புதன், 21 ஆகஸ்ட், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை

22.8.2019 மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 24

‘கல்வி ‘ அதிகாரத்தின் சிறப்பு

அடுத்து வருவது ‘கல்வி’ என்னும் அதிகாரம். கல்விக்கு மிகுதியாகச் செலவழிக்கும் அரசே நல்லரசு என்பது அரசறிவியலாளர்கள் கூற்று. கல்வியில்லா நாட்டில்தான் கடுங்கோன்மை தழைக்கும். எனவேதான் அரசறிவியலாளர்கள் அரசியலில் கல்விக்கும் முதன்மை அளிக்கின்றனர். எனவேதான் திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலில் அரசின் தலைமையைக் கூறும் இறைமாட்சிக்கு அடுத்துக் கல்வியை அளித்துள்ளார். கல்வியின் இன்றையமையாமையை உணர்த்தவே, திருவள்ளுவர் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என நான்கு அதிகாரங்கள் மூலம் சிறப்பிக்கிறார்.
கல்வி என்பது எங்ஙனம் அரசறிவியல் ஆகும் எனச் சிலருக்கு ஐயம் வரலாம். அறிவியல் என்றாலே ஆய்வகம், கண்ணாடிக் குடுவைகள் முதலானவற்றுடன் மட்டும் தொடர்பு படுத்தக் கூடாது. எனவேதான் அரசியல் துறை சார்ந்த அறிவியலையும் அரசறிவியல் என்கின்றனர். அரசிற்கு அடிப்படையாகத் திட்டமிடவும் செயலாற்றவும் வழிகாட்டவும் கல்வியாளர்கள் தேவை. நாட்டு மக்கள் உயர்வு பெறவும் கல்வி தேவை. எனவே, கல்வி என்பது மக்களுக்கும் அரசிற்குமான அடிப்படைத் தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
“கல்வியாவது கல்வி ஆமாறும் அதனான் ஆகிய பயனும் கூறுதல். இது முதலாகப் பொருள் வரவு இயற்றும் திறங்கூறுகின்றார் ஆதலின், அஃது இயற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும்; அதனால் இது முன் கூறப்பட்டது.” என்கிறார் மணக்குடவர்.
பரிமேலழகர், “அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் , அவையாவன , அறநூலும் , நீதிநூலும் , யானை குதிரை தேர் படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின. அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கே அன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும் பொதுப்படக் கூறுகின்றார்.”  என விளக்குகிறார். முந்தைய இறைமாட்சி அதிகாரத்தில் கல்வி வற்புறுத்தப்பட்டதால் அடுத்துக் கல்வி வைக்கப்பட்டது எனவும் கூறுகிறார்.
கல்வி என்றால் தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான் என்கிறார் பேரா.சி.இலக்குவனார். “மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்றுமொழி வாயிலாகக் கற்றலை யன்று.” எனப் பயிற்றுமொழிக்காவலரான முனைவர் சி.இலக்குவனார் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிறார்.
அரசியலுக்கு அடிப்படையான கல்வி குறித்துத் திருவள்ளுவர் கூறுவனவற்றை அடுத்து நாம் அறிவோம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 21.08.2019

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்! - காணுரையுடன்





தாயகம்


‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!
கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் (Cap Maari) சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். (Kap Maari) என்று குறிக்கலாம்தானே. பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது பொதுவாக “முதல்வரை” ஆங்கிலத்தில் – Chief Minister என்பதைச் – சுருக்கமாகக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சொற்களாகும். நாட்டின் முதல்வரைக் குறிக்கும் சொல்லின் சுருக்க எழுத்துகளைக் கொண்டு கேப்மாரி என்னும் குற்றக் கும்பலின் பெயராகக் குறிப்பது தேதெடுத்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.
நடிகர்களுக்குத் தங்கள் பெயருடன் தாங்கள் நடித்த படத்தின் பெயர் என்ற முறையில் கெட்டவன், அயோக்கியன், பிச்சைக்காரன், கொலைகாரன் என்ற தீய பண்பினரைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துக் கொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அவ்வாறல்ல.
பொதுவாகச் சாதியைக் குறிப்பிடும் வசைச்சொல் எனில் எதிர்த்துப் போராட ஆட்கள் உள்ளனர். முதல்வரைக் குறிப்பதால் யாரையோ குறிக்கிறது என மக்கள் அமைதி காக்கின்றனர். ஆனால் இத்தகைய வசைச் சொல்லுடன் முதல்வரைக் குறிப்பது நாட்டு மக்களையே இழிவு படுத்துவதாகும்.
உலகத் தமிழர் பேரவையில், 'சி.எம் (எ) கேப்மாரி' பெயர் தடை கோரிக்கையை நேற்றைய ராஜகமலம் இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையில், ‘சி.எம் (எ) கேப்மாரி’ பெயர் தடை கோரிக்கையை நேற்றைய ராஜகமலம் இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நமக்கு படக்குழுவினர் யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாராட்டிற்குரிய திறமையான கலைஞர்கள்தாம் அவர்கள். அதனால்,‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும். இத்தகைய பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தால்தான், பண்பற்ற முறையில் படப்பெயர் வைக்கும் போக்கிற்கு இனியாவது முற்றுப்புள்ளி இடப்படும். இப்படி படத்திற்கு பெயர் வைப்பதே சுயவிளம்பரம் தானாக அமையயும் என்பதால்தான். எனவே, இப்பொழுதே அரசு காவல்துறை மூலம்நடவடிக்கை எடுக்குமா?
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
(இலக்குவனார் திருவள்ளுவனாரின் உள்ளீட்டோடு)

முதல்வர் பதவியை இழிவுபடுத்தும் 'கேப்மாரி' படக்குழுவைக் கைது செய்க - மாலைமுரசு





திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 23 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

23

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்இறைமாட்சி, குறள்எண்:390)
உழைக்க வாய்ப்பில்லாதவர்க்குக் கொடுத்தலும் யாவரிடமும் அருள் உள்ளத்துடன் நடந்து கொள்ளலும் செங்கோலாட்சி புரிதலும் மக்களைக் காத்தலும் ஆகிய செயலாற்றும் வேந்தன் பிறருக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்வான் என்கிறார் திருவள்ளுவர்.
புரூசி பியூனொ தெ மெசுகிட்டா (Bruce Bueno de Mesquita) என்னும் அரசறிவியல் கல்வியாளர் “நீ வல்லாட்சியராக(சர்வாதிகாரியாக) இருந்தால் எளிய மக்களின் நலவாழ்வு குறித்துக் கவலைப்பட வேண்டா” என்கிறார். அதன் மூலம் நலவாழ்வே  மக்களுக்கான நல்லாட்சி என்பதை உணர்த்துகிறார். திருவள்ளுவர் நல்லரசன் நலத்திட்டத்தில் கருத்து செலுத்த வேண்டும் என்பதை இக்குறள் மூலம் வலியுறுத்துகிறார்.
கொடை என்றால், தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல் என மணக்குடவர் விளக்குகிறார். அளித்தல் என்றால் தளர்ந்தவர்களிடத்துக் கொள்ளுங் கடமையை(வரி முதலியவற்றை)அவர்கள் தளர்ச்சிப் பார்த்து பிட்டு வைத்துப் பின் பெறுதல் என்கிறார். குடியோம்பல் என்றால் தளர்ந்த குடிக்கு இறை கழித்தல் என்கிறார்.
பேராசிரியர் இலக்குவனார் கொடுத்தல் என்பதற்குக் கலைஞர்களுக்குக் கொடுத்தல் என்கிறார். இப்பொழுது நலிந்த கலைஞர்களுக்குத் தரும் நலத்திட்ட உதவிகள் எடுத்துக்காட்டாகும்.
பரிமேலழகர், “அளி என்றால், தலையளி – அஃதாவது முகம் மலர்ந்து இனிய கூறல்” என்கிறார்.’ “ ‘குடி ஓம்பல்’ என எடுத்துக் கூறியமையால், தளர்ச்சி பெற்றாம். அஃதாவது, ஆறில் ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல் வேண்டின், அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின்இழத்தலும் ஆம்” என்கிறார்.
இவற்றிலிருந்து இப்பொழுது உள்ளதுபோல் தமிழ் மன்னர்கள் கடன், கடனுக்கான வட்டி, வரி முதலியவற்றில் தள்ளுபடிகள் வழங்கினாலும் தளர்ந்த நிலையில் தள்ளு படிகளைப் பெற்ற மக்கள் நல்ல நிலைக்கு வந்ததும் அவற்றைத் திருப்பித் தரும் தன்மதிப்பு நிலையில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. எனினும் பேரிடர்க்காலங்களிலும் திருப்பச் செலுத்த இயலா நிலையிலும் முழுத் தள்ளுபடியும் செய்துள்ளனர். 
ஒவ்வோர் அரசும் நல அரசாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அரசறிவியல் கூறும் இலக்கு. அவ்வாறு தமிழக அரசுகள் நல அரசுகளாக இருந்துள்ளன என இத் திருக்குறள் மூலமும் உரையாசிரியர்கள் விளக்கங்கள் மூலமும் தெரிகிறது.
வேந்தர்க்கு ஒளி என்பதற்குப் பரிதியாரும் காலிங்கரும் வேந்தர்களுள் சூரியன் என்று கூறுகின்றனர்.
மேலோட்டமாகப் பார்த்தால் இயல்பான கொடுத்தல் அளித்தலைக் கூறுவதுபோல் தோன்றும் இத்திருக்குறள், நல அரசை நடத்த ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறது. வேண்டுநருக்கு வேண்டுவனவற்றை இன்முகத்துடன் கொடுத்துச் செங்கோலாட்சியை அரசுகள்நடத்தட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 20.08.2019

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு

 அகரமுதல

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குக் 
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு
கம்பம். ஆக.19. கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறுவர் கதை நூலுக்கு, கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான சிறப்புப் பரிசினை வழங்கியுள்ளது. 
கடந்த 40 ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வரும் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 14 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி வருகிறது.

2018-ஆம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகளை வழங்கும் விழா, கம்பம் காந்தி பூங்காத் திடலில் கடந்த ஆடி 30 / ஆகத்து 15 மாலை நடைபெற்றது.
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் சோம.பாரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்க ஆசிரியர் சமசு, பதிப்பாளர் இரவி தமிழ்வாணன், ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன்ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
பரிசு பெற்ற படைப்பாளிகளையும் சிறப்பு விருந்தினர்களையும் நகரின் முதன்மை வீதிகள் வழியாக, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்து, விழா மேடையில் பரிசு வென்ற படைப்பாளிகளை அமர வைத்து, அவர்களுக்குப் பாரதி தலைப்பாகை சூடி, பின்னர் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்தப் புதுமையான விழா, 
படைப்பாளர்கள் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான முன் எடுத்துக்காட்டு விழாவாக அமைந்தது.

இந்த விழாவில், 2018-ஆம் ஆண்டு வெளியான சிறுவர் இலக்கிய நூல்களில் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சிறப்புப் பரிசினை ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன் வழங்கினார்.
விழாவில், ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன், ‘சிகரம்’ ஆசிரியர் பழ.அன்புநேசன், ‘புதுகைத் தென்றல்’ ஆசிரியர் புதுகை மு.தருமராசன், எழுத்தாளர்கள் வே.முத்துக்குமார், அண்டனூர் சுரா, ப.திருமலை ஆகியோரும் பாராட்டப் பெற்றனர்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி

 அகரமுதல

ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம்

வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) 
தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) 
முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி)
தலைப்பு : திராவிடம் – நேற்று, இன்று, நாளை – வழக்குரைஞர் இள.புகழேந்தி(திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) 
தலைப்பு: நிகழ்கால அரசியலில் பெரியாரின் தேவை – முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 
உரையாற்றுவோர்: அ.மு.சலீம் (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புதுச்சேரி),
இரா. இராசாங்கம் (செயலாளர், மா.பொ.க., புதுச்சேரி), 
தேவ. பொழிலன், முதன்மைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி) 
அ.கபிரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி),
அ.பசீர் அகமது (தலைவர், மனித நேய மக்கள் கட்சி, புதுச்சேரி), 
இரா.மங்கையர் செல்வன் (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி) 
கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்), 
இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி), 
வீர.இளங்கோவன் (மண்டலத் துணைத்தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி), 
அ.எழிலரசி (தலைவர், மகளிரணி, திராவிடர் கழகம், புதுச்சேரி), சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிடர் மகளிர் பாசறை, புதுச்சேரி), 
கு.இரஞ்சித்குமார் (பட்டயக் கணக்காயர், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), 
நெ.நடராசன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி),
கி.வ.இராசன் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)
மாலை 4.30 மணிக்கு இசை நிகழ்ச்சி: புதுவை கே.குமார் வழங்கும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி
நன்றியுரை: ஆ.சிவராசன் (அமைப்பாளர், உழவர்கரை நகராட்சி திராவிடர் கழகம்) 
* குறிப்பு: புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி அவர்களின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத்
தந்தை பெரியார் சிலைக்கு மாலை 4 மணிக்கு மாலை அணிவிக்கப்படும்.

அனைவரும் வருகவருக!

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 22 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 22

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்:389)
 குறைகூறப்படும் கசப்பான சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு உடைய ஆட்சியாளன் குடையின் கீழ் உலகம் தங்கும் என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியலாளர்கள், ஆட்சியாளர் மக்கள் குறைகளைப் பொறுமையுடன் கேட்க வேண்டும் என்கின்றனர். அதையே திருவள்ளுவர் நயத்துடன் தெரிவிக்கிறார்.
கைப்ப என்றால் கசக்கும் படியாக, அஃதாவது வெறுக்கும்படியாக.
சொல் என்பது பிறர் குறைகளையும் ஆட்சிக் குறைபாடுகளையும்பற்றிப் பேசுதல்
அனைவருக்குமே பிறர் அறிவுரை கசப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆட்சித்தலைவர் தம் நாட்டு மக்களின் குறைகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதுபோல், அமைச்சர் முதலானோர் தெரிவிக்கும் அறிவுரைகளையும் இடித்துரைக்கும் சொற்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படுவன வெறுப்பு ஏற்படுத்தும்படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால்தான் தெரிவிக்கப்படும் குறைகளை அகற்றி நல்லாட்சி தர இயலும்.
‘கவிகை’ என்றால் குடை. ஆட்சிக் குடையைக் குறிக்கிறது. செங்கோல் ஆட்சியில் மக்கள் வெம்மை – துன்பம், இன்றி வாழ்வர் என்பதால் ஆட்சியை வெண்கொற்றக்குடை எனச் சொல்வது தமிழர் மரபு.
குடை சூரியனின் கடும் வெம்மையிலிருந்து காத்து நிழல் தருவதுபோல், ஆட்சியாளரும் மக்களைத் துன்பத்திலிருந்து காத்து இன்ப நிழல் வழங்க வேண்டும் என்பது கருத்து.
பிறர் கூறும் இடித்துரைகளையும் குறையுரைகளையும் ஓர்ந்துணர்ந்து பின் செறுப்போரைச் செறுத்தும் பொறுப்போரைப் பொறுத்தும் ஒழுகுதல் வேண்டும் எனக் காலிங்கர் விளக்குகிறார்.
பொது நன்மையின் பொருட்டும் துன்பம் தரும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பிறர் கூறுவன கடுமையாக இருந்தாலும் வெறுக்கும் படி இருந்தாலும் அவற்றைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் நற்பண்பாளனுக்கு உலகம் கட்டுப்படும்.
குறையில்லா ஆட்சியை நடத்த வேண்டும் என்றால் பிறர் கூறும் குறைகளைப்பொறுமையுடன் கேட்கும் பண்பு வேண்டும். கேட்டபின்பு நடுநிலைமையுடன் ஆராய்ந்து, தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் புரிந்தவர்களைத் தண்டித்தும் மன்னிக்கப்பட வேண்டியவர்களை மன்னித்தும் களையப்பட வேண்டிய குறைகளைக் களைந்தும் குறை கூறியோர் மகிழும்படிச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இதுவே ஆட்சி முறைமைக்குத் திருவள்ளுவர் உணர்த்தும் செய்தி. மன்னராட்சி என்றில்லாமல் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வோருக்கு உரியது. பணிமேலாண்மையில் அமைப்பு, நிறுவனம் முதலானவற்றை நடத்தும் தலைவர்க்கும் இது பொருந்தும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 19.08.2019