ளார், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அவருக்கு எப்போதுமே அக்கறை உண்டு என்று தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பி.பி. ராவ் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.எம்.பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். செüஹான் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார் வாதாடினார்கள்.குரு கிருஷ்ணகுமார் வாதாடுகையில், கடந்த திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசியபோது தரமான சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும், அப்போதைய அரசால் கொண்டு வரப்பட உள்ள கல்வி திட்டங்கள் தமிழக மாணவர்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது என்று தெரிவித்துள்ளதையும் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார். இதே கருத்தை இப்போதைய கல்வி அமைச்சரான சி.வி சண்முகமும் வலியுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், 2011-12ம் ஆண்டிலோ அல்லது அதன் பிறகோ சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள நிலையில் ஏன் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார் தமிழக அரசின் வழக்கறிஞர் பி.பி.ராவ்.அவரை இடைமறித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது என்ற நிலையில் எதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் ஒவ்வொரு உத்தரவுக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படுமா என்றும் கேள்விகளை எழுப்பினர். தமிழக அரசுக்குத் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படாததால் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், சரியான சட்ட ஆலோசனை வழங்கி இருக்கும்பட்சத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்காது என்றும் ராவ் விளக்கம் அளித்தார்.சொந்தக் கருத்து: நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தனது சொந்தக் கருத்தாகும் என்றும், இது தமிழக அரசின் கருத்து அல்ல என்றும் மாலையில் விளக்கம் அளித்தார்.சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என உத்தரவு பிறப்பித்த பிறகு அவசரச் சட்டம் எதற்கு என்று நீதிபதிகள் கேட்டனர்."உண்மைதான். தேவையற்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்ததால் தமிழக அரசுக்குத் தேவையற்ற பிரச்னை எழுந்துள்ளது. இப்போது பிரச்னையில் மாட்டிக் கொண்டுள்ளோம். புத்தகங்களைச் சரி செய்த பிறகு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவோம் என்றார்.பாடதிட்டங்கள் மேம்பாடு மே 12-ம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும். அதனைத் தொடர்ந்து சமச்சீர் கல்வி அடுத்த ஆண்டோ அல்லது அதன் பிறகோ நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசின் சட்ட திருத்தத்தை ஆதரித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்களான அரிமா சுந்தரம், ராஜீவ் தவன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். வியாழக்கிழமை காலையில் கேவியட் மனு தாக்கல் செய்தவர்களின் சார்பாக மூத்த வழக்குரைஞரான அந்தியர்ஜுனா வாதாடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக