சனி, 4 ஜூலை, 2009

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் "அம்பலம்'
தினமணி


தஞ்சாவூர், ஜூலை 3: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "அம்பலம்' என்னும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் அநீதிகளை வெளிப்படுத்துவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன் கூறியது: இன்றைய சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்டும் காணாமல் போகும் மனித சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் நிலை பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வியாண்டின் தொடக்க நாளான புதன்கிழமை (ஜூலை 1), இந்தப் பல்கலை.யின் முதல் துணைவேந்தரான மறைந்த வ.அய். சுப்பிரமணியத்தை நினைவு கூரும் வகையில், "அம்பலம்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. படிப்புடன், பாடத் திட்டத்துடன், பட்டத்துடன் சுயநலமின்றி வாழவும், ஊக்கப்படுத்தவும் தாங்கள் வாழும் பகுதியில் அகத்தில் நேர்மை, புறத்தில் தூய்மை, அறிவில் மேன்மை ஆகியவற்றைப் போற்றவும், காக்கவும், வளர்க்கவும், பின்பற்றவும், புறம்பானவற்றை நீக்கவும் இந்த அமைப்பின் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அநீதிகளுக்கு அடிபணியும் கட்டாயம் ஏற்படும் போது தட்டிக் கேட்கும் தகுதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதில் ஏற்படும் இடர்பாடுகளில் தமிழ்ப் பல்கலை. துணை நிற்கும். இந்த அமைப்பு மூலம் பல்கலைக்கழகக் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெறவும் உதவி செய்யப்படும். துணைவேந்தர் அலுவலகம் அருகில் தன்னெஞ்சறிவது என்ற வாசகத்துடன் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பல்கலை.யில் நிலவும் குறைகளைக் கடிதமாக எழுதிப் போடலாம். கைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பலாம். அனுப்பியவர் பற்றிய தகவல் ஏதும் இல்லாத கடிதமாக இருந்தாலும், அந்தக் கடிதத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டும். அதோடு, வெளியிடங்ளிலும் இந்த அமைப்பின் நோக்கத்தை பரப்புவதாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் உறுதியளித்துள்ளனர். அம்பலம் என்பது வெளிப்படையாக இருத்தல், எந்த ஒன்றையும் வெளிப்படுத்துதல், அதிகாரத்துடன் இருத்தல் ஆகும். இந்த மூன்றும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கமாகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் விருப்பப்படி அவரது அஸ்தி பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மரியாதை செய்யப்படுவதுடன், நிகழ் கல்வியாண்டில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உறுதி ஏற்று, கல்விப் பணியைத் தொடர உள்ளோம் என்றார் ராசேந்திரன்.
கருத்துக்கள்

அம்பலத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளைக் கமுக்கமாகத் தெரிவிக்க சரியான வழிமுறை. இதன் படி நடவடிக்கை எடுத்தாலும் இவ்வமைப்பு தொடர்ந்தாலும் உள்ளபடியே பாராட்டிற்குரியது. சோழ மன்னன் மணி அடிக்கச் செய்து குறைகளைக் கேட்டறிந்தான். இன்றைக்கு வெளிப்படையாகக் குறைகளைத் தெரிவித்தால் தெரிவித்தவர் என்ன ஆவார் என்று தெரியாது. எனவே, கமுக்கமாகத்தான் (இரகசியமாகத்தான்) தெரிவிக்க முடியும். இதை உணர்ந்து தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியனார் நினைவு நாளைக் கொண்டாடித் தொடங்கப்பட்டுள்ளதும் பொருத்தமான நிகழ்வாக உள்ளது. இதனைத் தமிழக அரசும் பின்பற்றலாம். ஆனால், பயன் இருக்காது. ஏனெனில் அரசிற்குத் தெரி்ந்தே பல முறைகேடுகள் அரங்கேறுகின்றன. அவ்வாறிருக்க குறைகளைக் களையாமல் , இன்னார் தெரிவித்து இருப்பார் என ஊகித்து அவரைப் பழிவாங்கும் போக்குதான் தொடரும். பல புதிய எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் துணைவேந்தர் எண்ணங்கள் எண்ணியாங்கு நிறைவேறட்டும்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 2:44:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக