ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009


First Published : 23 Aug 2009 11:24:00 PM IST

Last Updated :

சென்னை, ஆக. 22: தனது பிறந்தநாளில் "பெண்களே நாட்டின் கண்கள்' என்ற புதிய வறுமை ஒழிப்பு திட்டம் தொடங்கப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிறந்தநாள் வரும் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவையில் அரசு மருத்துவனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மாவட்டந்தோறும் 10 குழந்தைகள் வீதம் தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.33 லட்சம் வைப்புநிதி செலுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு பிறந்தநாளன்று ராமாபுரத்தில் இயங்கும் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.50,000 வழங்கப்படும். கொரட்டூர் அருணோதயம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, சைதாப்பேட்டை கருணை இல்லம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் கூடுவாஞ்சேரி நந்திவரம் பிரபாவதி டிரஸ்ட் ஊனமுற்றோர் சிறப்பு பள்ளி ஆகியவற்றுக்கு தலா ரூ.25,000 என ரூ.75,000 வழங்கப்படும்.

விருத்தாசலம் தொகுதியில் 10 ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.

பெண்கள் இல்லையேல் உலகம் இல்லை. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்தான் அது குடும்பமாகும். இத்தகைய பெண்ணின் பெருமையை சமுதாயம் போற்றி மதிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் ஒரு கிராம் தங்கம் கூட ஏழைகளால் வாங்க முடியாது. இதனால் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த அவலநிலையை உணர்ந்துதான் 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10,000 வங்கியில் வைப்பு தொகையாக வைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதன் மூலம் பெண் குழந்தை திருமண வயதை எட்டும்போது அந்த தொகை வளர்ந்து சுமார் ரூ.2 லட்சம் கிடைக்கும் என்றும் தெரிவித்தேன். இது ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கைச் சுமையை பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும்.

இதன்படி எனது பிறந்த நாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு சென்னையில் 20 குழந்தைகளுக்கும், மற்ற மாவட்டங்களில் தலா 10 குழந்தைகள் என்ற விகிதத்தில் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 10 குழந்தை என மொத்தம் ரூ.33 லட்சம் எனது சொந்த பணத்தில் வைப்புநிதியாக செலுத்த உள்ளேன்.

இதேபோல் கட்சியினரும் என்னுடைய பிறந்தநாளில் அவரவர் சக்திக்கு ஏற்ப ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றார் விஜயகாந்த்.


கருத்துக்கள்

வாழ்க கொடை உள்ளம்! அவரது கட்சியினரும் வேண்டுகோளை ஏற்று அறப்பணியில் ஈடுபடட்டும்! பிற அமைப்பினரும் அறச் செயல்களில் ஈடுபடட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக