வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின்
ஊடக அறிக்கை
பிரசுரித்த திகதி : 27 Aug 2009

ஆகஸ்ட் 26, 2009

உடனடி வெளியீட்டிற்கு.

சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக பல காலமாக மேற்கொள்ளப்படும் மறுதலிப்புக்களின் மத்தியில், சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்னும் அமைப்பினால் பத்திரப்படுத்தப்பட்ட தமிழ் மக்களைச் சிறீலங்கா அரசபடைகள் மிகக் கொடூரமாகக் கொலைசெய்யும் ஒளிப்பதிவுக் காட்சியை லண்டனைத் தளமாகக் கொண்ட ‘சனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்டிருக்கும் ஒளிப்பதிவுக் காட்சியானது தமிழர்களிற்கு இழைக்கப்படும் கொடூரங்களிற்கான வெளிப்படையான நேரடிச் சாட்சியாக அமைகின்றது. இவ்வொளிப் படத்தில், உடைகள் களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, அடித்து உதைத்து சுடப்பட்டு எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வேளையில் சிறீலங்கா இராணுவத்தினர் சிங்களத்தில் கதைத்து சிரித்து மகிழ்கின்றனர்.

ஜனவரி மாதம் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கு சில பிரதேசங்களில் தடைவிதிக்கப்பட்ட நிலையில் படம்பிடிக்கபட்ட இவ்வொளித்தொகுப்பை, மாற்றியமைக்கப்பட்ட பொய்யானது என சிறீலங்காவின் படைப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆயினும் இவ்வொளித் தொகுப்பானது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கனடியத் தமிழ் இளையோர் அமைப்பானது சிறீலங்கா அரசினால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இக் கொடூரப் படுகொலைகளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இலங்கைத் தீவின் வடபகுதி மக்களின் கண்ணீர்த் துளிகளிற்கு பாரமுகம் காட்டி மெளனம் காட்டிய இவ்வுலகம், புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் எழுப்பிய அழுகுரலையும் தட்டிக்கழித்திருந்த வேளையில் சிறீலங்காவில் ‘சாட்சிகளே இல்லாது யுத்தம்’ நடந்து முடிந்துள்ளது. கடந்த வருட இறுதியில் லட்சக்கணக்கணக்கான தமிழ் மக்கள் வீடுகளை இழந்து உள்நாட்டில் அகதிகளாக வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவ்வேளையில் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர்.

இருந்த போதிலும் துரதிஷ்ட வசமாக இவ்வுலகம் எந் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இவ்வாறே இவ்வருட ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறீலங்கா அரசினால் படுகொலைசெய்யப்படும் வேளையில் உலகம் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காது மெளமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

தற்போது அண்ணளவாக 300, 000 தமிழ் மக்கள் சிறீலங்கா அரசபடைகளால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கனடியத் தமிழ் இளையோர் அமைப்பானது சிறீலங்காவின் நிலைமைகள் தொடர்பாக கனடாவினதும் உலகநாடுகளினதும் விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கு தொடர்ந்து செயற்படும். கனடியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் உலகநாடுகள் சிறீலங்காவில் தலையிட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் சுதந்திர ஊடகங்களை அனுப்புவதற்கும், மனிதாபிமான உதவிகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக