புதன், 1 ஜூலை, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 31:
கூலிப்பட்டாளமல்ல, மண்மாறிய மக்கள்!



காப்பி பழம் பறித்தல், தோட்டத் தொழிலாளர்களின் ஆரம்பகாலக் குடியிருப்பு
இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு என்பது மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களையும் உள்ளடக்கியதே. இவர்கள் உண்மையில் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவார்கள். இவர்கள் இலங்கையின் மத்தியப் பகுதியான கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கில், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் வடபகுதியான யாழ், முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் ஒன்றாகப் பாவித்து இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள விவரம் அறியாதவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள். விவரம் அறிந்த அரசியல்வாதிகளோ குழப்புகிறார்கள். இந்தக் குழப்பத்தின் விளைவாக தமிழகத்தில் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ""பொழைக்கப் போன இடத்திலே, தனிநாடு கேட்டுத் தகராறு பண்ணா சுட்டுப் பொசுக்காம விடுவானா...'' என்பதுதான் அக் கேள்வி. பிழைக்கப் போன இடத்தில் உரிமைகள் கேட்டுப் போராடுவது என்பது தவறு அல்ல என்பது ஒருபுறம் இருக்க, உண்மையில் இன்று தங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்பவர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து குடியேறி முப்பாட்டன் காலத்திலிருந்து இலங்கையைத் தங்கள் தாய் நாடாகவும், இலங்கை மண்ணில் தாங்கள் பிறந்து, வளர்ந்து, உழைத்து, ஓய்ந்து முடிவில் அந்த மண்ணுக்குள்ளேயே மறைந்து விடுவது தவிர வேறு எண்ணமே இல்லாத மலையக மக்கள் அல்ல. இவர்கள் ஒருபோதும் தனிநாடு வேண்டும் என்று கேட்டதில்லை. தங்களுக்கென்று ஒரு நாடு... ஏதோ ஒரு நாடு-அந்த நாட்டின் சட்டத்துக்குட்பட்ட பிரஜைகளாக இருந்து, வாழ்ந்து, மடிந்து போகவே இவர்கள் விரும்புகிறார்கள். மனித உரிமைகளைக் காட்டுமிராண்டித்தனமாக, காலம் காலமாகக் கற்பழித்துவரும் சிங்கள இனவாத அரசு, இந்த மலையகத் தமிழர்களைத் தன் நாட்டின் பிரஜைகளாகக் கருதவே மறுக்கிறது. அது மட்டுமல்ல, இவர்களைப் பற்றி அரசுப் பதிவேட்டில் குறிப்பிடும்போது "இந்திய வம்சாவளித் தமிழர்' என்ற சொற்பதத்தையே உத்தியோகபூர்வமாக உபயோகிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், இவர்கள் இந்தியாவில் இருந்து வந்த கூலிப் பட்டாளம்; இவர்களுக்கு இலங்கையில் எந்தவிதத் தேசிய உரிமையோ, சமத்துவமோ கிடையாது என்பதுதான். இந்த வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் சிங்களவர்கள் கூட வட இந்தியாவில் இருந்து ஓடிவந்து இலங்கையில் நுழைந்தவர்கள்தான். அவர்களுக்கு மட்டும் உரிமை; இவர்களுக்கு அது ஏன் இல்லை? இது ஒரு புறம் இருக்க, பரிதாபத்திற்குரிய இந்த மலையக மக்கள், இன்று "அகதிகள்' என்று பெயர் மாற்றம் பெற்று இருண்டு போன தங்கள் வாழ்க்கை, இழந்துவிட்ட தங்கள் மண், நொறுங்கிப் போன தங்கள் குடும்ப உறவுகள் பற்றிய கசப்பான நினைவுகளால் சூழப்பட்டு நடமாடும் பிணக் கூட்டமாய் நிற்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? எப்படி இது நேர்ந்தது? மலையக மக்களின் வரலாறு, இலங்கையில் காப்பிப் பயிர் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து துவங்குகிறது. 1823-ஆம் ஆண்டு கம்பளைக்கு அருகில் இருக்கும் சிங்கப்பிட்டி என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேர்ட் (Henry Bird) என்பவர் 14 தொழிலாளர்களை வரவழைத்து மிகவும் வெற்றிகரமான முறையில் காப்பிச் செடியைப் பயிர் செய்து, 600 பவுண்டுகள் நிகர லாபம் பெற்றார். இந்த வெற்றியானது இலங்கையின் மலைப்பகுதியை மாத்திரமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தையே அடியோடு மாற்றி அமைத்துவிட்டது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்களை வஞ்சகமான முறையில் வரவழைத்து ஒரு நவீன அடிமைச் சமுதாயத்தை இலங்கையில் உருவாக்கும் தொடக்கப்புள்ளி இந்தக் கட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது. மாபெரும் லாபம் தரும் பணப் பயிரான காப்பி, நவீன தொழில் நுட்பம் எதுவும் தேவை இல்லாத விவசாயத் தொழில் என்பதால், வெள்ளைக்காரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர் இத்தொழிலில். இதற்குத் தேவை இரண்டே விஷயம்தான். ஒன்று-காப்பி பயிரிடச் சாதகமான தட்பவெப்பச் சூழ்நிலை உள்ள பரந்த மலைச்சரிவுகள். இரண்டாவது-அந்த மலைச்சரிவுகளில் கடுமையாக உழைக்கக்கூடிய அடிமைக் கூட்டம். அன்று இந்தியா, இலங்கை இரண்டிலும் வெள்ளையர் ஆட்சி நிலவியதால், இலங்கையில் இடத்தையும், இந்திய மண்ணில் இருந்து கூலி அடிமைகளையும் வெள்ளைக்காரப் பெரு முதலாளிகளால் மிகச் சுலபமாகப் பெறமுடிந்தது. அத்துடன் ஆப்பிரிக்க மண்ணில் நீக்ரோ இன மக்களை அடிமையாக்கி, சுரண்டிக் கொழுத்த நீண்ட கால அனுபவம் வேறு இருந்ததால் இந்திய மக்களைச் சுரண்டுவதற்கு அவர்கள் அதிகம் சிரமப்படவில்லை. காப்பியும், தேயிலையும் இலங்கையின் பிரதான விளைபொருட்களாக மாறிய பிறகு, இந்தப் பெருந் தோட்ட முதலாளிகளுக்கு உதவிட 1800-ஆம் ஆண்டு ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, இலங்கை உள்ளூர்வாசிகள் 100 ஏக்கருக்கு மேல் காணி வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்றும், அதேசமயம் வெளிநாட்டுக்காரர்கள், குறிப்பாக ஐரோப்பியர்கள் 4000 ஏக்கருக்கு மேற்படாமல் காணி வைத்துக் கொள்ளவும் இச்சட்டம் வகை செய்தது. 1835-ஆம் ஆண்டு வெளியான கோல்புரூக் ஆணைக் குழுவின் சீர்திருத்தம் காப்பி உற்பத்தியாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. இவ்வாணைக்குழுவின் சிபாரிசினால் காப்பிப் பெருந்தோட்ட உற்பத்திக்கு அவசியமான சகல அரசியல் நிர்வாக மாற்றங்களும் செய்து முடிக்கப்பட்டன. முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகப் பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியது. சகல வரிகளும், சுங்கத் தீர்வைகளும் 12 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டன. காப்பிக்கான நிலம் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்பட்டது. அப்போது ஓர் ஏக்கருக்கு 5 ஷில்லிங் (ஏறக்குறைய 25 சதம்) மாத்திரமே. இதுகூடச் சர்வே சார்ஜ் (அளவைக் கட்டணம்) தான். காப்பிப் பெருந்தோட்ட முதலாளிகளுக்கு பல சலுகைகள் அளித்த பிறகு அடுத்த கட்டமாக அதற்குக் கூலி வேலை செய்ய அடிமைப்பட்டாளம் தேவைப்பட்டது. இந்த கட்டத்தில்தான் தமிழகத்து மண்ணின், மனிதர்களின் மனதை மாற்றி, அவர்களது மண்ணை மாற்றி, இலங்கை மண்ணுக்குக் கூட்டம் கூட்டமாக நயவஞ்சகமாக, பல்வேறு குயுக்தி வழிமுறைகளைக் கையாண்டு வெள்ளையர் அரசு அழைத்துச் சென்றது.நாளை: ஆங்கிலேயரின் நயவஞ்சகம்
கருத்துக்கள்

'முதலில் வந்தவன் பிடுங்கிக் கொள்கிறான்! அடுத்து வந்தவன் அடங்கிக் கிடக்கின்றான்! என்பதான நிலையில்தான் முதலில் குடியேறிய சிங்களவன் ஆட்சி செலுத்துகிறான். அடுத்து சென்ற (மலையகத்)தமிழர்கள் அடிமையாக இருக்கின்றார்கள். இவர்கள் மண்ணின் மைந்தர்களான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்திருந்தார்கள் எனில். தங்களுக்குரிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் என்றோ அடைந்திருப்பர்! 'வந்த நாடு சொந்த நாடாகுமா?' என்ற அறியாமையில் மூழ்கியதால் தாமும் அடிமைப்பட்டு ஈழத் தமிழர்கள் பேரழிவிற்கும் காரணமாக இருந்து விட்டனர்! இனியேனும் ஈழத் தமிழர்களுடன் இணைந்து போராடித் தமக்குரிய உரிமைகளைப் பெற்று உரிமைத் தமிழ் நிலத்தில் உயர்வுகளை அடையட்டும்! மலையகம் செழிக்கட்டும்! ஈழத் தமிழகம் மலரட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/1/2009 4:34:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக