செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பிரித்தானியாவில் "திறப்பு" போராட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரித்த திகதி : 25 Aug 2009

இராணுவ வதைமுகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைமுகாம் களை திறந்துவிடு" என்ற "திறப்பு" போராட்டத்தை பிரித்தானிய தமிழர் பேரவையானது ஆரம்பித்துள்ளது.

இன்னமும் முள்வேலியின் பின்னால் லட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள்ளனர். பாரிய படுகொலைகளுக்கு உள்ளாகி மருந்தின்றி, உணவின்றி வாழ்ந்து பின்னர் முகாம்களுக்குள் அடைபட்டுள்ளனர். கொட்டும் மழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளம் மெனிக் பாமில் உள்ள 2, 3, மற்றும் 4 ஆவது பிரிவு முகாம்களுக்குள் நிரம்பியுள்ளதால் அந்த முகாம்களில் இருந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறி வெற்று நிலப்பரப்பில் இருப்பதாகவும், சிலர் வெளியே இடவசதி இல்லாமையால் முகாம்களுக்குள்ளேயே தொடர்ந்தும் வெள்ளத்துக்குள் அடைபட்டுள்ளனர்.

பெருவெள்ளம் வேகமாக அடித்துச் சென்றதால் முகாம்களில் உள்ளவர்களுக்காக என அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மலசலகூடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதுடன், அதற்குள் இருந்த கழிவுகள் வெள்ளத்துடன் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்து இருப்பதாகவும் இதனால் பெரும் சுகாதாரக் கேடுகள் ஏற்படலாம் எனவும் மனிதநேய அமைப்புக்கள் பலவும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த எம் மக்களுக்கு இயல்பு நிலை வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.

பிரித்தானிய மக்களுக்கு ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை குறித்து விளக்கும் முகமாகவும், சிறிலங்காவின் தமிழினச் சுத்திகரிப்பை அம்பலப்படுத்து வதற்காகவும் இன்று முதல் பல முனைகளில், சாதாரண மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என பல தளங்களிலும் ஒரு குரலாக, ஒரே குறிக்கோளுடன் ஓங்கி ஒலிக்கவிருக்கிறது திறப்பு போராட்டம். இதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பல நகரங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தாயக தமிழ் மக்கள் அவலம் பற்றிய விளக்கத்தை கொடுப்பதுடன், ஒவவொருவருடைய கையிலும் ஒரு "திறப்பு" கொடுக்கப்படும். "Unlock the concentration camps in Sri Lanka" என் ற வாசகத்துடன் கொடுக்கப்படும் இந்த திறப்பு எமது மக்களின் வதைமுகாம் வாழ்வை நினைவுபடுத்தி, அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுவதற்கு உதவும்.

இப்போராட்டத்தை உலகம் முழுக்க விரிவாக்குவதற்கு உலகத்தமிழர், மற்றும் மனித நேய ஆர்வலர்களின் உதவியை வேண்டி நிற்கிறோம்.

உலகத்தமிழர்களின் ஒற்றுமையை உடைப்பதற்காக செயற்படும் ஸ்ரீலங்கா அரசையும், தமிழர்களின் போராட்டத்தை சிதைப்பதற்காக சேர்ந்தியங்கும் சக்திகளையும் கண்டறிந்து, அவர்களின் சதிவலையில் வீழ்ந்து விடாதிருக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

இதேவேளையில் எமதுமக்களின் அடிமைவிலங்கு உடையும் வரை சகல கதவுகளும் தட்டப்படும் என்பதையும் வதை முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து சொந்த நிலத்தில் கடைசித் தமிழனை குடியமர்த்தும் வரை திறப்பு போராட்டம் தொடரும் என பிரித்தானிய தமிழர் பேரவை உறுதி எடுக்கிறது.


நன்றி
பிரித்தானிய தமிழர் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக