திங்கள், 29 ஜூன், 2009

தமிழ் வழி மாணவர்களுக்கு தனியாக பரிசு வழங்க வலியுறுத்தல்



சென்னை, ஜூன்.28 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் குழுவின் மாநில அமைப்பாளர் செ.நா. ஜனார்த்தனன் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:
குழுவின் மாநில செயற்குழு கூட்டம் பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழை ஒரு பாடமாக எடுத்து சிறப்பிடம் பெறும் மாணவர்களை, அரசு பாராட்டி பரிசுகள் வழங்குகிறது. அதே நேரத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, அவர்களைத் தனியாகப் பிரித்து அவர்களுக்குப் பரிசு வழங்க வேண்டும்.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும். தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள் போதிய அளவுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களின் உயர் கல்வித் தகுதிக்கேற்ப ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசில் உள்ளது போல் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளை மாற்றம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்குப் பிரதிநிதித்துவம் தர வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே, பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

கருத்துக்கள்

தமிழ் வழி மாணாக்கர்களுக்கு மட்டுமே பரிசுகளும் சலுகைகளும் தந்தால் போதுமானது. அப்பொழுதுதான் தாய்மொழி வழிக் கல்வி தழைத்தோங்கும்! இளைஞர்கள் அறிவுத்துறையை ஆட்சி செய்வார்கள்! உலகத்தில் நம் நாடு உயர் நிலை அடையும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 4:34:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக