திங்கள், 24 ஆகஸ்ட், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 85: நெல்லியடித் தாக்குதல்!



கரும்புலிகள்
காரணம், இந்தியா எந்த நிலையிலாவது இலங்கை மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்ற தனது ஐயப்பாட்டை போக்கிக் கொள்வதற்கு பிப்ரவரியில் கொழும்பு தொழிலதிபர் சி.டி.ஏ. ஷாப்டர், பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் என்.கே.பி. சால்வே ஆகியோருடன் அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா ஆலோசனை நடத்தியிருந்தார்.என்.கே.பி. சால்வே அப்போது இந்திய கிரிக்கெட்டில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதுபோலவே இலங்கை அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்ததால் சால்வேயை அணுகுவது சுலபமாக இருந்தது. ஒரு பயம் காரணமாக இந்த ஆலோசனை நடைபெற்றிருக்கையில் இந்தியாவின் மனிதாபிமான உதவியை ஏற்பது ராஜதந்திரமானது என்ற முடிவுக்கு வந்தார் ஜெயவர்த்தனா. (ஐய்க்ண்ஹ’ள் நழ்ண் கஹய்ந்ஹ ஊண்ஹள்ஸ்ரீர் க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓஹக்ண்ஹய் -ல்ஹஞ்ங் 10-11)உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க, போர் நிறுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்த உணவுப் பொருட்களை வழங்குவதில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஜெயவர்த்தனா வேறு வழியின்றி அவர்களுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் இணைந்து செயல்படுவார்கள் என்றார்."ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் முதலியவற்றை விடுதலைப்புலிகள் விவரித்தவாறு அகில இந்திய வானொலி அப்படியே ஒலிபரப்பியது. இதன்படி இந்தப் போர் நடவடிக்கையால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 2000 பேர் என்று அறிவிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, "ஸ்ரீவத்ஸவா' என்கிற இந்தியக் கப்பல் ஜூன் 25-ஆம் தேதி காங்கேசன் துறைமுகத்தில் வந்து நின்றது. அந்தப் பொருள்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லுகையில், வாகன அணிவகுப்பின் முன்னதாக இந்தியத் தூதரக அதிகாரி ஹர்தீப் பூரியும், காப்டன் குப்தாவும், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வந்தனர். அப்போது சாலையின் இருபுறமும் இலங்கைத் தமிழர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர். அதேநேரம் அவர்கள் கையில், "எங்களுக்கு ஆயுதம் வேண்டும்' என்றும், "இந்தியா எங்களைப் பாதுகாக்க வேண்டும்' என்றும் இருவகையானப் பதாகைகள் இருந்தன.இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கம் நெல்லியடி மத்திய கல்லூரியில் முகாமிட்டிருந்த ராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகள் இயக்கத்தின், புதிய தற்கொலைப் படையான கரும்புலிகள் உறுப்பினர் மில்லர் நடத்தினார். அவர் வெடிகுண்டுகள் நிரம்பிய வேனை, அப்பாடசாலையின் நுழைவு வாயில் வழியாக ஓட்டிக்கொண்டு முகப்புக் கட்டடத்துக்குள் புகுந்தார்.இந்தத் தாக்குதலை அடுத்து ராணுவம் குண்டுகளை வீசியது. மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். பலர் கொல்லப்பட்டனர். இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. நிவாரணப் பொருள்களை விநியோகித்த இந்திய அதிகாரிகளும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வடமராச்சியில் அகப்பட்டுக் கொண்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நெல்லியடித் தாக்குதல்தான். இதில் பலியான முதல் போராளி மில்லர். பின்னாளில் இந்தப் பிரிவு மில்லர் பிரிவு என்றே அழைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக